கொஞ்சம் கவனம்... கொட்டும் கவர்ச்சி!: பழம் சாப்பிடுங்கள்; இதயம் சீராகும்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் கவர்ச்சி!: பழம் சாப்பிடுங்கள்; இதயம் சீராகும்!
PUBLISHED ON : செப் 17, 2017

தொடர்ந்து, 10 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். அதாவது, தினமும் குறைந்தபட்சம், 375 கிராம் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது, இதய நாளங்கள் தொடர்பான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.
எங்களுடைய நீரிழிவு ஆராய்ச்சி மையம், கனடா, சீனா, சுவீடன், பாகிஸ்தான் உட்பட, 18 நாடுகளுடன் இணைந்து, 10 ஆண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவு, சமீபத்தில் சர்வதேச மருத்துவ இதழான, 'லேன்செட்'டில் வெளியாகி உள்ளது.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள கிராமம், நகரம் என, இந்த ஆய்வை மேற்கொண்டோம். இதில், வறுமைக் கோட்டிற்கு கீழ், நடுத்தர, மேல்தட்டு மக்கள் என, அனைத்து தரப்பினரையும் பங்கு பெறச் செய்தோம். 35 முதல், 70 வயது வரை உள்ள, 1.35 லட்சம் பேர் இந்த ஆய்வில் பங்கு பெற்றனர்.
பூகோள அடிப்படையிலும் சரி, வாழ்க்கை முறை பழக்க, வழக்கங்களிலும் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருந்தது. தவிர, அவர்களின் குடும்ப பின்னணி, மரபு நோய்கள், தொடர்ந்து சாப்பிடும் மருந்துகள், உடற்பயிற்சி என, பிற விஷயங்களையும் கவனத்தில் கொண்டோம்.
ஆய்வின் முடிவில், தினமும், 375 கிராம் முதல், 500 கிராம் வரை காய்கறி, பழங்கள் சாப்பிட்டால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், மிக மிகக் குறைவு என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், வெள்ளைச் சர்க்கரை, இவற்றை தவிர்க்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகளில் கொழுப்பு, கலோரி மிகக் குறைவு. ரத்த அழுத்தத்தை சீராக்கும் பொட்டாசியம், ரத்த கொழுப்பைக் குறைக்கும் நார்ச்சத்து, தோலின் ஆரோக்கியம் மற்றும் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வைட்டமின்கள் - ஈ, சி, கண்களுக்கு அவசியமான வைட்டமின் - ஏ ஆகியவை பழங்களில் உள்ளன. இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் காய்கறி, பழங்கள் சாப்பிடும் பழக்கம் குறைவாகவே உள்ளது. பருப்புடன் சேர்த்து குறைந்தபட்சம், 375 கிராம் பழம், காய்கறிகள் தினமும் சாப்பிடுவது அவசியம்.
டாக்டர் வி.மோகன், தலைவர்,
டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் ஸ்பெஷலிஸ்ட்ஸ் சென்டர், சென்னை - 86.
drmohans@diabetes.ind.in

