கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பாதம் வளைந்தது, பாவம் அல்ல!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பாதம் வளைந்தது, பாவம் அல்ல!
PUBLISHED ON : பிப் 03, 2019

பிறக்கும் போதே, குழந்தை ஒரு காலோ அல்லது இரண்டு கால்களுமோ வளைந்து பிறக்கலாம். இதற்கு, மரபியல் அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை.
முதல் குழந்தை, கர்ப்பத்தில் இருக்கும் போது, கர்ப்பப்பை தசைகள் இறுக்கமாக இருப்பது உட்பட சில காரணங்களால், இது ஏற்படலாம் என்று யூகிக்க முடிகிறதே தவிர, வளைந்த பாதங்களுக்கான உறுதியான காரணத்தை சொல்ல முடியவில்லை.
இது போன்ற பிரச்னை, பெற்றோருக்கு இருந்தால், குழந்தைக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தைக்கு பாதங்கள் வளைந்து இருக்கிறதா என்பதை, கர்ப்பத்திலேயே கண்டறிய முடியும்.
குழந்தை பிறந்த அன்றே, தேவையான சிகிச்சையை துவக்கி, அறுவை சிகிச்சை இல்லாமல், மாவு கட்டு போட்டு, ஆறு வாரங்களுக்குள், சரி செய்து விடலாம்; இதனால், குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும்.
வளைந்த பாதங்களுடன் பிறப்பது, குழந்தை செய்த பாவம் என்று, கிராம மக்கள் நம்புகின்றனர்.
இதனாலேயே, மிக எளிதாக சரி செய்ய முடிகிற பிரச்னைக்கு, சிகிச்சை செய்யாமல் விட்டு விடுவர். குழந்தை வளர வளர, சராசரி குழந்தையைப் போல, ஓடியாடி விளையாட முடியாமல், பாதங்கள் உள்பக்கமாக வளைந்து இருக்கும். பாதத்தின் பக்கவாட்டை அழுத்தினால் தான், நிற்க முடியும்.
நம் அலட்சியம், கவனக் குறைவால், குழந்தையை, மாற்றுத் திறனாளி குழந்தையாக்கி விடுகிறோம். இதனால், அந்தக் குழந்தையின் எதிர்காலமே சவாலாகி விடும்.
குழந்தை பிறந்த, ஆறு மாதங்களுக்குள் சரி செய்து விடலாம். மூன்று வயதிற்கு மேல் என்றால், மாவுக் கட்டில் முயற்சி செய்து, சரியாகாத பட்சத்தில், அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்.
மூன்று மாதங்களுக்குள், 100 சதவீதமும்; ஒரு வயதிற்குள், 80 சதவீதமும் குணப்படுத்தலாம். குழந்தை பிறந்த உடனேயே, மகப்பேறு மருத்துவர்கள் கவனித்து சொன்னால், அலட்சியம் செய்யக் கூடாது.
பாதம் வளைந்த குழந்தை பிறப்பதற்கு, மருமகள் சரியில்லை; இவளால் தான் குழந்தை இப்படி பிறந்துள்ளது என்று குறை சொல்கின்றனரே தவிர, பிரச்னையை சரி செய்ய முயற்சிப்பதில்லை. வளைந்த பாதங்களுடன் குழந்தை பிறப்பதற்கும், தாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டாக்டர் ஆர். சங்கர், குழந்தைகள் எலும்பு, மூட்டு மருத்துவர், சென்னை.
செல்: 99635 82525 (நேரம்: மாலை 7.00-8.00)
