குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: குப்பையை சேர்த்தால் குண்டாகலாம்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: குப்பையை சேர்த்தால் குண்டாகலாம்!
PUBLISHED ON : பிப் 03, 2019

ஒரு கோலிக் குண்டை, மேஜையின் மேல் உருட்டி விட்டால், தடை இல்லாமல், ஓடி விடும். அதுவே, எண்ணெய் தடவிய மேஜையின் மேல் உருட்டினால், ஓடி, சிறிது துாரத்தில் நின்று விடும். பிரச்னை, கோலி குண்டோ, மேஜையோ இல்லை; மேஜை மேல் தடவியுள்ள எண்ணெய்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தும் போது, ரத்த நாளங்களின் உள் அடுக்கில், இதே போன்றே நடக்கும். எண்ணெய் அப்படியே படியாது. சில வேதி மாற்றங்கள் ஏற்பட்டு, லேசான தடிமனை ஏற்படுத்தும்.
இதனால், ரத்த நாளங்கள், நீர் உறிஞ்சிய பஞ்சைப் போல புடைத்து விடும். கொழுப்பு அதிகமாகி, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படுவதாக நினைப்பது தவறு.
சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களால் ஏற்படும் வேதி படிமங்களே, ரத்த நாள அடைப்பிற்கு காரணம். நல்ல கொழுப்பு மட்டுமல்ல; கால்சியம், ரத்த சிவப்பணுக்கள் என்று, அந்த வழியாகச் செல்லும் அனைத்தும் எளிதாக ஒட்டிக் கொள்ளும்.
சுத்திகரிக்கப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும், ரத்த நாளங்களில் அழிவை ஏற்படுத்துபவை.
சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களான, மைதா, வெள்ளை சர்க்கரை, சமையல் எண்ணெய் உட்பட அனைத்தையும் முற்றிலும் தவிர்த்து, இயற்கை உணவிற்கு மாற வேண்டும். காய்கறிகள், பழங்களை, முடிந்த வரை, சமைக்காமல் சாப்பிடலாம்.
பசிக்கும் நேரத்தில், இட்லி கொடுத்தால், சாப்பிட்டு விடலாம். பதிலாக, அரிசி, உளுந்து, கொடுத்து, 'இதிலிருந்து தான் இட்லி வருகிறது, இதையே சாப்பிடுங்கள்' என்றால், துாக்கி எறிந்து விடுவோம் தானே!
அதே போலத்தான், நம் உடம்பும். சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை, செரிமான மண்டலத்தால் பயன்படுத்த முடியாது.
நாம் தொடர்ந்து அதையே சாப்பிடும் போது, என்ன செய்வது என்று தெரியாமல், ஆங்காங்கே சேமித்து வைத்து விடும்.
உடல் பருமனுக்கான முக்கிய காரணமும் இது தான். அவசியம் இல்லாத பொருளை என்ன செய்வது என்று தெரியாமல், 'சரி, கொழுப்பாக மாற்றி வைக்கலாம்' என்று தொப்பை, இடுப்பு, கை, கால்களில் சேர்த்து வைத்து விடும்.
அதிகப்படியான கொழுப்பு படிந்து, கல்லீரல், சிறுநீரகங்கள் போன்று, கொழுப்பும் ஒரு உறுப்பாகி, வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யத் துவங்கி விடும்.
அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில், 70 சதவீதம் பேருக்கு, கல்லீரல் கொழுப்பு உள்ளது.
குறைவான அளவில் சாப்பிட்டாலும், சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதே இதற்கு முக்கிய காரணம்.
கொழுப்பு அவசியம்
நல்ல கொழுப்பு, நம் உடம்பிற்கு அவசியம். உடம்பில் உள்ள லட்சக்கணக்கான செல்களின் சுவர்கள், கொழுப்பினால் ஆனது. அல்சைமர் எனப்படும் மறதி நோய், தற்போது இளம் வயதினருக்கே வருகிறது.
கொழுப்பு இருந்தால், மாரடைப்பு வரும் என்று, கொழுப்பைக் குறைக்க சாப்பிடும் மாத்திரைகள், பாதிப்பிற்கு முக்கிய காரணம். தவிர, உணவிலும் முழுமையாக கொழுப்பைத் தவிர்த்து விடுகின்றனர். இது தவறு.
சரியான அளவில், நல்ல கொழுப்பு சாப்பிட வேண்டும். நல்ல கொழுப்பு தானே என்று, உடலுழைப்பு இல்லாமல் இருந்தால், கலோரி செலவாகாமல் அப்படியே தங்கி விடும்.
டாக்டர் டி.எஸ்.ஆர்.மோகன செல்வம்,
கான்செப்ட் வெல்னெஸ், சென்னை. செல்: 98411 75385
