தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - ருபெல்லா என்பது என்ன?

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - ருபெல்லா என்பது என்ன?

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - ருபெல்லா என்பது என்ன?


PUBLISHED ON : ஜன 01, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ருபெல்லா' என்பது என்ன?

லேசான சிவப்பு நிறத்தில் இருக்கும், 'ருபெல்லா' என்ற வைரஸ் கிருமியால் ஏற்படும் தொற்று நோய் இது. பாதிப்பு ஏற்பட்டால், தோலில், சிவப்பு நிறத் திட்டுக்கள் தோன்றும். இதற்கு, 'ஜெர்மன் மீசில்ஸ்' என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இந்தியாவில் இந்த தொற்று பாதிப்பு உள்ளதா?

கடந்த, 1814ல், இந்தியாவில் தான் இந்த கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில், இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை பலரும் அறிந்திருக்கவில்லை. காரணம், இதனால் ஏற்பட்ட வெளிப்படையான அறிகுறிகள் மிகவும் குறைவு.

இந்த கிருமியால் யாரெல்லாம் பாதிக்கப்படுவர்?

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை யாரை வேண்டு மானாலும் இந்த வைரஸ் தாக்கலாம். இது, காற்றின் மூலம் பரவக் கூடியது என்பதால், பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல், சளி வழியாக மற்றவர்களுக்கும் தொற்றும்.

தோலில் சிவப்பு திட்டுக்களாக பாதிப்பின் அறிகுறி இருந்தால், அவர்கள் மூலம் அதிகமாகப் பரவலாம். அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் வாயிலாகவும் பரவும் அபாயம் உள்ளது.

பாதிப்பு இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?

'ருபெல்லா' வைரஸ் பாதித்தால், லேசான காய்ச்சல் இருக்கும். கழுத்து, முகத்தில் தோன்றும் லேசான சிவப்பு நிறத் திட்டுக்கள், உடல் முழுவதும் பரவும். இது, நான்கு நாட்களில் சரியாகி விடும். கழுத்து, கன்னத்தில் நெறி கட்டலாம். அயர்ச்சியாக, வாந்தி வரும் உணர்வும் இருக்கும். பல நேரங்களில், எந்த வித மருந்தும் தேவை இருக்காது; தானாகவே சரியாகி விடும். பக்க விளைவுகள் எதுவும் வராது.

'ருபெல்லா' குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்?

கர்ப்பிணியை இந்த வைரஸ் பாதித்தால், கருவில் வளரும் குழந்தைக்கு பிரச்னை ஏற்படும். கருவிலேயே குழந்தையின் வளர்ச்சி பாதிக்கலாம்; கருவின் உள் உறுப்புக்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

பாதிப்பின் தன்மையை பொறுத்து, பிறவிக் கோளாறுகளுடன் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்; குறை பிரசவமோ, கரு சிதைவோ தாய்க்கு ஏற்படலாம்.

பிரதான பிறவிக் கோளாறுகள் எவை?

பார்வை இழப்பை ஏற்படுத்தும், 'கேட்ராக்ட்' எனப்படும் கண்புரை, காது கேளாமை, மனநல குறைபாடுகள், இதய, கல்லீரல் கோளாறுகள், வாழ்க்கை முழுவதும் இன்சுலின் ஊசியை சார்ந்து இருக்க வேண்டிய, 'டைப் - 1' நீரிழிவு கோளாறு என்று, பல பிறவிக் குறைபாடுகள் வரலாம்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், தாய்க்கு இந்தத் தொற்று ஏற்பட்டால், 60 - 75 சதவீத குழந்தைகள், பிறவி காது கேளாமை பிரச்னையுடன் பிறக்கும்.

மேலும், 50 - 90 சதவீத குழந்தைகளுக்கு, பார்வை குறைபாடுகள் இருக்கும். 40 - 50 சதவீத குழந்தைகளுக்கு இதய கோளாறுகள் வரலாம்.

தொற்றை குணப்படுத்த முடியுமா?

வாய்ப்பில்லை. தடுப்பு நடவடிக்கை மட்டுமே பாதிப்பிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. 11 - 15 வயது வரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும், 'ருபெல்லா' தடுப்பூசி போட வேண்டும்.

அதே போல, பெண் குழந்தைகளுக்கு, 15 - 44 வயதிற்கு இடையில் ஒரு, 'பூஸ்டர் டோஸ்' போட வேண்டும். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், பெண்களுக்கு இந்த தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற விதி உள்ளது.

பச்சிளங் குழந்தைகள் இறப்பை தடுக்கும் விதமாக, பிறந்த ஓராண்டில், குறிப்பிட்ட இடைவெளியில், மூன்று முறை, இந்த தடுப்பு மருந்து தரப்படுகிறது. இது தவிர, பெண் குழந்தைக்கு, 15வது வயதில், ஒரு பூஸ்டர் டோஸ் தர வேண்டியதும் முக்கியம்.

குழந்தைப் பருவத்தில் போடாதவர்கள், 20 வயதிற்கு முன், ஒரு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 2020ம் ஆண்டு இறுதிக்குள், இந்தியா முழுவதும், 11 - 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 15 - 44 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும், எல்லா பெண்களுக்கும், 'ருபெல்லா' தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசி யாருக்கு போடக் கூடாது?

கர்ப்பிணிகள், 1 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கேன்சர் நோயாளிகள் தடுப்பூசியை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான பெண்கள், தடுப்பூசி போட்ட ஒரு மாதத்திற்குள் கர்ப்பம் அடைவதை தவிர்க்க வேண்டியதும் முக்கியம். ஊசி போட்டதிலிருந்து, அடுத்த, 15 ஆண்டுகளுக்கு, 'ருபெல்லா' வைரசிடமிருந்து பாதுகாக்கும்.

தடுப்பூசி எங்கு போடலாம்?

அரசு மருத்துவமனைகளில், கிண்டியில் உள்ள, 'கிங் இன்ஸ்டி டியூட்'டில் இலவசமாக போடப்படுகிறது. தனியார் மருத்துவர்களிடமும் போட்டுக் கொள்ளலாம். தடுப்பு மருந்தின் விலை, 100 ரூபாய்க்கும் குறைவு.

டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ்

மகப்பேறு மருத்துவர், சென்னை.

99406 66793

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us