தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இன்று புதிதாய் பிறந்தோம்!

இன்று புதிதாய் பிறந்தோம்!

இன்று புதிதாய் பிறந்தோம்!


PUBLISHED ON : டிச 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 31, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோல், முடி, நகம் சார்ந்த நோய்களையும், அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள, இவை இயற்கையால் எவ்வாறு உருவாகி உள்ளது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

உடலின் மற்ற திசுக்கள், ஒரே வகையான செல் அமைப்பையும், பணியையும் செய்யும் தன்மையுடையவை. தோல், பல்வேறு வகையான செல் அமைப்புகளை கொண்டு, பல்வேறு வகையான பணிகளையும் செய்வது, இயற்கை அளித்துள்ள கொடை.

உடல் முழுவதும் ரோமத்தால் மூடப்பட்டிருந்த தோல், பரிணாம மாற்றத்தில் உதிர்ந்து, உள்ளங்கை, உள்ளங்கால், உட்புறத் தோல் போன்ற இடங்களில் ரோமம் இல்லாத தோல் ஆகவும், மற்ற இடங்களில் ரோமம் உள்ள தோல் ஆகவும், இரு வகைகளாக உள்ளன.

சீனப் பெருஞ்சுவர் போன்று, தோலும் நம்மை காக்கும் அரண். பல அடுக்குகள் கொண்ட தோலின் இரு முக்கிய பிரிவுகள், மேல் தோல் அடுக்கு - எப்பிடெர்மிஸ் மற்றும் அடி தோல் அடுக்கு - டெர்மிஸ்.

ஒரு நிமிடத்திற்கு, 10 முறை துடிக்க வசதியாக இருக்கும் வண்ணம், கண் இமைகளில் மிக மெலிதாகவும், கடினமான பல பணிகளை ஓய்வின்றி செய்வதற்காக, உள்ளங்கைகளிலும், பாதங்களிலும் மிக கனமாகவும், இருக்கும் பகுதிக்கேற்ப, மேல் தோல் அடுக்கு அமைந்துள்ளது.

இது, 95 சதவீதம், 'கெரட்டீன்' என்ற புரதத்தாலான, 'கெரட்டினோசைட்' செல்களாலும், 5 சதவீதம், 'மெலனோசைட்' என்ற நிறமி செல், 'லாங்கர்ஹான்' என்ற நோய் எதிர்ப்பு செல் மற்றும் 'மெர்க்கெல்' என்ற உணர்வூட்டும் செல் என, பல வகை செல்களால் ஆனது.

அடித்தட்டில் உருவான கெரட்டீன் செல்கள், மேல் தட்டுகளுக்குச் செல்ல செல்ல, மெல்ல மெல்ல உருமாறி மாற்றங்கள் அடைந்து, உயிரற்ற செதில்களாகி, தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வளர்சிதை மாற்றம் ஏறத்தாழ, 40 முதல், 55 நாட்கள் வரை நீடிக்கிறது.

தோலாடை தினமும், புதிதாக நெய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எனவே, ஒவ்வொரு நாளும், இந்த நாள் புதிது என்பது போல், நம் தோலும் புதிது.

மேல் தோல் அடுக்கின் அடித்தட்டில், 36 கெரட்டீன் செல்களுக்கு, ஒரு நிறமிச் செல் என, மிக கவனமாக இயற்கை பகிர்ந்தளித்துள்ளது. தோலின் நிறம் கறுப்பதும், வெளுப்பதும், நிறமி செல்களுக்குள் உள்ள நிறமி குமிழ்கள், நிறமி உற்பத்தி, நிறமி பரவல் மற்றும் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர் தாக்கம் இவை சார்ந்தவையே.

நோய் எதிர்ப்பு செல்கள் ஏறத்தாழ, 460 முதல், 1,000 சதுர மி.மீ.,க்கு ஒன்று உள்ளது. இது, புறச் சூழலில் உள்ள மாசு, கிருமி போன்ற எந்த ஒரு எதிரியையும், நம்மை அண்ட விடாமல் காக்கிறது.

அடித்தோல் அடுக்கு, மேல் தோல் அடுக்கின் நான்கு தட்டுகளையும் தாங்கி, துணை நிற்கும் வண்ணம், கற்களை பிணைக்கும் சுண்ணாம்புக் கலவை போல், செல்களை பிணைக்கும் இணைப்பு திசு கலவையால் ஆனது.

அடி தோல் அடுக்கின் மேல் பகுதி நுண் காம்பு - பாப்பிலரி வடிவிலும், கீழ் பகுதி நுண் வலை - ரெட்டிகுலர் வடிவிலும், கட்டட அமைப்பிற்கு கம்பிக் கட்டு அமைப்பு உறுதி செய்வது போல் உறுதுணையாக அமைந்துள்ளது, இயற்கையின் இன்னுமொரு அதிசயம்.

தோல் உறுதியாகவும் அதே சமயம், மூட்டுகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு ஏற்ப, எந்நேரமும் மிக லாவகமாக வளைந்து கொடுக்கும் வண்ணம், கொலாஜன், எலாஸ்டின் போன்ற சிறப்பு புரதங்கள், இந்த அடித்தோல் அடுக்கில் உள்ளது.

மேலும், தோலில் துவங்கும் உணர்வை, மூளைக்கு எடுத்துச் செல்லும் சிறு நரம்பு முடிச்சு, குருதி நாளங்கள், நிண நீர் நாளங்கள், தசைகள், வியர்வை சுரப்பிகள், பாலியல் வியர்வை சுரப்பிகள் உட்பட, ரோம வேர்க் கால்கள், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் நகத்தின் நுனி, இவை அனைத்தும், அடித் தோல் அடுக்கின் அங்கங்கள் தான்.

இவை மட்டுமல்லாமல், காயங்களை ஆற்றும் நார் செல் - பைப்ரோசைட், அரிப்புணர்வை தூண்டி தோலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தலைமை செல் - மாஸ்ட் செல் என, சிறப்பு செல்களையும் தன்னுள் கொண்டுள்ளது அடித்தோல் அடுக்கு.

தோல் சார்ந்த உப உறுப்புகளான முடி, நகம் கட்டமைப்பு பற்றி, அடுத்த அத்தியாயத்தில் அறியலாம்.



டாக்டர் முருகு சுந்தரம்,

தோல் மருத்துவர், சென்னை

93811 22225, 93813 22234

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us