தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/'நோ டச்' - தொடுதலே வேண்டாமே... கற்றுக் கொடுங்கள்!

'நோ டச்' - தொடுதலே வேண்டாமே... கற்றுக் கொடுங்கள்!

'நோ டச்' - தொடுதலே வேண்டாமே... கற்றுக் கொடுங்கள்!


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளிடம், பாலியல் வன்முறையில் ஈடுபடுவது என்பது, வக்கிரத்தன் உச்ச நிலை. இது, சமீப ஆண்டுகளில் அதிகமாகி வருகிறது. ஆண்கள் மட்டுமே, குழந்தைகளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்கின்றனர் என்று நினைப்பது தவறு; பெண்களும், இந்த வக்கிர செயல்களில் ஈடுபடுகின்றனர். பதினெட்டு வயதிற்கு கீழ் இருக்கும் எந்த நபருக்கும், பாலியல் தொடர்பான தெளிவான புரிதல் இருக்காது; எனவே, அவர்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் அனைத்தும், பாலியல் வன்கொடுமை தான்.

பாலியல் ரீதியாக குழந்தைகளை படம் எடுப்பதே, பெரிய குற்றம் என்று, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், 'போக்சோ'வில், சொல்லப்பட்டு உள்ளது.குழந்தைகளை வைத்து எடுக்கப்படும், 'சைல்ட் போர்னோகிராபி' என்று சொல்லப்படும், பாலுணர்வை துாண்டக்கூடிய, குழந்தைகளின் நிர்வாணப் படங்கள் அதிகமாகி வருகின்றன. இதுபோன்ற படங்கள் எடுப்பதற்கு எதிராக, ஐரோப்பா, அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகள், தடைகள் இருப்பதால், தெற்காசிய நாடுகளில் இருந்தே, அதிகளவில் வெளி வருவதாகக் கூறப்படுகிறது.

குழு மனப்பான்மை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தனி நபர்கள், தங்களுக்குள், 'நெட்வொர்க்'கை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதன் விளைவே, பலர் சேர்ந்து, ஒரு குழந்தையின் மேல் பாலியல் பலாத்காரம் செய்தனர், வன்முறையில் ஈடுபட்டனர் என்ற செய்திகளை அவ்வப்போது படிக்கிறோம்.குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்து கொள்வதால், தனிமையில் இருக்கும் குழந்தையிடம், குழுவாக பாலியல் வன்முறையை பிரயோகித்து, அந்தக் குழந்தையை கஷ்டப்படுத்துகின்றனர்.

இந்தக் குழுவில் இருப்பவர்கள், தங்கள் குழு உறுப்பினர்களைத் தவிர, வேறு யாரிடமும் இது தொடர்பான தகவல்கள், படங்கள், 'வீடியோ'க்களை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.சாதாரணமாக இவர்களைப் பார்த்தால், இப்படி ஒரு வக்கிர புத்தி இவர்களுக்குள் இருப்பதை, நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது; எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது; சந்தேகப்படக் கூட மாட்டோம்.

தனி நபர்கள்

'குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று, தங்களுடன் வைத்துக் கொள்வது, சில அம்மாக்கள், 'குழந்தையை பார்த்துக்கோங்க... கடைக்கு போயிட்டு வந்திடுறேன்' என்றுவிட்டுச் செல்வது, சில நேரங்களில், அந்தக் குடும்பத்தோடு நெருக்கத்தை ஏற்படுத்தி, நம்பகமாக நடந்து கொள்வது போன்ற, தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில், தனி நபர்கள் இது போன்ற வக்கிரத்தில் ஈடுபடுகின்றனர்.

நல்ல சூழலில் வளர்ந்த எந்த நபரும், இதைச் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. மற்றவர்களிடம் அதிகம் பேசி பழகாதவர்கள், தங்களின் வயதிற்கு தகுந்த, ஏற்ற நபர்களுடன் தாம்பத்திய உறவு ஏற்படாதவர்கள், உடல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்கள், தங்களை குழந்தையாகவே நினைப்பவர்கள், குழந்தைகளுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவர். குழந்தைகளுடன் தனிமையில் இருக்கும் போது தான், இவர்களின் சுயரூபம் வெளிப்படும்.

அவசியம் இல்லை

தங்களுக்கு என்ன நடக்கிறது என்பது, குழந்தைகளுக்கு தெரியாது. பள்ளிகளில், 'குட் டச்' - நல்ல தொடுதல், 'பேட் டச்' - மோசமான தொடுதல் கற்றுத் தருகின்றனர். ஆனால், ஐந்தாறு வயது குழந்தைக்கு, இதெல்லாம் குட் டச், பேட் டச் என்று உணர்ந்து, பகுத்தறியும் திறன், பக்குவம் இருக்காது; தொடுதலே தேவை இல்லை - 'நோ - டச்' என்பது தான் சரி.குழந்தையின் கன்னத்தில் தொடும் போது, முத்தம் கொடுக்கத் தோன்றும். அதன்பின், மடியில் துாக்கி வைத்துக் கொள்ளத் தோன்றும். வக்கிர புத்தி இருந்தால், அடுத்தடுத்த நிலைகளுக்கு போய் கொண்டிருப்பர்.

அதனால், ஆரம்பத்திலேயே, 'என்னை தொடாமல் கொஞ்சுங்கள்... தொடாமல் பேசுங்கள்... என்னை தொட்டால் பிடிக்காது... தொட விடக்கூடாது என, அப்பா, அம்மா சொல்லியிருக்காங்க...' என்று, ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் சொல்ல, குழந்தையை பழக்க வேண்டும். முழுமையான தடுப்பு முறைகளை, குழந்தைகளுக்கு கற்றுத் தருவதே சரி.

மன நிலை

இது போன்ற சம்பவத்தை எதிர்கொள்ளும் குழந்தையின் அறிவுத் திறன், மனநிலையில் பாதிப்பு வரும். வக்கிர செயலில் ஈடுபடும் நபர்கள், நடந்ததை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வைப்பர்.

குழந்தை யாரைப் பார்த்தாவது பயப்படுகிறது என்றாலே, அந்த நபரால் குழந்தைக்கு பாதிப்பு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் வர வேண்டும். குழந்தைகள் நம்மிடம் நேரடியாக செல்லாவிட்டாலும், மற்றவர்கள் முன்னிலையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து, ஒரு சில கணிப்புகளை செய்யலாம்.

பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் குழந்தை, குறிப்பிட்ட நபர் வந்ததும் பயந்து, அப்பா, அம்மாவிடம் ஓடி வந்தால், குழந்தை ஒரு பாதுகாப்பிற்காக வருகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.குழந்தைகளின், 'டிரெஸ்' கசங்கி இருப்பது போன்ற, வெளியில் தெரியும் அறிகுறிகளையும், கவனமாக பார்க்க வேண்டும். சில நேரங்களில், பெற்றோர் கவனிக்க தவறியதை, குழந்தையின் உடன் இருக்கும் பிற குழந்தைகள் கவனித்தும் சொல்வதுண்டு.

அம்மாக்கள் தான், இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், பெரும்பாலான நேரங்களில், இதுபோன்ற வக்கிரங்களை செய்பவர்கள், நெருங்கிய குடும்ப நபர்கள், தெரிந்தவர்கள், நெருங்கிய, மிக நெருங்கிய உறவுகள் தான். 'நான் துாக்கிட்டு போய் விளையாடுகிறேன்' என்று, எவ்வளவு நெருங்கிய நபர் கேட்டாலும், அனுமதிக்கவே கூடாது. 'என் கண் பார்வையிலேயே இருக்கட்டும்' என்று சொல்லிவிட வேண்டும்.

விளைவுகள்

இதுபோன்ற வக்கிர அனுபவங்களை கடந்து வரும் குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாகி, தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலை வந்த பிறகும், பயம் அவர்களை விட்டு போகாது.அவர்கள் மேல் வன்முறையை பிரயோகித்த நபரின் சாயலில் யாரைப் பார்த்தாலும், பயம் வரும். இவர்களின் தாம்பத்தியம் பாதிக்கப்படும். மற்றவர்கள் தொடுவதை விரும்ப மாட்டார்கள். தங்களுக்கு பிறந்த குழந்தைகளையே தொட பிடிக்காது.

குழந்தைகள், தாயின் அன்புக்காக ஏங்கும். இப்படி அடுத்த தலைமுறையையே பாதிக்கக் கூடிய மோசமான விஷயம், குழந்தைகளின் மேல் பிரயோகிக்கும் பாலியல் அத்து மீறல்கள்.தன் குழந்தைக்கு நடந்ததை வெளியில் சொன்னால், அவமானம் என்று பயந்து, அமைதியாக இருப்பது, இது போன்ற நபர்களை உற்சாகப்படுத்தும்; குழந்தைகளிடம், பாலியல் செயல்களில் ஈடுபடுவது தவறில்லை என்ற எண்ணத்தை தந்து விடும். குழந்தைகளின் மேல், பாலியல் வன்கொடுமையை துாண்டும் எந்த சூழ்நிலையையும், சகித்துக் கொள்ளவே கூடாது.

டாக்டர் ரவி சாமுவேல்,

மனநல ஆலோசகர்,

சென்னை

044 - 2433 7439

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us