கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நம்பிக்கையை மாற்றிய கூகுள் டாக்டர்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - நம்பிக்கையை மாற்றிய கூகுள் டாக்டர்!
PUBLISHED ON : ஆக 11, 2019

ஐ.டி., துறையில் வேலை செய்யும், 20 வயது பெண் மார்பகத்தில் கட்டி இருப்பதாக சொல்லி, என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். பார்த்தவுடன் அது சாதாரண கட்டி என்று தெரிந்தது. கட்டியின் அளவு, ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக, 'அல்ட்ரா சவுண்டு' செய்யச் சொன்னேன்.
கட்டியின் அளவு, 3 செ.மீ.,க்கும் குறைவாகவே இருந்தது. 5 செ.மீ.,க்கு மேல் இருந்தால் தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். கவலைப்பட வேண்டாம் என்று சொன்னதும், 'கரெக்ட் மேடம், நான் ஏற்கனவே, 'நெட்'டில் படித்து விட்டு தான் வந்தேன். அதில் இருப்பதையே தான் நீங்களும் சொல்கிறீர்கள்' என்றாள்.
எனக்கு தேர்வு வைத்ததற்கு நன்றி மகளே என்று சிரித்தேன். என், 30 ஆண்டு மருத்துவ அனுபவத்தில், இணையதளம் வந்தபின், ஒவ்வொரு நாளும் எனக்கு தேர்வு வைக்கின்றனர்.
இணையதளத்தில் விபரமாக படித்து விட்டு, விமானம் ஓட்ட யாரையும் அனுமதிப்பதில்லை; நடைமுறையில் சாத்தியமில்லை என்பது தெரியும்.
ஆனால், இணையதளத்தில படித்து, நமக்கு எல்லாம் தெரியும்; டாக்டருக்கு தெரிகிறதா பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் வருபவர்கள் அதிகரித்து விட்டனர். மருத்துவத் துறையில் மட்டுமே, இது போன்று நடக்கிறது.
இது, ஆரோக்கியமானது இல்லை. உங்கள் டாக்டரை நம்புங்கள். கூகுளில் சென்று பார்ப்பதால் தான், டாக்டரின் ஆலோசனை இல்லாமல், ஆண்டிற்கு ஒரு முறை, எந்த உடல் பிரச்னையும் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும், மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல், தாங்களாகவே, முழு உடல் பரிசோதனை செய்வது அதிகமாகிவிட்டது.
பரிசோதனை கூடங்களுக்கு வருமானம் அதிகரிப்பதைத் தவிர, எந்த பலனும் இதனால் இல்லை.
அவசியம் என்று டாக்டர் சென்னால், ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து, பிரச்னையை தெரிந்து அதன்பின், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றினால் போதுமானது.
நிறைய பரிசோதனைக் கூடங்கள், 'பேக்கேஜ்' என்ற பெயரில், இத்தனை பரிசோதனைகள் செய்தால், இவ்வளவு செலவாகும், உலகத்தில் உள்ள எல்லா நவீன பரிசோதனைகளையும் நாங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் செய்கிறோம்; குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இந்த சலுகை, என்று விளம்பரம் செய்கின்றனர்.
பெரும்பாலும், இவற்றில் தேவையில்லாத பல டெஸ்டுகள் இருக்கும்.
தலையில் இருந்து கால் வரையிலும், ஒவ்வொரு முறையும், 'எக்ஸ் - ரே, ஸ்கேன்' என்று செய்யும் சோதனைகள், தேவையில்லாத கதிரியக்கத்தை உடலில் அனுமதிக்கவே செய்யும். மேமோகிராமும் ஒவ்வொரு ஆண்டும் செய்யக் கூடாது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தால் போதும். இதிலும், கதிரியக்க அபாயம் உள்ளது.
பரிசோதனை முடிவுகள் என்று அவர்கள் தரும் ரிப்போர்ட்டில், புரதம், சர்க்கரை, வைட்டமின் டி, கொழுப்பு என்று ஒவ்வொன்றும், எந்த அளவில் இருக்க வேண்டும், உங்களுக்கு எவ்வளவு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருப்பர்.
அதைப் பார்த்ததும், நமக்கு இவையெல்லாம் குறைவாக இருக்கிறதே, இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும், அதிகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று இணையதளத்தில் படித்து, மருத்துவ ஆலோசனைக்கு வருவர்; அவர்கள் படித்த விபரத்தை தான் டாக்டர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பர்.
அவரவரின் உடல் அமைப்பு, தேவைக்கு ஏற்ப, உடல் சத்துக்களின் அளவு இருக்கும். இதய நோயாளி என்றால், குறிப்பிட்ட அளவில், சத்துக்கள் இருக்க வேண்டும். மாரடைப்பு வந்தவர்களுக்கு வேறு மாதிரி, வராதவர்களுக்கு வேறு என்று, நபருக்கு நபர் சத்துக்களின் அளவு வேறுபடும்.
தாங்களாகவே பரிசோதனை செய்தாலும், முடிவுகளை, துறை சார்ந்த மருத்துவர் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.
வயிற்று வலி என்று ஒருவர் வருகிறார்; அல்ட்ரா சவுண்டு செய்கிறேன். பிரச்னை இருப்பது தெரியவில்லை என்றால், சி.டி., ஸ்கேன் செய்து தான் ஆக வேண்டும்.
ஒரு பரிசோதனையில் உறுதி செய்ய முடியாவிட்டால், அதைவிடவும் துல்லியமான, அதற்கடுத்த நிலையில் உள்ள வேறு ஒன்றை செய்து தானே ஆக வேண்டும், சமயங்களில், சிறுநீரகக் கல் பிரச்னை இருந்தால், நோயாளியைப் பரிசோதிக்கும் போதே, அல்ட்ரா சவுண்டு எடுத்து பலன் இல்லை என்று தெரிந்த விடும்; சி.டி., ஸ்கேன் எடுத்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
சிறுநீரகக் கல் பிரச்னையும் சில நேரங்களில் முதல் பரிசோதனையிலேயே தெரிந்து விடும்.
அல்ட்ரா சவுண்டு செய்து, கல் தெரியவில்லை என்றால், மருந்து சாப்பிடுங்கள். வலி குறையாவிட்டால் பார்க்கலாம் என்று அனுப்பினால், வேறு டாக்டரிடம் செல்வர்; அவர், நேரடியாக சி.டி., ஸ்கேனில் கண்டுபிடித்துவிட்டால், முதலில் சென்ற டாக்டருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பர்.
உங்கள் டாக்டரை நம்புங்கள். பணம் மட்டுமே குறிக்கோளாகக் வைத்து அனைவரும் செயல்படுவதில்லை. கூகுள் டாக்டர் வந்தபின், டாக்டரைப் பற்றிய அபிப்ராயமே மாறிவிட்டது.
டாக்டர் ஜெய் சித்ரா சுரேஷ், பொதுநல மருத்துவர், சிம்ஸ், சென்னை. 98400 56946
