தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அதிக செலவு வைக்கும் அமெரிக்க மருத்துவ முறை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அதிக செலவு வைக்கும் அமெரிக்க மருத்துவ முறை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அதிக செலவு வைக்கும் அமெரிக்க மருத்துவ முறை!


PUBLISHED ON : டிச 15, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொருளாதார வசதியில் பின்தங்கியவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில், சேவை மனப்பான்மையுடன் செயல்படும் திறமையான டாக்டர்கள், உயர்தர நவீன மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே, 'வாலன்டரி ஹெல்த் சர்வீஸ்' - வீ.எச்.எஸ்., மையத்தின் நோக்கம். கடந்த, 42 ஆண்டுகளாக இங்கு பணி செய்கிறேன்.

மற்ற கார்ப்பரேட் மருத்துவமனைகளில், சிறப்பு மருத்துவ கட்டணத்தில், 10ல் ஒரு பங்கு தான் வாங்குகிறோம்.

கார்ப்பரேட் மருத்துவமனையில், மாதம் பல லட்சங்களில் சம்பளம் வாங்கும் சிறப்பு டாக்டர்கள் கூட, இங்கு சேவை மனப்பான்மையுடன் தான் சிகிச்சை செய்கின்றனர்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால், சேவை மனப்பான்மை போய் விடும்.

மருத்துவம், கல்வி போன்ற துறைகள், சேவையின் அடிப்படையில் செயல்பட வேண்டியவை.

மருத்துவம் படிப்பதற்கே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இடம் வாங்கினால், போட்ட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். இந்த சூழலில், சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும்?

இந்த மையத்தில், இத்தனை ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்யும் டாக்டருக்கு, கட்டணம் எதுவும் கிடையாது.

நிர்வாக சிக்கல்கள் இருப்பதால், குறைந்த அளவு கட்டணம் வாங்கலாம் என, சமீபத்தில் முடிவு செய்துள்ளோம்.

கார்ப்பரேட் மருத்துவமனையில் கட்டணம் அதிகம் இருப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ கருவிகள் என்று கோடிக்கணக்கில் முதலீடு செய்து வைத்திருக்கின்றனர்.

பரிசோதனை

லாபம் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில், பரிசோதனையின் அடிப்படையிலேயே சிகிச்சை செய்வது என்பது, அவர்களின் தவிர்க்க முடியாத தேவையாகி விட்டது. இது, அமெரிக்க மருத்துவ முறை; இதையே இங்கும் பின்பற்றுகின்றனர்.

நோயாளியை பார்த்து, அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை செய்வது இந்திய மருத்துவ முறை. ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாக எல்லாம் மாறி விட்டது.

அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை தரும் டாக்டரை, பெரும்பாலும் பொதுமக்கள் நம்புவதில்லை.

நோயாளியை பார்த்து, 'உங்களுக்கு ஒன்றும் இல்லை... அடுத்த மூன்று நாட்களுக்கு பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டாலே போதும்' என்று சொன்னால், 'என்ன டாக்டர் இவர்... ஒரு டெஸ்ட்டும் செய்யவில்லை... டாக்டருக்கு படிச்சாரான்னே தெரியலையே...

'இது எனக்குத் தெரியாதா... இவருக்கு, 1,000 ரூபாய் கொடுத்தது வீண்... மருந்து கடையில் கேட்டால், 10 ரூபாயில் முடிந்திருக்கும்...' என்று சொல்கின்றனர்.

நகர மக்களுக்கு பரிசோதனை மேல் நம்பிக்கை இருப்பதை போல, கிராமத்திற்கு சென்றால், ஒன்று ஊசி போட வேண்டும் அல்லது நான்கைந்து நிறங்களில் மாத்திரை தர வேண்டும். அப்போது தான் நல்ல டாக்டர்.

கார்ப்பரேட் மருத்துவமனையில் இருக்கும் டாக்டருக்கும் இதே அனுபவம் தான்.

அதே நேரத்தில், சில ஆயிரங்களுக்கு பரிசோதனை செய்யச் சொல்லி, இதே அறிவுரையைச் சொன்னால், 'எல்லா டெஸ்ட்டும் செய்தாகி விட்டது... எனக்கு ஒன்றும் இல்லை என டாக்டர் சொல்லி விட்டார்' என்று நிம்மதியாக கேட்டுக் கொள்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை, இதையெல்லாம் செய்தால் தான், தங்களின் நோய் சரியாகும் என, நினைக்கின்றனர். மக்களின் மனநிலை இப்படி ஆகி விட்டது.

பரிசோதனை தேவை இல்லை... அறுவை சிகிச்சை வேண்டாம் என்ற நிலையிலும், பல நேரங்களில், கார்ப்பரேட் மருத்துவமனையில் தவிர்க்க முடியாது; அவற்றை செய்ய வேண்டியிருக்கும்.

இந்த மையத்திற்கு வரும் நோயாளிகளிடம், 'அறுவை சிகிச்சைக்கு இப்போதைக்கு அவசரம் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று சொன்னால், 'சரி...' என்று சொல்லி விட்டு போகிறவர்கள், 15 நாட்கள் கழித்து, மீண்டும் வந்து, 'டாக்டர்... வேறு ஒரு டாக்டரிடம் போனேன்.

அறுவை சிகிச்சை

'உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அந்த டாக்டர் ஆப்பரேஷன் சரியாக செய்திருக்கிறாரா என்று பார்த்து சொல்லுங்கள்' என்று சொல்வர்.

'நான் தான் ஆப்பரேஷன் அவசியம் இல்லை என்று சொன்னேனே... ஏன் செய்தீர்கள்?' என்றால், 'இல்லை... அவர் சென்னார்... இவரு சொன்னாரு, அதான் போனேன்' என்று ஏதோ காரணத்தை சொல்வர். ஒரு சிலர், 'டாக்டர் நீங்க தான் கைராசியான டாக்டர். 'உங்களிடம் தான் ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று ஆறு மாதங்களாக காத்திருக்கிறேன்' என்பர். ஆனால், மருத்துவ ரிப்போர்ட்டை பார்த்து விசாரித்தால், இதற்கு முன், ஏழெட்டு டாக்டரைப் பார்த்திருப்பர்.

டாக்டரிடம் ஆலோசனைக்கு செல்லும் போது, தாங்கள் நினைப்பதை டாக்டர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நடக்கிறது.

'அறுவை சிகிச்சை தேவை' என்று சொன்னால், 'எடுத்தவுடனேயே ஆப்பரேஷன் என்று சொல்கிறார்... வேறு டாக்டரைப் பார்ப்போம்' என்று போய் விடுவர்.

அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதித்து, சிக்கலானவுடன் திரும்ப வந்து, 'சார், நீங்க உடனே ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னபோதே செய்திருக்கலாம்...

'என் உறவினர் ஒருவர் சொன்னார் என்று தாமதித்து, தவறு செய்து விட்டேன்... உடனே, ஏதாவது செய்து என்னை காப்பாத்துங்க சார்...' என்று சொல்லும் போது, என்ன சொல்வது என்றே தெரியாது.

இந்த மையத்தில் இல்லாத வசதிகளே கிடையாது. ரத்தம், சிறுநீர் உட்பட எல்லா விதமான பரிசோதனைகளையும், குறைந்த கட்டணத்தில் இங்கு செய்து கொள்ளலாம்.

இதயம் - நுரையீரல் - கார்டியோ தொராகிக், அறுவை சிகிச்சை தவிர, மற்ற எல்லா துறைகளுக்கும் சிறப்பு மருத்துவர்கள் இருக்கின்றனர்.

மற்ற மருத்துவமனைகளை போல, எங்கள் மையத்திற்கு விளம்பரம் கிடையாது. மொத்தம், 450 படுக்கை வசதிகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு உள்ளது.

உலகத் தரம் வாய்ந்த ரத்த வங்கி உள்ளது. அப்போலோ உட்பட, பல கார்ப்பரேட் மருத்துவமனைகள் இங்கு தான் ரத்தம் வாங்குகின்றன.

இலவசம்

டாக்டரின் சிபாரிசு கடிதத்துடன் வந்தால், யார் வேண்டுமானாலும், தேவைப்படும் ரத்தத்தை வாங்கிக் கொள்ளலாம். தானம் செய்பவர்களின் ரத்தத்தை மட்டுமே நாங்கள் பெறுவதால், இலவசமாகவே தருகிறோம்.

எச்.ஐ.வி., - எய்ட்ஸ் தொற்று உட்பட தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்வதற்கு ஆகும் கட்டணத்தை மட்டுமே வாங்குகிறோம். இதே ரத்தம், கார்ப்பரேட் மருத்துவமனையில், 1 யூனிட், 3,000 ரூபாய்க்கு விற்கின்றனர்.

சென்னையை சுற்றிலும், பல இடங்களில், இந்த மையத்தின் கிளைகள் உள்ளன. அங்கு வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், இங்கு அனுப்பி விடுவர்.

டாக்டர் எம்.சி.வாசுதேவன்,

நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,

வீ.எச்.எஸ்., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை.

044 - 2254 2160. 93810 29485

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us