கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: அரசை நம்ப வேண்டாம்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: அரசை நம்ப வேண்டாம்!
PUBLISHED ON : அக் 22, 2017

அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால், நம் உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை, சாமானிய மக்களுக்கு வர வேண்டும். 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், அரசு மருத்துவமனைகளைச் சார்ந்து இருக்கும் நம் நாட்டில், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நினைப்பே, பாதுகாப்பற்ற உணர்வை தருகிறது என்பது,
கவலைக்குரியதாக உள்ளது. மேற்படிப்பிற்காக, நான் கனடா சென்றிருந்தபோது, அங்கு எனக்கு கிடைத்த அனுபவங்களை, நான் பார்த்த விஷயங்களை, நம் நாட்டில் உள்ள சுகாதார நிலையோடு எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பேன்; மிகுந்த மன வேதனையாக இருக்கும்.
ஒரு குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால், கனடாவில், ஹெலிகாப்டரில் கொண்டு வருவர். உடல் நலம் சரியில்லாத குழந்தையை, மாட்டு வண்டியில் எடுத்து வருவதை, நான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் படித்த போது பார்த்திருக்கிறேன். இன்றைக்கும், பல கிராமங்களில், இதே நிலை தான் தொடர்கிறது. கனடாவில், மருத்துவக் காப்பீடு அனைவருக்கும் கட்டாயம். குறைந்தபட்ச தொகையை, ஒவ்வொரு குடிமகனும், 'பிரீமியம்' ஆகச் செலுத்துவார். இதனால், மருத்துவ உதவிகள் அனைத்தையும் மக்களுக்கு, அரசே செய்கிறது. இங்கு, இது போன்ற திட்டங்கள் அவசியம் என்பதை, நாம் உணர்வதே இல்லை. மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அதன் சாதக - பாதகங்களை புரிந்து கொள்ளாமல், உடனடியாக சில அமைப்புகள் போராட்டத்தில் இறங்கும்.
அரசு மருத்துவமனைகளில், திறமையான டாக்டர்கள் இருக்கின்றனர்; உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவக் கருவிகள் உள்ளன. ஆனால், அரசு மருத்துவமனைகளை நாடிச் செல்பவர்களால், இவற்றின் பலன்களை சுலபமாகப் பெற முடிகிறதா என்பது, மிகப்பெரிய கேள்விக்குறி!
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகம் பரவாயில்லை என்ற ரீதியில் வேண்டுமானால் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். திராவிடக் கட்சிகள், இத்தனை ஆண்டுகளில், சுகாதாரத் துறைக்கு செய்திருப்பது போதாது. நடுத்தரக் குடும்பங்கள், பெரும்பாலும் கடன் வாங்குவது, மருத்துவத் தேவைகளுக்காக தான். அதன் சுமை வாழ்நாள் முழுவதும் இருக்கிறது.
'டெங்கு' விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். நிலைமையை கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், நிலைமை இந்த அளவு மோசமாக போயிருக்காது. நிலைமை கை மீறி போன பின், அரசு மருத்துவ மனைகளில், காய்ச்சலுடன் வருபவர்களுக்கு தனி பிரிவு, உடனடியாக சிகிச்சை, 40 வினாடிகளில் தட்டணுக்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளும் வசதி என, சொல்கின்றனர்.
'டெங்கு' வந்தால், மூன்று நாட்கள் கழித்து, சட்டென்று காய்ச்சல் சரியாகிவிடும். அந்த சமயத்தில், காய்ச்சல் சரியாகிவிட்டது என, நோயாளியை வீட்டிற்கு அனுப்பி விடுகின்றனர். 'டெங்கு' வைப் பெறுத்தவரை, காய்ச்சலுக்குப்பின் ஏற்படும் விளைவுகள் தான் மோசமாக இருக்கும். தேவைப்படும் நோயாளிக்கு, ரத்தம்
ஏற்றுகிறோம் என்கிறார், சுகாதாரத் துறை அமைச்சர்.
ரத்தம் ஏற்ற வேண்டியது
அவசியமில்லை. தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்தக் கசிவு ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு, தட்டணுக்கள் தான் ஏற்ற வேண்டும். பொதுமக்களிடம், டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு தவறிவிட்டது.
இதன் விளைவு தான், 10 ஆண்டு களுக்குப் பின் குழந்தை பெற்ற பெண், தனக்கும், தன் குழந்தைக்கும் டெங்கு என்பது தெரிந்தவுடன், பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்; எவ்வளவு வேதனையான விஷயம் இது. குஜராத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்த சமயத்தில், மகப்பேறு இறப்புகள் அதிகம் இருந்தது. உடனடியாக, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, சஞ்சீவினி திட்டத்தை செயல்படுத்தினார். கர்ப்பிணிப் பெண்கள், தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை பெற்றுக்-கொள்ளலாம்.
அதற்கான தொகையை, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு வழங்கிவிடும். இதன்பின், மகப்பேறு இறப்புகள் வெகுவாகக் குறைந்தது. அரசு நடவடிக்கை எடுக்கும் என இருந்தால், பாதிப்பு என்னவோ பொதுமக்களாகிய நமக்குத்தான். 'ஏசி' அறையில் இருக்கிறோம் என, மெத்தனமாக இருக்க வேண்டாம். 'ஏசி'யில் உள்ள நீரிலும் கொசுக்கள் முட்டையிடும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து, நம்மால் முடிந்த அளவு, நாமும் பொறுப்புணர்வுடன் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
மகப்பேறு மருத்துவர், தமிழக, பா.ஜ., தலைவர்

