PUBLISHED ON : அக் 22, 2017

எட்டாம் வகுப்பு படிக்கும் பையனுடன், பெற்றோர் என்னைப் பார்க்க வந்தனர். பையனின் அப்பா, தொழில் துறையில் பணி செய்கிறார்; அம்மா, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறார். பெற்றோருக்கு ஒரே பையன். முதலில், அவன் பெற்றோர் மட்டும் என் அறைக்கு வந்து, 'பையன், சுவரைப் பார்த்து, தனியாகப் பேசுகிறான்' என்றனர். ஆரம்பத்தில், அவன் அறையில், தனியாகப் பேசியவன், சில மாதங்களாக, சுவரைப் பார்த்துப் பேச ஆரம்பித்து இருக்கிறான்.
பையனை அழைத்தேன். 'அம்மா, அப்பா வெளியில், 'வெயிட்' பண்ணட்டும் ஆன்ட்டி...' எனச் சொல்லி விட்டான். சரி என்று, அவனிடம் தனியாகப் பேசினேன்.
'ஸ்கூல் விட்டு வந்தவுடன், என்ன செய்வே?' என, கேட்டேன். 'வீட்டில் தனியாகத்தான் இருப்பேன். என்ன செய்றதுன்னு தெரியலை. அதனால, சுவரைப் பார்த்து பேசிட்டே இருப்பேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. யாரோ ஒருத்தர் என்கூடவே இருப்பது போல உணர்றேன்' என்றான்.
'சரி, ஸ்கூல்ல போய் இது மாதிரி தனியாகப் பேசுவியா?' எனக் கேட்டதற்கு, 'நோ ஆன்ட்டி, பிரண்ட்ஸ் எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்ப்பாங்களே, அதனால செய்ய மாட்டேன்' என,
சட்டென பதில் வந்தது. தான் என்ன செய்கிறோம் என்பதோடு, தன்னுடைய இந்தப் பழக்கம், மற்றவர்கள் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. 'நானும் உன்னைப் போலவே செய்வேன்' எனச் சொல்லி, யாருடனோ பேசுவதைப் போல, சுவரைப் பார்த்துப் பேசினேன். 10 நிமிடங்கள் என்னை கவனித்துப் பார்த்தவன், 'ஆன்ட்டி, ஒரு மாதிரி அபத்தமா இருக்கு, கிறுக்குத்தனமா தெரியுது. நான், இனி இதுபோல செய்ய மாட்டேன்' என, சட்டென பதில் வந்தது.
இனி செய்ய மாட்டேன் எனச் சென்னாலும், அவனால் எவ்வளவு துாரம் கடைப்பிடிக்க முடியும்? தனியாக இருக்கும் சமயங்களில், திரும்பவும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை தானே அதனால், அவனுக்குப் பிடித்தமான விஷயத்தில் ஈடுபடச் செய்தால், இந்தப் பழக்கம் மாறிவிடும். இயல்பாகவே இந்தப் பையன் ரொம்ப, 'ஸ்மார்ட்.' சொல்வதை உடனடியாக புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது; புத்திசாலிக் குழந்தையாக இருக்கிறான்; நல்ல ஆங்கிலத்தில் அழகாகப் பேசுகிறான்; துறுதுறுவென்றிருக்கும் குழந்தை; தனிமையில் இருந்த சமயங்களில், தானாகவே பேச ஆரம்பித்திருக்கிறான். இதை இப்படியே விட்டால், கற்பனையிலேயே சில உருவங்களை சிருஷ்டித்து, அதனோடு பேச ஆரம்பித்து விடுவான். அந்த நிலைக்குப் போய்விட்டால், வெளியில் கொண்டு வருவது ரொம்பவே சிரமம். அவனுக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி கேட்டபோது, டிராயிங், பெயின்டிங் செய்வது மிகவும் பிடிக்கும் என்றான். 'தனியாக இருக்கும் நேரத்தில், உனக்கு பிடித்தமான ஓவியங்களை வரை. 'அம்மா, அப்பா, உன் பிரண்ட்ஸ் என, எல்லோருக்கும், நீ வரைந்த ஓவியங்களை, 'கிப்ட்' கொடு' என்றேன். நிச்சயம் செய்வதாக சொன்னவன், எனக்கும் ஒன்று வரைந்து தருவதாக, 'பிராமிஸ்' செய்துள்ளான். உடற்பயிற்சி இருப்பது நல்லது என்பதால், நீச்சல் பயிற்சிக்கு செல்கிறான்.
நாங்கள் இருவரும் பேசிய விஷயங்களை, பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் எனச்
சொல்லிவிட்டான். சொல்ல மாட்டேன் என, அவனிடம் உறுதி அளித்துவிட்டு, அவன் பெற்றோரை அழைத்து, 'நேரம் இல்லை எனச் சொல்வது சரியில்லை. மனது இருந்தால், நேரம் ஒதுக்கி, தினமும் சிறிது நேரம் குழந்தையுடன் இருக்கலாம். குறைந்தது, 10 நிமிடங்களாவது தினமும் அவனோடு பேசுங்கள்' என, சொல்லியிருக்கிறேன்.
தவிர, 'அவன் படம் வரைந்து நமக்கெல்லாம் தருவதாக கூறியிருக்கிறான். தனியாக இருக்கும் நேரத்தில், படம் வரைகிறானா என்பதை மட்டும் கவனித்து சொல்லுங்கள்' என,
கூறி அனுப்பிஉள்ளேன்.
ரமா தீனதயாளன்,
மனநல ஆலோசகர், சென்னை.
ramad1903@gmail.com

