கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! குனிந்தால் அதிகரிக்கும் தலைக்கனம்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! குனிந்தால் அதிகரிக்கும் தலைக்கனம்!
PUBLISHED ON : நவ 05, 2017

பெரும்பாலான இளம் வயதினருக்கு இருக்கும் பிரச்னை, 'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்!' அமெரிக்காவில், 'பிளாக் பெர்ரி' மொபைல் போன் அறிமுகமான சமயத்தில், இந்தப் பிரச்னை ஆரம்பித்தது. பிளாக் பெர்ரி மொபைலில், 'கீ போர்டு' சிறியதாக இருக்கும். எழுத்துக்கள் சிறியதாக இருக்கும். இரண்டு வரிகள், கீ -இன் செய்ய வேண்டும் என்றாலும், அதிக நேரம் பிடிக்கும். அந்த சமயத்தில், நம் நாட்டில், 'பிளாக் பெர்ரி' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் இல்லை. அதனால், அமெரிக்காவில் இருந்ததைப் போல, 'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்' இங்கு இல்லை.கடந்த, 2010ல் 'ஸ்மார்ட் போன்' அறிமுகமானவுடன், அனைவரின் கைகளுக்கும் வந்துவிட்டது. சுய தேவைகள், அலுவல் விஷயங்கள் அனைத்திற்கும், ஸ்மார்ட் போனை சார்ந்தே வாழ்க்கை முறை மாறி விட்டது. இதனால், ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் இந்தியர்களில், 18 முதல், 40 வயதிற்குட்பட்டவர்களில், 67.8 சதவீதம் பேர், 'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்' பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக, ஐரோப்பிய நிறுவனம் நடத்திய ஆய்வில், தெரிய வந்துள்ளது. இன்னொரு அதிர்ச்சியான தகவல்; ஆண்களைக் காட்டிலும், பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். வேறு காரணங்களால், கழுத்து, முதுகு வலி இருப்பவர்களுக்கு, ஸ்மார்ட் போன் உபயோகிக்க துவங்கிய ஓராண்டிற்குள், இந்தப் பிரச்னை வந்துவிடும். மற்றவர்களுக்கு சற்று தாமதமாக வரும்.
'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்' என்பது என்ன? ஏன் வருகிறது? கழுத்தின் மேல் தலை நேராக இருக்கும்போது, வளர்ந்த ஒருவரின் சராசரி தலை எடை, நான்கரை கிலோ முதல் ஐந்து கிலோ வரை இருக்கும். தலை குனியும்போது, எடை அதிகரிக்கும். அதாவது, கழுத்திலிருந்து தலை, 15 டிகிரி கோணத்தில் குனியும்போது, தலையின் எடை, 10 கிலோ இருக்கும். இதுவே, 45 டிகிரி குனிந்தால், 20 கிலோ ஆகும். 60 டிகிரி என்றால், 30 கிலோவாகி விடும். எவ்வளவுக்கு எவ்வளவு குனிகிறோமோ, அந்த அளவிற்கு தலைக்கனம், அதாவது எடை அதிகரிக்கும். நீண்ட நேரம் குனிந்தபடியே, ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால், இந்தப் பிரச்னை வந்து விடும். தொடர்ந்து, கழுத்துப் பகுதிக்கு அழுத்தம் கொடுப்பதால், இதுபோல ஆகிறது. இதன் ஆரம்ப அறிகுறிகள், தாடை எலும்புகள் வலிக்கும். அடிக்கடி தலைவலி வரும்; தோள்பட்டை, கைகளில் வலி வரும். முதுகு வலியும் வரலாம். காரணம் தெரியாமல் அடிக்கடி இதுபோன்ற வலிகள் வந்தால், டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம். தாங்க முடியாத வலியுடன் வருபவர்களுக்கு, வலி நிவாரணி கொடுத்து, வலி முழுவதும் குறைந்த பின், தொடர்ந்து, குனிந்ததால் ஏற்பட்ட, கழுத்துப் பகுதியில் உள்ள இறுகிய தசைகளை, 'ரிலாக்ஸ்' செய்ய, சில பயிற்சிகளைத் தருவோம். இந்த பயிற்சிகளை தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்ய வேண்டும்; அதன்பின், தினசரி வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். 'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்'மை தவிர்க்க நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.தொடர்ந்து, பல மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அலுவல் விஷயமாக, அதிக நேரம் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை குறைந்தது. ஐந்து நிமிடங்களாவது, கழுத்து, தலைக்கு ஓய்வு தர வேண்டியது அவசியம்.
டாக்டர் ஸ்ரீராமலிங்கம், கோவை ssrreerraamm@gmail.com

