கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! இளைஞர்களை கவரும், 'மோடி'
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! இளைஞர்களை கவரும், 'மோடி'
PUBLISHED ON : நவ 12, 2017

வாழ்க்கை முறை மாற்றத்தால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள். 40 வயதிற்கு மேல் வரும் நீரிழிவு பிரச்னை, தற்போது, பிறந்த குழந்தைக்கு வருகிறது. குழந்தைகளை பாதிக்கும் நீரிழிவில், பல வகைகள் உள்ளன. அதில் பிரதானமானது, 'டைப் 1, டைப் 2' மற்றும் அதிகம் கேள்விப்படாத, 'மோடி' வகை நீரிழிவு.
'டைப் 1' நீரிழிவு: இது, 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. 'டைப் 1' நீரிழிவு பிரச்னை இருப்பது உறுதியானால். இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வது மட்டுமே தீர்வு. இந்த வகை நீரிழிவு, எதிர்பாராத சமயத்தில் குழந்தைக்கு வரும். குடும்பத்தில் யாருக்காவது, 'டைப் 1' நீரிழிவு பிரச்னை இருக்க வேண்டும் என்பதில்லை. வழக்கத்திற்கு மாறாக, குழந்தை, அதிகம் தண்ணீர் குடிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, திடீரென்று வாந்தி எடுப்பது போன்றவை, இதன் பொதுவான அறிகுறிகள். இந்த அறிகுறி களோடு வரும் குழந்தைகளுக்கு, நீரிழிவு பிரச்னை இருக்க வாய்ப்புண்டு என்பதை, குழந்தைகள் நல மருத்துவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்.வைரஸ் தாக்குதலால், 'ஆட்டோ இம்யூனிட்டி' எனப்படும், நோய் எதிர்ப்பு அணுக்களை, நம்முடைய செல்களே அழித்துவிடும் நிலை, இந்த நீரிழிவிற்கு காரணமாக இருக்கலாம். இந்நிலையில், கணையத்தில் உள்ள செல்களை அழித்து விடுவதால், இன்சுலின் சுரப்பு இருக்காது. 'டைப் 1' நீரிழிவு இருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
'டைப் 2' நீரிழிவு: சமீபத்தில், என்னிடம் மூன்று வயது குழந்தையை அழைத்து வந்தனர். தேவையான பரிசோதனைகளை செய்ததில், அக்குழந்தைக்கு, 'டைப் 2' நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையே, 'டைப் 2' நீரிழிவு பாதிக்கும். இது, முழுக்க முழுக்க வாழ்க்கை முறை மாற்றத்தால் வருவது. அதிக உடல் பருமன், 'ஜங்க் புட்' சாப்பிடுவது, ஓடியாடி விளையாடாமல், எப்போதும், 'வீடியோ கேம்ஸ்' ஆடுவது போன்றவை முக்கிய காரணிகள்! 'மோடி' நீரிழிவு - மெச்சூரிட்டி ஆன்செட் டயாபடீஸ் ஆப் தி யங்: இது, 25 வயதிற்கு உட்பட்டவர்களை பாதிக்கும். அதிகம் வெளியில் தெரியாத, 'மோடி' வகை, மரபணு கோளாறால் வருவது. இந்த நீரிழிவில், 14 வகைகள் உள்ளன. இதில், 'மோடி 3' பொதுவான வகை; 'மோடி 2' இருந்தால், எந்த சிகிச்சையும் தேவையில்லை; மோடி 1 மற்றும் 2 இருந்தால், இன்சுலின் மற்றும் மாத்திரை தேவையில்லை; 'மோடி 5' இருந்தால், 'அல்ட்ரா சவுண்ட்' ஸ்கேன் எடுக்க வேண்டியது முக்கியம்; காரணம், ஒரு சிறுநீரகம் இல்லாமலோ அல்லது உடல் உள் உறுப்புகளின் அளவில் மாற்றமோ இருக்கும். 'மோடி 4, 5' க்கு இன்சுலின் தேவை. பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கும் நீரிழிவு வருகிறது. பிறந்த குழந்தைக்கு, ரத்த சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதை, 'டைப் 1' நீரிழிவு என, தவறாகப் புரிந்து கொள்வதால், இன்சுலின் உடனேயே வளர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், மரபணு பரிசோதனை செய்ய வேண்டும்; ஒரு குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் இருந்தால் மட்டும், இன்சுலின் போட வேண்டும். நீரிழிவு எதனால் வருகிறது, என்ன வகை என, துல்லியமாக பரிசோதித்து, அதற்கேற்ற சிகிச்சை அவசியம்.இதற்கு, 'பிரசெஷன் டயாபடிக்' என, பெயர். எங்கள் மையத்தில், இந்த முறையையே பின்பற்றுகிறோம்.
டாக்டர் வி.மோகன் நீரிழிவு சிறப்பு நிபுணர், சென்னை. drmohans@diabetes.ind.in

