PUBLISHED ON : நவ 12, 2017

ஹேமலதா, என்னை பார்க்க, அவர் சகோதரருடன் வந்த போது, தவறான முகவரிக்கு வந்து விட்டாரோ என்ற குழப்பம், ஒரு வினாடி எனக்கு வந்தது உண்மை; காரணம், அவர் உடல் பருமன். 'என் தங்கை மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்; உங்களின் ஆலோசனை தேவை' என்றவுடன், என் குழப்பம் தீர்ந்தது. ஹேமலதாவிடம் பேசியபோது, 'எனக்கு வாழவே பிடிக்கவில்லை... நான் நிம்மதியாக துாங்கி, பல நாட்கள் ஆகிவிட்டது. என் மேல் யாருமே அன்பாக இல்லை; மனம் கனமாகவே உணர்கிறேன். தற்கொலை முயற்சி கூட தோற்று விட்டது' என்றார்.
துாக்குப் போட முயற்சி செய்த போது, அதீத உடல் பருமனால், மின் விசிறி, கழண்டு விழுந்து விட்டதாம். 'சரி... உங்களை பற்றிய விபரங்களைச் சொல்லுங்கள்' என்றவுடன், 10 நிமிடங்களில், 'கடகட'வென சொல்லி முடித்தார். அவர் சொன்ன தகவல்கள் இதுதான்...ஹேமலதாவிற்கு இது இரண்டாவது திருமணம். முதல் கணவருடன் நன்றாகத் தான் வாழ்க்கை இருந்தது; எதிர்பாராத விதமாக, அவர் விபத்தில் இறந்து விட்டார். 'எனக்கு நேரம் சரியில்லை. அதனால் தான், அவர் விபத்தில் இறந்து விட்டார்' என, நினைத்தார் ஹேமலதா. 'இப்படியே இருப்பது தவறு; இவருக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும்' என, இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர், அவரின் உடன் பிறந்தவர்கள். இதுவும் நல்ல குடும்பம் தான். இவரின் நாத்தனார் குடும்பம் மேல் வீட்டிலும், இவர், கணவர் மற்றும் மாமியாருடன், கீழ் வீட்டிலும் இருக்கின்றனர். 'இரண்டாவது முறையும் நமக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது; எந்த வேலை செய்தாலும், 'பெஸ்ட்'டாக செய்ய வேண்டும்' என, கவனமாக இருந்தார். சுய தொழில் செய்கிறார் கணவர். இரவில், தாமதமாக வீட்டிற்கு வருவார்; அதனால், சாப்பிட்டு, துாங்குவதற்கு தாமதமாகும். மாமியார், அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம் உள்ளவர். இவரும், அவர் எழுந்திருக்கும் நேரத்தில் எழுந்து, வாசல் பெருக்கி, கோலம் போட்டு, வீட்டு வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இதனால், துாங்கும் நேரம் குறைந்து விட்டது. பல நேரங்களில் மாமியார் எழும் நேரத்தில், இவரால் எழுந்திருக்க முடியாது. 'தவறாக நினைத்துவிடப் போகிறாரே' என்ற பதற்றம் வரும். என்ன செய்தாலும், 'மற்றவர்கள் என்ன நினைப்பரோ...' என பயந்து, தயங்கியபடியே இருப்பார்.
தற்கொலை எண்ணம் வந்ததற்கு இன்னொரு காரணம், 35 வயதில் தற்கொலை செய்து கொண்ட இவரின் அப்பா. அதன்பின், அண்ணன், தங்கை இருவருக்கும், இவரே பொறுப்பாக இருந்து, பல விஷயங்களைச் செய்திருக்கிறார். இளம் வயதில், அப்பா ஸ்தானத்தில் இருந்து, தைரியமாக பிரச்னைகளை எதிர் கொண்டவர், தனக்கு குழப்பங்கள் வந்தபோது, என்ன செய்வது, யாரிடம் சொல்வது என, தெரியவில்லை; எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பித்து விட்டார். அவரின் பிரச்னைகளைக் கேட்க ஆரம்பித்த இரண்டாவது,'செஷனிலேயே' சிரிக்க ஆரம்பித்தார். நடைமுறைக்கு ஒத்து வராத நம்பிக்கைகளைப் பற்றி விளக்கினேன்; 'ரிலாக்சேஷன்' தெரபியுடன் சேர்த்து, 'நன்றாக துாங்குவதற்கு தேவையான பயிற்சிகள், விட்டமின், 'டி' மாத்திரைகள், நடைபயிற்சி செய்ய வேண்டும்; புரதம் அதிகம் உள்ள உணவை சாப்பிட வேண்டும்' போன்ற ஆலோசனைகளையும் வழங்கினேன். மூன்றாவது, நான்காவது முறை வந்த போது, நல்ல மாற்றம் தெரிந்தது!
இளம் வயதில், அப்பா ஸ்தானத்தில் இருந்து, தைரியமாக பிரச்னைகளை எதிர் கொண்டவர், தனக்கு குழப்பங்கள் வந்தபோது, என்ன செய்வது, யாரிடம் சொல்வது என, தெரியவில்லை; எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பித்து விட்டார்

