PUBLISHED ON : ஏப் 13, 2016

ஏப்ரல் 10, 2016 மகேஷ், 3 வயது குழந்தை. அழகானவன்; படுசுட்டி; அம்மா ஷீலா ஒரு தனியார்
அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிகிறார். அப்பா அன்புச்செல்வனுக்கு, ஐ.டி.,
பூங்காவில் வேலை. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். அக்கம் பக்கத்து வீட்டார் பலர், மகேஷை அடிக்கடி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனுக்கு இனிப்புகள், பரிசுகள் கொடுப்பர்.
இப்படி மகேஷின் உலகம் சந்தோஷமாக செல்லும்போது, திடீரென்று சில நாட்கள் சரியாக சாப்பிடாமல் முரண்டு பிடித்தான். இதனால் என்னிடம் அழைத்து வந்திருந்தனர். மகேஷிற்கு மருத்துவ பரிசோதனைகள் பல செய்தேன்.
அதோடு மலப் பரிசோதனையும் செய்யச் சொன்னேன். அதன் முடிவு, நான் எதிர்பார்த்தபடியே அமைந்தது. குட்டிப் பையனின் குடலில் கொக்கிப் புழுக்கள் இருந்தன.
குடற்புழுக்கள் இருந்தால், குழந்தைகள் சரிவர சாப்பிட மாட்டார்கள். உருண்டைப்புழு, கொக்கிப்புழு. நூல்புழு, சாட்டைப்புழு, நாடாபுழு என பலவகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் இனமுண்டு. பெண்புழு இடும் முட்டைகள், மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து, மண்ணோடு மண்ணாக கலந்துவிடும்.
குழந்தைகள் விளையாடும்போது, கைவிரல் நகங்களில் புகுந்துவிடும். கைகளை கழுவாமல் சாப்பிடும்போது, உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்கு சென்று பொரிந்து லார்வா எனப்படும் சிறுபுழுக்கள் வெளிவரும்.
ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று, சில நாட்கள் அங்கே தங்கி, பின் அங்கிருந்து இதயத்துச் சென்று, நுரையீரலுக்குள் நுழைந்து, பின் உணவுக்குழாய்க்கு வரும். மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து சேரும்போது, லார்வா கட்டத்தில் இருந்தவை முழு புழுக்களாக வளர்ந்துவிடும்.
கொக்கிப்புழுக்கள் அளவில் சிறியவை. இவற்றின் லார்வாக்கள் மனித பாதத்தின் தோலைத் துளைத்து, நேரடியாகவே ரத்தத்தில் கலந்துவிடும். இந்தப்புழு தாக்கியுள்ள நபருக்கு, வயிற்றுப் பிரச்னையோடு, வயிற்றுப் போக்கு மற்றும் ரத்தசோகையும் ஏற்படும்; பசிக்காது.
உடல் எடை குறையும். ஒரு கொக்கிப்புழு தினசரி, 0.2 மில்லி ரத்தத்தை உறிஞ்சிவிடும். ஒருவருடைய குடலில் ஒரே நேரத்தில் நூறு புழுக்கள் கூட இருக்கும். குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு கொக்கிப்புழு பாதிப்பு ஏற்படும். குழந்தைகள் இரவில் அழுதால் அல்லது வயிற்று வலி, மலம் வருவது போல் இருக்கிறது என்றால், குடல் புழுக்கள் இருக்க வாய்ப்புகள் உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கு, குடற்புழுக்கள் எளிதில் உருவாகிவிடும். குடற்புழுக்களை அழிக்க, பெரியவர்களுக்கு மாத்திரையாகவும், குழந்தைகளுக்கு திரவ வடிவத்திலும், பல மருந்துகள் கிடைக்கின்றன.
எந்த வகை புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை, மலப் பரிசோதனையில் தெரிந்து கொண்டு, மருந்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை சாப்பிட்டால், குடல் புழுக்களை 100 சதவீதம் அழிக்கலாம்.
மகேஷின் பிரச்னை, மருந்துகள் மூலம் சரி செய்யப்பட்டு இப்போது நன்றாக சாப்பிடுகிறான். வழக்கம் போல் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
மா.வெங்கடேசன்
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
98402 43833
