PUBLISHED ON : செப் 21, 2016

ஆகஸ்ட், 08, 2016: காவ்யா, கல்லுாரி மாணவி. தந்தை இறந்து விட்டார் என்பதால் காவ்யாவின் அக்கா வீட்டில் தான், அவளும் அவளது அம்மாவும் இருக்கின்றனர். கல்லுாரிப் படிப்பு முடிந்ததும், திருமணம் செய்து விட நினைத்தனர். திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், காவ்யாவுக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அடி வயிற்றில் தாங்க முடியாத வலி மற்றும் மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு இருப்பதாக சொன்னார். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ததில், அவருக்கு இன்ட்ராமியூரல் பைப்ராய்டு அதாவது, கர்ப்பப்பையின் வெளிச்சுவர் பகுதியில் தசைக்கட்டி இருப்பது தெரிய வந்தது. இவ்வகையான தசைக்கட்டிகள், கர்ப்பப்பையில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இதற்கான மருத்துவ காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை. இதில், சில வகைகள் உள்ளன. முதல் வகை, சப்சிரோசல் பைப்ராய்டு; கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் வரக் கூடியது. இரண்டாவது வகை, இன்ட்ராமியூரல் பைப்ராய்டு. இது, கர்ப்பப்பையின் வெளிப்புறம் மற்றும் உட்சுவர்களில் வரக் கூடியது. மூன்றாவது, சப்மியூகோசல். இது, கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வருவது. இதன் காரணமாக வரும் பாதிப்புகள், மாதவிடாய் நாட்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் தாங்க முடியாத வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு முதலானவை. கட்டி பெரிதாக இருந்தால், அதன் அருகிலிருக்கும் உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, சில தொந்தரவுகள் ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு வருவது, சப்மியூகோசல் வகை தான். பைப்ராய்ட்ஸ் எனப்படும் கர்ப்பப்பை தசைக்கட்டிகளுக்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றலாம். தற்போது, மருத்துவ முன்னேற்றம்
காரணமாக, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல், இடுப்புக்கு கீழே உள்ள ரத்தக்குழாயில் ஒயரை செலுத்தி, அதில், 'பாலிவினைல் பார்ட்டிகில்ஸ்' எனப்படும் பொருளை பயன்படுத்தி, கர்ப்பப்பையிலுள்ள கட்டிக்கு செல்லும் ரத்த ஒட்டத்தை தடுத்து விடுவோம்.
ரத்த ஓட்டத்தை தடுப்பதால், கட்டிகள் சுருங்கி விடுகின்றன. இதனால், கருப்பைக்கு பாதிப்பேதும் இல்லை. ஒருநாள் மருத்துவமனைக்கு வந்து, அன்றே சிகிச்சை முடிந்து திரும்பி விடலாம். இதனால், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தழும்புகள் கூட ஏற்படாது. காவ்யாவிற்கும், இது போன்றே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில், திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது என, சிகிச்சைக்குப் பின் சந்தோஷமாக கூறினார், காவ்யா.
தி.தீபாஸ்ரீ
இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட். சென்னை.
98404 34365
