PUBLISHED ON : டிச 14, 2016
டிசம்பர், 10, 2016: அரவிந்த் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். அவன், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்தாலே பயம்; காரணம், அத்தெருவில் இருக்கும், 12 நாய்கள். அரவிந்த் பயந்தவாறே, வெறி பிடித்த தெருநாய் ஒன்று அவனைக் கடித்தும் விட்டது; விளைவு, தனிமைப்படுத்தப்பட்டு சில வாரங்களில், மரணத்தை தழுவிவிட்டான்.
'ரேபிஸ்' ஒரு கொடிய வைரஸ் தொற்றுநோய். மரணத்தை தேடித் தரும் இந்நோயை, அதிகம் பரப்புவது நாய்களே. இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால், மனிதன் பாதிப்புக்கு உள்ளாகிறான். கொடுமையான பாதிப்பு, தனி அறை, தனிக்கூண்டில், மரணத்தை தழுவும் நிலை வரை செல்கிறது. நாய் கடித்தால் தான், ரேபிஸ் தொற்றும் என்பது இல்லை. பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும், நகத்தால் பிராண்டினாலும் வரலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து, அதில் உமிழ்நீர் பட்டாலும், ரேபிஸ் வைரஸ் தாக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்குவதில் சிரமம் மற்றும் இரண்டாம் நிலையில், நரம்பு சம்பந்தப்பட்ட அறிகுறிகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும்; 'கோமா' நிலைக்கு வந்து முடிவில் இறப்பு ஏற்படும். ரேபிஸ் இறப்புகளில், 85 சதவீதம், தெற்காசிய நாடுகளில் நிகழ்கிறது. இதில், முதலிடம் இந்தியாவிற்கு. ஆண்டுக்கு குறைந்தது, 40 ஆயிரம் பேர், வெறிநாய்க்கு பரிதாபமாக இறக்கின்றனர். இதில், 8-0 சதவீதம், 15 வயதிற்குட்பட்டவர்கள். பெரும்பாலும், இந்த பாதிப்புக்குள்ளாவது கிராமப்புற ஏழைகள் தான்.
தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம், 2007ம் ஆண்டே அறிவித்தது. தமிழகத்தில், 2005ம் ஆண்டு வரை, தெரு நாய்களின் எண்ணிக்கை, அவற்றை கொல்வதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. பின் கருத்தடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதை, செயல்படுத்துவதில் உள்ள குறைபாடு வருத்தத்துக்குரியது.
நாய் கடிக்கு பின் செய்ய வேண்டியவை:
● நாய் கடித்த இடத்தை, குழாய் நீரில் தொடர்ந்து, 10 நிமிடங்கள் சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
● உடனடியாக டாக்டரை அணுகி, வெறிநாய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
● கடிபட்ட இடம், கழுத்து, முகம், தலை போன்ற, மூளைக்கு அருகில் உள்ள பாகங்களாக இருப்பின், 'இம்மியுனோ குளோபுலின்ஸ்' தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ள வேண்டும்; ரேபிஸ் தடுப்பூசியும் உள்ளது.
வெ.கிருஷ்ணன்,தொற்று நோய் சிறப்பு நிபுணர், புதுச்சேரி.
