தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : டிச 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தபின், அவரின் உணவுப் பழக்கமே தலைகீழாக மாறிவிடுகிறது. எதை சாப்பிடுவது; எதை தவிர்ப்பது, குறிப்பிட்ட உணவை சாப்பிடலாமா... கூடாதா? சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? இப்படி பாதிப்பு வந்தவுடன் ஏகப்பட்ட சந்தேகங்கள் வருகிறது. ரிவர்ஸ் டயாபடிக், பேலியோ டயட் போன்ற புதிய டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இவை பலன் தருமா என்ற சந்தேகம் இருக்கிறது. இது குறித்து விளக்கினால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ப. ஞானசம்பந்தன், திருப்பூர்

நம் வழக்கத்தில் இல்லாத எந்த உணவும், நீண்ட நாட்களுக்கு பலன் தராது. சர்க்கரை பிரச்னை இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமச்சீரான உணவு என்பது நம் அனைவருக்கும் தேவை. ஒரு நாளில் நாம் சாப்பிடும் உணவில், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என்று அனைத்து சத்துக்களும் சமச்சீராக இருக்க வேண்டும். இதில், 50 சதவீதம் கார்போ ஹைட்ரேட், 20 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் புரதம், மீதி வைட்டமின்களும் தாதுக்களும் என, சீராக இருக்க வேண்டும். தற்போது, உலக அளவில் நடந்த ஆய்வில், மரபியல் ரீதியில், நமக்கு பழக்கமான உணவுகளை மட்டுமே, நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதாவது, பல தலைமுறைகளாக நம் குடும்பத்தில் என்ன உணவு சாப்பிட்டனரோ, அந்த உணவைப் பின்பற்றுவதே பாதுகாப்பானது. உணவு விஷயத்தில், நமக்கு மிகப்பெரிய உதாரணம் விலங்குகள். அந்தந்தப் பகுதியில், என்னென்ன உணவுகள் கிடைக்குமோ, அவற்றை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், நம் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நமக்கு பழக்கமில்லாத, மேற்கத்திய உணவுகள், நம் டயட்டில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தான், இந்தியாவில், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்து உள்ளது. வெளிக் காரணிகள் பாதிப்பால், மன அழுத்தம், மனப் பதற்றம் வந்து, எப்படி மனதை பாதிக்கிறதோ, அதேபோல பழக்கமில்லாத பீட்சா, பர்கர் போன்ற உணவுகளால் உடல் பாதிக்கிறது.

நாம் சாப்பிடும் உணவு செரித்து, குளூக்கோசாக மாறி ரத்தத்தில் கலந்து, உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இந்த வேதி மாற்றத்திற்கு பெயர், ஆக்ஸிடேஷன். இந்த உடல், உள் செயல்பாடு சரியாக நடந்தால் தான், திசுக்களுக்கும் செல்களுக்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இப்படி கிடைக்கும் சத்தில், 60 சதவீதம், மூளைக்கு கிடைத்தால் தான், ஆரோக்கியமாக சிந்தித்து செயல்பட முடியும். கார்போ ஹைட்ரேட் உணவில் இருந்தால் தான், உடலுக்கு உடனடியாக சக்தி கிடைக்கும். ஆனால் தற்போது நாம் சாப்பிடும் உணவில், கொழுப்பு மிகுந்தும் காய்கறி, பழம் போன்ற நுண்ணுட்டச் சத்துக்கள் குறைவாகவும் உள்ளது. கொழுப்பு, தேவையான சக்தியை கொடுப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனால் உடலில் ஒரு மந்தத் தன்மை வந்துவிடும்; சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. இன்னொரு விஷயம், இந்தியர்களின் உடல் அமைப்பு சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதற்கே வெகுகாலம் பழகிவிட்டது. மரபுரீதியாக சிறிதளவு உணவு சாப்பிட்டு, நன்கு உழைப்பதற்கு பழகிவிட்டோம். இதனால், அதிக அளவிலான உணவை எப்படி செரிமானம் செய்வது என, நம் உடலுக்குத் தெரியவில்லை. கொழுப்பு, சோடியம் அதிகம் உள்ள துரித உணவுளைச் சாப்பிட்டு, உடல் உழைப்பே இல்லாமல் இருந்தால் உடல் பிரச்னை பெரிதாகும். எந்த புதிய உணவு முறையும், நீண்ட நாட்களுக்குப் பலன் தராது. நம் சுற்றுச்சூழலுக்கும் பருவ நிலைக்கும் ஏற்ப, காலங்காலமாக என்ன சாப்பிட்டோமோ அதுதான் ஆரோக்கியமானது.

டாக்டர் பரணிதரன்

சுக்ரா டயபடீக் கேர் அண்ட் ரிசர்ச் சென்டர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us