PUBLISHED ON : அக் 07, 2012
எழுபது வயதான எனக்கு, 10 மாதங்களுக்கு முன் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. நான் எவ்வாறு செயல்பட வேண்டும்? பேபிசந்திரன், மதுரை
'பேஸ் மேக்கர்' என்பது, இருதய மின்னோட்டத்தில் உள்ள குறைபாட்டை, சரிசெய்யும் ஜெனரேட்டர் போன்ற சிறு கருவி. இக்கருவி பொருத்தப்பட்டவர்கள், அதை பொருத்திய பிறகு, முதல் 3 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும், டாக்டரை சந்தித்து, பேஸ் மேக்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை, பரிசோதிக்க வேண்டும். உங்கள் வயதுக்கு, உப்பு, எண்ணெய், சர்க்கரை அளவை நன்கு குறைப்பதுடன், தினமும் அரை மணி நேரம் நடப்பது நல்லது. இத்துடன், ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு இருந்தால், அதற்கான மாத்திரைகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். எம்.ஆர்.ஐ., போன்ற அதிக மின்காந்த சக்தியுள்ள கருவிகளை தவிர்ப்பது நல்லது.
எனது வயது 82. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். எனவே நான், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பதாக உணர்கிறேன். இது சரியா?
பி. காஜாமுகைதீன், திருப்பத்தூர்
நீங்கள் கூறுவது சரியே. தினமும் நடைப்பயிற்சி செய்வது போன்று, இருதயத்திற்கு பலனளிக்கும் செயல் வேறு இல்லை. தினசரி நடைப்பயிற்சி செய்தால், அது ரத்தஅழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து போன்றவை சரியான அளவில் இருக்க மிகவும் உதவுகிறது. இதுதவிர மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதர ரத்தக்குழாய் நோய்களை தடுக்க பெருமளவு உதவுகிறது. இதுமட்டுமின்றி மனதளவிலும் அது மிகவும் நன்மை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, மூளையில் 'ஹிப்போ கேம்பஸ்' என்ற பகுதியில் இருந்து, 'Endorphin' என்ற நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. எனவே நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் நேர்மறையான நல்லெண்ணங்களை சிந்திக்க வைக்கிறது.
எனக்கு 12 ஆண்டுகளாக ரத்தத்தில் கெட்டக் கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளது. இதற்கு Simvastatin என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு கட்டுப்பாட்டிற்குள் (90 மி.கி.,) வந்துள்ளது. எனது டாக்டரோ, Simva Statin மாத்திரையை நிறுத்திவிட்டு, Atorva Statinமாத்திரையை தந்தார். அதன்பின், எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது. நான் என்ன செய்வது? டி. முத்துவேலன், காரியாபட்டி
Statin வகை மாத்திரைகள் இருதய மருத்துவத்தில் மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இவை ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. இதுதவிர ரத்தக் குழாய் நோய்கள் வராமலும் தடுக்கிறது. ஸ்டேட்டின்களில் பல வகைகள் உள்ளன. சிம்வா ஸ்டேட்டின் மிக நல்ல மருந்து. இதை எடுத்துக் கொண்டு இருக்கும்போது, உங்கள் எல்.டி.எல்., அளவு 90 மி.கி., என்ற அளவில் இருக்கும்போது, அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே நீங்கள் அட்டோர்வா ஸ்டேட்டின் மாத்திரையை நிறுத்திவிட்டு, தாராளமாக மறுபடியும் சிம்வா ஸ்டேட்டின் மருந்தை தொடர்ந்து எடுப்பது நல்லது.
எனது வயது 52. சர்க்கரை நோய் இல்லை. அடிக்கடி குளிர்பானம் அருந்துகிறேன். இது தவறா? எம். செல்வராஜன், தேனி
குளிர்பானம் தொடர்ந்து குடிப்பது தவறு. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஆய்வில், தொடர்ந்து குளிர்பானம் குடித்தால், எடை கூடவும், சர்க்கரை நோய், ரத்தக்குழாய் நோய்கள் வரும் வாய்ப்பும் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. எனவே எந்த வயதிலும், குளிர்பானம் தொடர்ந்து எடுப்பது தவறு. தாகம் அதிகமாக இருந்தால் பழச்சாறுகளை, சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. எப்போதாவது விழாக்களில் குளிர்பானங்களை அருந்துவது தவறல்ல.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.