PUBLISHED ON : அக் 18, 2015
சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காய்க்கு அடுத்த படியாக, உணவுக்கு நல்ல ருசியான வாசனையை தருவது சாதிக்காய். அசைவ, சைவ உணவுகளுக்கு மிக பொருத்தமான வாசனை மசாலாவாக சாதிக்காய் பயன்படுகிறது.
குறிப்பாக, பிரியாணி உணவுக்கு சிறந்த மசாலாவாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்திய மசாலா பொருட்கள் பெரும்பாலும், நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக மஞ்சள், சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. அதே போல் சாதிக்காயிலும், சில நோய்களை போக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன.
பலவீனமான உடல் உள்ளவர்கள், உணவில் சாதிக்காயை சேர்த்துக்கொண்டால் உடல் வலிமையாகும். நீண்ட கால வாயு தொல்லையால் அவதிப்படுவோர், வயிறு பொருமல், மற்றும் வயிற்று வலியால் கஷ்டப்படுவோர், சாதிக்காயை பயன்படுத்தலாம்.
அஜீரணக் கோளாறு, வயிறு மந்தம், ஒற்றைத் தலைவலி, மூச்சு இரைப்பு, இருமல், கண் ஒளி மங்கல் மற்றும் தூக்கமின்மை போன்ற தொந்தரவுகளால் அவஸ்தைபடுவோர், சாதிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். சாதிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், பல்வலி, வாத நோய் ஆகிய நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

