PUBLISHED ON : பிப் 03, 2019

எனக்கு இருதய நோய் உள்ளது. இதனால் பல் சிகிச்சை செய்து கொள்ள பயமாக இருக்கிறது. சில சொத்தை பற்களும், ஈறுகளிலும் வலி உள்ளது. நான் பல் சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பானதா?
இருதய நோய் உள்ளவர்கள் பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு உள்ளது. வாயில் உள்ள கிருமிகள் உடலின் ரத்தத்தில் கலந்து இருதயத்தை பாதிக்கும்.
இவை ரத்த குழாயில் சிறிய காறைகள் படிய செய்யும். சில நேரங்களில் இந்த காறைகள் ரத்த குழாயில் அடைப்பை உண்டாக்கும். இதனால் மற்றவர்களை விட இருதய நோய் உள்ளவர்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகம் கவனிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நீங்கள் பல் சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக பாதுகாப்பானது. சிகிச்சையின் போது சில பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பல் சிகிச்சையின் போது இருதய நோய் பற்றி கூறி அதற்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொண்டு பற்களையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள்.
எனக்கு பற்கள் கிடையாது. கடந்த 10 வருடங்களாக கழற்றி மாட்டும் பல் செட் அணிந்துள்ளேன். இது மிகவும் அசவுகரியமாக உள்ளது. பேசும் பொழுதும் சாப்பிடும் பொழுதும் கழன்று விடுகிறது. இதனை சரி செய்ய முடியுமா?
கழற்றி மாட்டும் பல் செட்கள் எப்பொழுதும் அசவுகரியமும், பாதுகாப்பற்ற தன்மையையும் கொடுக்கும். அது மட்டும் அல்லாமல் நாளைடைவில் தாடை எலும்புகள் தேய்ந்து பல் செட் அணிய முடியாமல் போகக்கூடும்.
இதற்கு 'டென்டல் இம்ப்ளான்ட்' சிகிச்சை முறையே சரியான தீர்வு. எலும்பின் தன்மை பொறுத்து இம்பிளான்ட்கள் வைத்து அதன் மேல் நிரந்தர பற்களை பொருத்தி விடலாம். இன்றைய நவீன சாதனங்களும் தொழில்நுட்பமும் இம்பிளான்ட் சிகிச்சையை வலியின்றி குறைந்த நேரத்தில் செய்ய உதவுகின்றன.
இம்பிளான்ட் மூலம் வைக்கும் நிரந்தர பற்கள் நம் இயற்கை பற்கள் போலவே பலமானதாக இருக்கும். இந்த சிகிச்சை மூலம் மற்ற பற்களுக்கோ, ஈறுகள் அல்லது எலும்பிற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் இந்த இம்ப்ளான்ட்கள் தாடை எலும்புகள் தேயாமல் கட்டுப்படுத்தும்.
இன்றைய நவீன சிகிச்சை முறைகளினால் அனைத்து வயதினருக்கும் ஒரு சில நாட்களிலே இம்பிளான்ட் சிகிச்சை மூலம் நிரந்தர பற்கள் பொறுத்த முடியும்.
டாக்டர் ஜெ. கண்ணபெருமான், பல் மருத்துவ நிபுணர்
மதுரை.- 94441 54551
