PUBLISHED ON : பிப் 03, 2019

எனது 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கிறான். அவனின் கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளதாக ஆசிரியர்களும், உறவினர்களும் கூறுகின்றனர். இதற்காக பிரத்யேக பயிற்சி பயனுள்ளதாக இருக்குமா?
குழந்தைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிப்பது என்றாலே கால விரயம், பண விரயம் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்பயிற்சியை மேற்கொள்ளும் முன்பு சில எளிய உத்திகளை முயற்சி செய்து பார்க்கலாம்.
எழுதும் போது எழுதுகோலை பிடிக்கும் மணிக்கட்டு பக்கத்தை பார்க்க வேண்டும். அப்படி செய்யாவிடில் எழுதுகோல் பிடிக்கும் தன்மை தளர்ந்து விடும். அதனால் கையெழுத்து பாதிக்கக்கூடும். குழந்தைகள் எழுதுவதற்கு ஏற்றவாறு எழுதும் அட்டையை சற்று (தோராயமாக 30 டிகிரி) சாய்வாக வைத்து எழுதி பழக்க வேண்டும். இவ்வாறு செய்தல் எழுதும் மணிக்கட்டு பக்கத்தில் ஏற்றவாறு எழுதச் செய்யும். குழந்தை மேஜை மீது உட்கார்ந்து எழுதும்போது நேராக நிமிர்ந்து, கால்கள் நன்றாக பதிந்து இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். எழுதும் மேஜையானது சரியான உயரத்தில் இருத்தல் அவசியம். எழுதும் எழுதுகோல் விரல்களின் இடையில் பொருத்துமாறு இருத்தல் அவசியம். எழுதுகோல் மிகவும் பருமனாகவும், கடினமாகவும் இருத்தல் கூடாது. மேஜையும், எழுதும் தாளும் சரியாக இருத்தல் வேண்டும்.
சில நேரங்களில் எழுதுகோலை, சில குழந்தைகளை கடினமாகவோ, எளிதாகவோ பிடித்து கொள்ளும். இந்த பிரச்னையை தவிர்க்க எழுதுகோலை பிடிக்கும் இடத்தில் ரப்பர் பட்டியை அணிவிக்கலாம். எழுத பயப்படும் குழந்தைகளுக்கு சிறுசிறு புள்ளிகளை வைத்து பழக்கம் செய்தால் எழுதும் பயம் அகலும். எழுதும் போது அடிக்கடி விரல்களுக்கு ஓய்வு கொடுத்தால் கையெழுத்து கலைநயத்துடன் அமையும். ஒரு சில குழந்தைகள் பென்சிலை விகாரமாக பிடித்து எழுத பழகும். கையெழுத்து நன்றாக அமையும் வரை அதை மாற்றம் செய்ய அவசியமில்லை. இதுபோன்ற உத்திகளின் மூலம் இப்போதுள்ள கையெழுத்தை விட நன்றாக அழகாக இருக்க முயற்சி செய்யலாம்.
- டாக்டர் முருகன் ஜெயராமன்,
குழந்தைகள் நல நிபுணர்
மதுரை, 94864 67452
