PUBLISHED ON : பிப் 23, 2025

கோல்ப் பந்தைவிட அதை வைக்கும் ஸ்டேன்ட் சிறியதாக இருக்கும். கோல்ப் பந்தின் ஸ்டேன்ட், பந்தின் அளவில் கால்வாசி தான் இருக்கும்; லேசாக தட்டி விட்டாலே பந்து கீழே விழுந்து விடும். இதைப் போன்றது தான் தோள்பட்டை பந்தும், மூட்டும்.
இந்த மூட்டின் நிலைத்தன்மை எலும்பை சாராமல், முதல் அடுக்கில் அதைச் சுற்றியிக்கும் தசைநார்களைச் சார்ந்தது. மற்ற மூட்டுகளை போல இல்லாமல், எல்லா கோணத்திலும் சுழலக்கூடிய தன்மை உடையது தோள்பட்டை பந்து மூட்டு. முன், பின், பக்கவாட்டில் என்று ஒவ்வொரு திசையில் சுழலுவதற்கும் இரண்டாம் அடுக்கு தசைநார்கள் உதவும்.
இந்த தசைநார்களில் எதில் சிதைவு ஏற்படுகிறதோ அதற்கேற்ப பிரச்னைகள் வரும்.
இதில் முக்கியமானது 'புரோஷன் ஷோல்டர்' என்கிற தோள்பட்டை இறுக்கம், தோள்பட்டை விலகுதல், தசைநார் கிழிதல் ஆகிய மூன்றும்.
சர்க்கரை கோளாறு, தைராய்டு பிரச்னை, இதயக் கோளாறு இருப்பவர்களுக்கு தோள்பட்டை இறுக்கம் வரும் வாய்ப்பு அதிகம். இது தவிர, அடிபடுவதாலும் வரலாம்.
தோள்பட்டைக்கு நிலைத்தன்மையை தரும் முதல் அடுக்கு தசைநார்கள் தானாக புண்ணாகி, தடித்து, சுருங்கி விரியும் தன்மை போய், தோள்பட்டை உறைந்து விடும்.
இதில், முதல் நிலையில் வலி இருக்கும்; இயக்கமும் இருக்கும். இரண்டாவது நிலையில் வலி நீடிக்கும்; இயக்கம் படிப்படியாக குறையும். மூன்றாம் நிலையில் வலி குறைந்து விடும். ஆனால், தோள்பட்டையை அசைக்கவே முடியாது. இதற்கடுத்த நிலையில் வலி இருக்காது; அசைவும் வந்து விடும்.
சர்க்கரை கோளாறு உட்பட எந்த பிரச்னையும் இல்லாவிட்டால், தானாகவே வந்த தோள்பட்டை இறுக்கம் சரியாகி விடும். சிலருக்கு தொடர்ந்து பல மாதங்கள் வலி இருக்கும் போது தான் சிகிச்சை தேவைப்படும்.
வலி நிவாரணி, நரம்புகளை வலிமைப்படுத்தும் மாத்திரைகள் தரலாம். பிசியோதெரபியும் தரும்போது நிவாரணம் கிடைக்கும்.
வலியுடன் பயிற்சி செய்ய முடியாதபட்சத்தில், தோள்பட்டையில் நேரடியாக ஊசி மூலம் ஸ்டெம் செல் செலுத்தி, வலி குறைந்த பின் பயிற்சி தருவோம்.
ஸ்டெம் செல் செலுத்தினால் யாருக்கு பலன் இருக்கும் என்பதை டாக்டர் தான் முடிவு செய்ய முடியும். வலி, இயக்கம் இரண்டுமே இல்லாதவர்களுக்கு, நுண்துளை அறுவை சிகிச்சை வழியாக எந்த தசைநார் இறுகி உள்ளதோ, கதிரியக்க அலைகளை செலுத்தி சரி செய்யலாம். இது தான் தோள்பட்டை இறுக்கத்திற்கான நவீன சிகிச்சை முறை.
இந்த முறை சிகிச்சையை ஆர்த்தோஸ்கோபி மூலம் செய்தோம். தற்போது தமிழகத்தில் நம் மையத்தில் மட்டும், நேனோ ஸ்கோபி முறையில் நுண்ணிய ஊசி வாயிலாக கேமராவை செலுத்தி, சிதைந்த தசைகளை சரி செய்கிறோம்.
இறுக்கத்தால் வலி வந்து அசைக்கவே முடியாத நிலையில், தோள்பட்டை ஒரு சூழலில் மாட்டிக் கொண்ட நிலைக்கு தள்ளப்படும். இதில், ஏதாவது ஒன்றை உடைத்தால் மட்டுமே சூழலில் இருந்து வெளியில் வர முடியும்.
பொதுவாக உடலின் எந்தப் பகுதி முழுமையாக செயல்படவில்லையோ, அதற்கான ரத்த ஓட்டத்தை மூளை குறைத்து விடும். தொடர்ந்து பிராண வாயு குறையும். இந்நிலையில் பிரச்னை அதிகமாகும். மற்ற இரு பிரச்னைகளான தோள்பட்டை விலகுதல், தசைநார் கிழிதல் ஆகியவற்றையும் நேனோஸ்கோபி சிகிச்சையின் மூலமே சரி செய்யலாம்.
டாக்டர் டி.கோபிநாத்,
எலும்பு, மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், பீ வெல் மருத்துவமனை, சென்னை96983 00300ask@bewellhospitals.in