PUBLISHED ON : பிப் 16, 2025

முதியோருக்கு பெரும்பாலும் சருமம் வறண்டு, அரிப்பு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், ஏற்படும் காயங்கள், வேறு பல தொற்றுக்கு வழிவகுத்துவிடக்கூடும். தற்போது, வெயில் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், வறண்ட சருமத்தை சரிவர பராமரிக்க வேண்டியது அவசியம்.
இதுகுறித்து, தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் வினிதா கூறியதாவது:
முதியோர் தோல் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். பொதுவாக, வயது ஆகும் போது தோலின் அடியில் உள்ள, ஈரப்பதம் படிப்படியாக குறைந்து, தோல் வறண்டு விடுகிறது.
வறண்ட சருமம் காரணமாக, அரிப்பு பாதிப்பால் சிகிச்சைக்கு வருகின்றனர். அரிப்பு தொடர்ந்து ஏற்படுவதால், காயம் உருவாகிறது. மாய்ஸ்சரைசர் என்பது அனைவரும் பயன்படுத்தவேண்டிய ஒன்றுதான். ஆனால், 50 வயது வரை பயன்படுத்தவில்லை என்றாலும் அதன் பிறகாவது, தினந்தோறும் பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.
அதேபோன்று, சிறுநீரகம், கல்லீரல், தைராய்டு, சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு, வறண்ட சருமம் காரணமாக அரிப்பு அதிகம் ஏற்படுகிறது.
அரிப்பு உள்ளவர்கள், கத்தரிக்காய், தட்டை பயறு, சிக்கன், சேனைக்கிழங்கு போன்றவற்றை தவிர்த்து, காய்கறி, கீரை, போன்ற ஊட்டச்சத்து உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதை சீராக்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.