PUBLISHED ON : செப் 07, 2025

மார்பக கேன்சர், அல்சைமர் உட்பட அனைத்து நோய்களுக்கும் பிரதானமான காரணியாக மாறிவிட்டது நம் உணவுப் பழக்கம். என்ன உணவு, எந்த நேரத்தில், ஒரு நாளில் எத்தனை முறை, எவ்வளவு சாப்பிடுகிறோம், உணவின் தரம், எங்கு, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை விரதம் பற்றியெல்லாம் அவ்வப்போது நாம் பேசி, சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இத்துடன் சேர்த்து துாக்கமின்மை, உடற் பயிற்சியின்மை, ஸ்ட்ரெஸ் இவையும் நோய்களை உண்டாக்குவதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எப்படி?
'இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' எனப்படும் இன்சுலின் சீராக செயல் படாத நிலை தான், கேன்சர் உட்பட பல்வேறு நோய் களுக்கும் பிரதான காரணம்.
உணவிலிருந்து ரத்தத்தில் சேரும் சர்க்கரையை, சக்தியாக மாற்றி செல்களுக்கு தருவது தான் இன்சுலின் ஹார்மோனின் வேலை.
உணவு சாப்பிட்டதும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயரும். எல்லா நேரமும் உடலில் 5 மி.கிராம் அளவுக்கு தான் குளுக்கோஸ் இருக்க வேண்டும். செல்களின் செயல்பாட்டிற்கு இது போதுமானது. இதை நிர்வகிக்க தேவையான அளவு மட்டும் இன்சுலின் சுரக்கும்.
மாறிய உணவுப் பழக்கம்
குறைந்த இடைவெளி யி ல் அடுத்தடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். அதிலும் அதிக கலோரி உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம்.
ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை சக்தியாக மாற்றி செல்களுக்கு அனுப்ப தேவைக்கு அதிகமாக இன்சுலின் சுரக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
செல்களின் வளர்ச்சி மாற்றத்திற்கு தேவையான குளுக்கோஸ் போக, அதிகப்படியான குளுக்கோஸை கொழுப்பாக மாற்றி செல்களில் சேமித்து வைக்கிறது.
அதிக சர்க்கரை, மாவுச்சத்து, நிறைந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, ஒரு கட்டத்தில் இன்சுலின் அயர்ச்சி வந்து, தேவைக்கு சுரக்காமல் நிறுத்தி விடுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து பல நோய்கள் வருகின்றன.
இது ஒரு பக்கம் என்றால், செல்களில் கொழுப்பு சேரும் போது வழக்கத்தை விடவும் செல்களின் அளவு பெரிதாகும். அதற்கு ஏற்ப ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் செல்களில் அழற்சி ஏற்பட்டு சிதைய ஆரம்பிக்கும்.
தன்னைத் தானே ...
பழைய செல்கள் அழிவது, புதிய செல்கள் தோன்றுவது இயல்பாக நடக்கும் செயல். இரண்டாக செல் பிரியும் போது, அதில் உள்ள மரபணு தன்னைப் போலவே புதிய பிரதியை உருவாக்கி கொள்ளும்.
சரியான உணவுப் பழக்கம் இல்லை. உடற்பயிற்சி இல்லை. போதுமான அளவு துாங்குவதில்லை. இப்படி இயல்புக்கு மாறான வாழ்க்கை முறை இருந்தால், செல்கள் பிரியும் போது, புதிதாக உருவாகும் மரபணுவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இயல்புக்கு மாறாக செல்கள் பிரிந்தாலோ, மரபணுவில் மாற்றம் ஏற்பட்டாலோ, இது தவறு, இதை வளர விடக் கூடாது என்று நம் உடலுக்குத் தெரியும். அதை சரி செய்யவும் முயற்சிக்கும்.
உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப நம் உடல் இன்னும் பழகவில்லை. பழைய சோறு, கஞ்சிக்கு பதில், பீட்சா, பர்கர், தருகின்றனரோ என்று இரைப்பை அழுகிறது. பலவித நோய்களை உருவாக்குகிறது.
இயல்புக்கு மாறாக பிரிந்த செல்கள் சேர்ந்து கேன்சர் செல்களாக மாறுகிறது.
டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, மார்பக கேன்சர் சிறப்பு மருத்துவர், சென்னை பிரஸ்ட் சென்டர், சென்னை94449 71787selviradhakrishna@gmail.com