தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வாய் வறட்சியைத் தடுக்கும் சர்க்கரை சேர்க்காத மிட்டாய்!

வாய் வறட்சியைத் தடுக்கும் சர்க்கரை சேர்க்காத மிட்டாய்!

வாய் வறட்சியைத் தடுக்கும் சர்க்கரை சேர்க்காத மிட்டாய்!


PUBLISHED ON : ஆக 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரியாக சுத்தம் செய்யாமல் வாயில் தங்கி விடும் உணவுத் துகள்களால், வயதானவர்களுக்கு பல் தொடர்பான பிரச்னைகள் அதிகமாக ஏற்படுகின்றன. இது தவிர, சரியாக பொருந்தாத பல் 'செட்'டுகள், செயற்கைப் பற்களால் பல் படலம், பல் காரைகள், ஈறு பகுதியில் வீக்கம், ரத்தக் கசிவு, ஈறுகள் இறங்கத் துவங்கி பல்புறத் திசு நோய் போன்றவற்றால் ஏற்படும் ஈறு பிரச்னைகளால் பற்கள் ஆட்டம் கண்டு, பின் கீழே விழ வழிவகுக்கலாம்.

இதைத் தவிர்க்க, கூடுதல் மென்மையான பல் துலக்கியால் சுத்தம் செய்ய வேண்டும். முடக்குவாதம், பக்கவாதம், 'பார்க்கின்சன்ஸ்' நோய் இருப்பவர்களால் பல் துலக்கியை பயன்படுத்த முடியாது. இவர்கள் மின் பல் துலக்கிகளை உபயோகிக்கலாம். இவர்களுக்கு கையை வாயருகில் எடுத்துச் செல்வதற்கு சிரமமாக இருக்கும். அவர்கள் பல் துலக்கியின் கைப்பிடியுடன், சற்றே நீளமாக பிளாஸ்டிக் குச்சியை இணைத்துப் பயன்படுத்தலாம்.

பின்புறப் பற்கள், பல் இடுக்குகளில் தங்கியுள்ள உணவுத் துகள்களை அகற்ற, 'வாட்டர் ப்ளாசர்' கருவியை, பல் இடுக்குகளில் வைத்து நகர்த்தினால், அதிலிருந்து அழுத்தத்துடன் வேகமாக வெளிப்படும் தண்ணீர், இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை எளிதாக அகற்றி விடும்; உப்பு நீரிலும் வாயைக் கொப்பளிக்கலாம்.

வயது முதிர்வின் காரணமாக எச்சில் சுரப்பது குறையத் துவங்கும். மேலும், வெவ்வேறு உடல் பிரச்னைக்காக முதியவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்க விளைவு காரணமாக, எச்சில் சுரப்பது குறைந்து வாய் வறட்சியுடன் காணப்படும். இதனால், பல் சொத்தை அதிகம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இப்பிரச்னை இருந்தால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். சர்க்கரை இல்லாத மிட்டாய்களை மெல்வதால், எச்சில் சுரக்க வழி வகை செய்யும்.

ஈறுகள் இறங்கத் துவங்கும் போது, பற்களின் வேர்ப் பகுதி வெளிப்படத் துவங்கி பல் கூச்சம் ஏற்படலாம். டாக்டரின் ஆலோசனையுடன், பல் கூச்சத்திற்கான பிரத்யேக பற்பசையை பயன்படுத்தலாம்.

இயற்கை பற்களை இழந்தவர்கள், பெரும்பாலும் கழற்றி மாட்டக் கூடிய பல் செட்டுகளை உபயோகிக்கின்றனர். சில ஆண்டுகளில் எலும்புத் தேய்மானத்தின் காரணமாக, அவை சரியாகப் பொருந்தாத நிலை ஏற்படும். இதனால், 'கேண்டிடா அல்பிகன்ஸ்' எனப்படும் பூஞ்சைத் தொற்று பாதிப்பும் ஏற்படலாம்.

மேலும், வாயில் சதைப் பகுதியை காயப்படுத்தி எரிச்சலை ஏற்படுத்தலாம். பல் செட்டை சரியாகப் பொருந்தவில்லை என்றாலோ, சற்றே ஆடும்படியாக இருந்தாலோ பழகிக் கொள்ளலாம் என இருக்கக் கூடாது. பல் மருத்துவரிடம் காண்பித்து, சரி செய்து பொருத்த வேண்டும்.

கழற்றி மாட்டக்கூடிய பல் செட்டை, இரவு உறங்கச் செல்லும் முன் அகற்றி, தண்ணீரில் போட்டு வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் ஈறுகளும், வாயின் தசைகளும் ஓய்வு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஈறுகள், நாக்கு, அண்ணத்தை மென்மையான பிரஷ் வைத்து தினமும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். காலையில் பல் செட்டை மென்மையான பிரஷ்ஷை வைத்து தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதற்கென உள்ள 'டென்ச்சர் கிளீனர்'சை உபயோகிக்கலாம்.

ஆர்.வி.அபராஜிதா,

வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர், கல்பாக்கம்

97919 06962

drrvaparajitha@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us