PUBLISHED ON : செப் 01, 2021

வைரஸ் தொற்று காலத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது என நினைத்து பலரும், மூச்சு பயிற்சி, யோகாசனம் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பார்த்து செய்கின்றனர். உடற்பயிற்சி செய்வது வழக்கமாக இருந்தால், எந்தப் பிரச்னையும் இல்லை.
உடற்பயிற்சியே செய்யாதவர்கள், முறையாக பயிற்சி பெறாமல், 'வீடியோ' பார்த்து பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் போதும். அதுவும் காலை வேளையில் 8:00 மணிக்கு முன், மாலையில் 3:30 - 6:00 மணிக்குள்ளும் செய்வது நல்லது.
ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என பயிற்சி செய்வது, உடல் சோர்வையே ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக உடல் வலு, உடல் கதகதப்பு தோன்றி, பயத்தை தரலாம். எனவே, புதிதாக செய்பவர்கள், முறையான பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டும்.
மூச்சுப் பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். இந்த தொற்று காலத்தில் மக்களிடையே மன ரீதியில் குழப்பங்களும், பயமும் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், நிறைய தகவல்கள் நம் முன் வந்து கொட்டுகின்றன. இதில் பலவற்றில் தெளிவு இருப்பதில்லை; குழப்பத்தை தருவதாகவே உள்ளன.
தொற்றில் இருந்து மீண்டவர்களும், 'இன்னும் என் பொருட்களை தனியே வைக்க வேண்டுமா, வீட்டின் உள்ளேயும் முக கவசம் அணிய வேண்டுமா' என்ற பல சந்தேகங்கள் வருகின்றன. முக கவசத்தை வீட்டிற்கு உள்ளே அணிய வேண்டும் என்பதில்லை. ஆனால், சமூக இடைவெளியை வீட்டிற்கு உள்ளேயும் கடைப்பிடிப்பது நல்லது.
குளிர்சாதன அறையில் அனைவரும் ஒன்றாக துாங்கும் போது, தொற்று பாதிப்பு நீங்கினாலும், மற்றவர்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, தொற்று பாதிப்பு நேர்ந்தாலும், மற்றவர்களுடன் குளிர்சாதன அறையில் படுக்க வேண்டாம்.
வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்களை சமூக வலைதளம், நண்பர்களுடன் விவாதிக்காமல், மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவது தான் சிறப்பு. இந்த நேரத்தில் துாக்கம் முக்கியமான ஆயுதமாக செயல்படுகிறது. சரியான நேரத்திற்கு துாங்கி, சரியான நேரத்தில் விழிப்பது, உடம்பு ஆரோக்கியமாக இருக்க உதவும். தினந்தோறும் துாக்கத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
துாக்கம் வரவில்லை என்றால், கால் ஸ்பூன் சோம்பை நீரில் கொதிக்க வைத்து குடிப்பது அல்லது சிறிது ஜாதிக்காயை நீரில் கொதிக்க வைத்து குடிப்பது போன்ற கை வைத்திய முறைகளை பின்பற்றுங்கள்.
டாக்டர் மது கார்த்தீஷ்,
சித்த மருத்துவர், சென்னை
99944 93687
