PUBLISHED ON : செப் 04, 2021

நகரம், கிராமம் என எந்த பாகுபாடும் இல்லாததால், எங்கெல்லாம் அசுத்தமான சூழல் நிலவுகிறதோ, அங்கெல்லாம் 'ஹெபடைடிஸ்' வைரஸ் பரவும் தன்மை அதிகம். இது கல்லீரலில் தொற்றையும், வீக்கத்தையும் ஏற்படுத்தி, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஹெபடைடிஸ் வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி உள்ளது. இதை ஆண்டுதோறும் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் வீக்கம். சாப்பிடும் உணவில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்களை பிரிப்பது, ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வது, நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பது போன்றவை கல்லீரலின் பிரதான வேலைகள். கல்லீரலில் தொற்று ஏற்பட்டு வீக்கம் உண்டானால், அதன் பணிகள் பாதிக்கப்படும்.
காரணிகள்
தீவிர மதுப் பழக்கம், உணவு அல்லது வேறு விதத்தில் உடலுக்குள் செல்லும் நஞ்சு, சில வகை மருந்துகள் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், வைரஸ் தொற்று தான் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் பிரதான காரணி.
தொற்று பாதித்தவரின் ரத்தம் தானமாக பெறுவது, உடல் திரவங்களின் வாயிலாகவும் நோய் தொற்று பரவும்.
அறிகுறிகள்
சோர்வு, அடர்த்தியான நிறத்தில் சிறுநீர், வயிற்றில் வலி, பசியின்மை, காரணமற்ற உடல் எடை குறைதல், தோல், கண்களின் நிறம் மஞ்சளாவது போன்றவை. ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யலாம்.
சுகாதாரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், மோசமான, அசுத்தமான சுற்றுச்சூழல் இவற்றின் வாயிலாகவே, ஹெபடைடிஸ் தொற்று பரவும். எப்போதும் சுத்தமான, சமைத்த, சூடான உணவையே சாப்பிட வேண்டும். சமைக்காத இறைச்சி, மீன் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன், டையாபர், நாப்கின்களை மாற்றி, துடைத்து, சுத்தமானதை அணிவித்த பின், கைகளை சுத்தம் செய்த பின், உணவு தர வேண்டும்.
மோசமான சுகாதாரம், பாதுகாப்பற்ற குடிநீரில், அசுத்தமான உணவு வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் ஹெபடைடிஸ் - இ தொற்றுக்கு 2 கோடி பேரும், ஏ தொற்றுக்கு 1.4 கோடி பேரும் நம் நாட்டில் ஆளாகின்றனர். ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் ஹெபடைடிஸ் தொற்றால் இறக்கின்றனர்.
டாக்டர் என்.தினகரன்,
ஜீரண மண்டல சிறப்பு மருத்துவர்,
சென்னை
98411 51599
