PUBLISHED ON : ஆக 16, 2015

வீட்டுக்குள் புகுந்து நம்மை அலற வைக்கும் பூச்சி வகைகளில், கரப்பான் பூச்சிக்கு முதலிடம் உண்டு. கரப்பான் பூச்சியில், ஏராளமான இனங்கள் இருப்பதாக, பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டின் மூலை முடுக்குகளில் தங்கி தொல்லை கொடுப்பதோடு, பல்வேறு நோய்களை பரப்பும் காரணியாகவும் உள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே, இதற்கு முடிவு கட்டி விட முடியும்.
அதற்காக சில ஆலோசனைகள்:
வீட்டில், உணவு மற்றும் நீரை மூடி வைப்பது அவசியம். மேலும், கழிவுப்பொருட்களை உடனுக்குடன் அகற்றுதல், பொருட்கள் உள்ள அறை, குளிர்சாதனப் பெட்டி மற்றும் பயன்படுத்தாத அறைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம், தடுக்கலாம்.
பேக்கிங் சோடா: கரப்பான் பூச்சி அதிகம் இருக்கும் இடத்தில், ஒரு பிளாஸ்டிக் மூடியில் பேக்கிங் சோடாவை போட்டு வைத்து, கதவு ஜன்னல்களை மூடி விட வேண்டும். தொடர்ந்து 10, அல்லது 15 நாட்களுக்கு வைத்தால், அந்த வாசனைக்கு பூச்சி வராது.
பிரியாணி இலை: பிரியாணி இலையை பொடி செய்து, அதை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்துக்கு கரப்பான் பூச்சிகள் வராது.
வெள்ளைப் பூண்டு: வெள்ளைப் பூண்டுகளை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி தூவினால், கரப்பான் பூச்சிகள் ஒழிந்து விடும்.
கிராம்பு: கிராம்பு ஒரு வகையான காரம் மற்றும் வாசனை நிறைந்த மசாலா பொருள். கிராம்பு வாசனைக்கும் கரப்பான் பூச்சி வராது. அதனால், கிராம்பை பொடி செய்து, கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் தூவினால், தொல்லையை கட்டுப்படுத்தலாம்.
