PUBLISHED ON : ஜூலை 10, 2016

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில், இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும். அதிகப்படியான இரும்புச்சத்து, வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வாழைப்பழத்தில் உள்ள புருக்டோஸ், குளூக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கும். அதனால்தான் விளையாட்டு வீரர்களை, அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழம் சாப்பிட்டால் குடல் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்னை எளிதில் நீங்கிவிடும். மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்க, வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பால், உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும். வாழைப்பழத்தில் உள்ள, ட்ரிப்டோபேன் எனும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தை போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும்.
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட அல்சர் பிரச்னை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அழற்சியையும் குணமாக்கும். செரிமானமும் சீராக நடைபெறும். பொட்டாசியம் அதிகம் உள்ள, வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.
வாழைப்பழத்தில் உள்ள, குறைந்த புரோட்டீன், உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட், சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்னைகளை போக்கும். மூன்று நாட்களில் தொடர்ந்து, 89 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்னையானாலும் போய்விடும்.
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், அது மாதவிடாய் பிரச்னைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிக ரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான ரத்தப்போக்கு குறையும்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும். இதில் உள்ள பொட்டாசியம், உடல் செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும். வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜூஸ், சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி.
