தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மப்பும் மந்தாரமுமான வானம் போல வயிறும்!

மப்பும் மந்தாரமுமான வானம் போல வயிறும்!

மப்பும் மந்தாரமுமான வானம் போல வயிறும்!


PUBLISHED ON : ஆக 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது; வெயிலும் அடிக்கிறது. இப்படி மாறி மாறி ஏற்படும் சீதோஷ்ண மாறுதல், உடலினுள்ளும் மாறுதல்களை விளைவிக்கும்.

மப்பும் மந்தாரமுமாக உள்ள இந்த மழை நாட்களில், வயிற்றில் இயற்கையாக இருக்க வேண்டிய ஜீரண சக்தி குறைந்து, பல கெடுதிகள் விளையும். ஜீரணக் குறைவாலும், குடலின் சுறுசுறுப்பின்மையாலும் ஜீரணமாகாத உணவு தேங்குவதால் மப்பும் அதிகமாகிறது.

அதே போல் வானத்தில் காற்றுருவில் இருந்த ஆவியான நீர் நிலைகள் கனத்து, மறுபடியும் நீர் உருவம் பெற்று, கண்ணுக்குப் புலப்படாத சிறு திவலைகளாகி, காற்றில் கலந்துள்ளதை மந்தாரம் என்போம்.

இந்த மந்தாரம் ஆகாயத்தில் தோன்றியவுடன், நம் மூக்கிலும் மந்தாரம் காண்கிறது. மூச்சுக் காற்றின் வழியே உள்ளும் வெளியும் சென்று கொண்டிருந்த நீர்ப் பகுதிகள் உருப்பெற்று, மூச்சுக் காற்றில் கலந்து கனத்து, அதனால் ஏற்படும் குறுகுறுப்பால் தும்மலாகவும், இறுகி ஒன்று சேர்ந்து மூக்கில் கசிவாகவும், மேலும் இறுகிக் கெட்டு தலைச் சளி, மார் சளியாவதையும் காண்கிறோம்.

வெளியிலுள்ள மந்தாரம் உடலிலும் மந்தாரத்தை ஏற்படுத்துகிறது. தலை, நெற்றி, மூக்கு இவைகளில் நீர்க் கோர்வையால் ஏற்படும் கனம், வலி, வறட்சி, உளைச்சல் முதலியவை அதிகம் சிரமம் தருபவை. அவற்றைக் குறைக்க தலைப்பற்று போடுவது மிகவும் நல்லது. இம்மருந்தை எளிதாக வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

தாளிசபத்திரி - 10 கிராம், லவங்கப்பட்டை -- 5 கிராம், மிளகு - 20 கிராம், ஏலக்காய் -- 5 கிராம், சுக்கு - 30 கிராம், சர்க்கரை - 30 கிராம். சர்க்கரையை தவிர, மற்றவற்றைப் பொடித்து சலித்துக் கொள்ளவும்.

சர்க்கரையையும் பொடியாக்கி சலித்து, இத்துடன் கலந்து கொள்ளவும். ஒன்றரை டீ ஸ்பூன் பொடியை, தேன் அல்லது நெய்யுடன் கலந்து தினமும் இரு வேளை சாப்பிடலாம்.

வறட்டு இருமல், தலையில் நீர் கோர்ப்பது, இருமலால் ஏற்படும் விலா, மார்பு, தொண்டை வலி குணமாகும். நாவறட்சி, தொண்டை உலர்வது, கண், -முகம் சிவத்தல் இவையும் குணப்படும்.

குழந்தைகளுக்கு அரை டீ ஸ்பூன் அளவு தரலாம். இதனால், நல்ல பசி, ருசி, ஜீரண சக்தி ஏற்படும். உடல் எடை அதிகரித்து, சுறுசுறுப்பும் உண்டாகும்.

தலைவலிக்குபற்றுப் போட

ரேவல் சீனிக்கிழங்கு - 100 கிராம், வேப்பம் விதை - 40 கிராம் சதகுப்பை - 20 கிராம், சோம்பு - 20 கிராம், கருஞ்சீரகம் - 20 கிராம் எடுத்து, வெயிலில் நன்கு காய வைத்து ஒன்றாக இடித்து சலித்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும்.

தலையில் நீர்க் கோர்த்து தலைவலி, நீர்முட்டல், கண்ணீர் கசிதல், காய்ச்சலுக்கு பற்றுப் போட சிறந்த மருந்து, தலையில் கோர்த்த நீரை வற்ற வைத்து வலியைக் குறைக்கும்.

இரண்டு டீ ஸ்பூன் பொடியை நீரில் குழைத்து, இரும்பு அல்லது எவர்சில்வர் கரண்டியிலிட்டு, இளந்தீயில் சூடாக்கி, பொறுக்கும் சூட்டில் நெற்றிப் பொட்டு முழுக்க பற்றுப் போடவும். ஒரு நாளில் இரண்டு முறை போடலாம்.

முதலில் போட்டதை வென்னீரில் நனைத்து, துணியால் சிறிது ஊற வைத்து துடைத்து, திரும்பப் போடவும்.

டாக்டர் ரஞ்சனி சாய்ராம்,

ஆயுர்வேத மருத்துவர், சென்னை

94444 41771

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us