PUBLISHED ON : ஏப் 24, 2020

வைரஸ் பரவும் இன்றைய சூழலில், நாம் தினசரி சில வழிமுறைகளை பின்பற்றினால், நுரையீரல் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
* காலை பல் துலக்கிய பின், வெது வெதுப்பான நீரில், கல் உப்பு மற்றும் நான்கைந்து புதினா இலைகளை போட்டு, வாய் கொப்பளிக்கலாம். புதினா, கல் உப்பு இரண்டிற்குமே கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது.
* புதினா இலைகளை காய வைத்து, உப்புடன் சேர்த்து பொடி செய்து வைத்து, தினமும் ஒரு ஸ்பூன் வெந்நீரில் போட்டும் உபயோகிக்கலாம்.
* வயிற்றில் உள்ள வாயுவை அகற்றும் தன்மை, புதினாவுக்கு இயற்கையிலேயே உள்ளது. எனவே, வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு, வயிற்றையும் சுத்தம் செய்யும்.
* வெறும் வயிற்றில் தேனில் ஊறிய இஞ்சியை சிறிய துண்டு சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* தொற்று பரவும் காலத்தில், இளஞ்சூடான நீரில் குளிப்பது நல்லது. அதில், ஒரு கைப்பிடி அளவு, வேப்ப இலை, வேப்பம் பூ போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து குளித்தால், கிருமி நாசினியாக செயல்படும்.
* வேப்பம் பூவை விட, மா இலை இன்னும் நல்லது. பயத்தின் காரணமாகவே நிறைய பேருக்கு உடல் நடுக்கம், காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு இருப்பதாக சொல்கின்றனர். மா இலை, மாந்தளிர் நீரில் குளித்தால் உடல் வலி, உடல் இறுக்கம் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். நொச்சி இலையையும் பயன்படுத்தலாம்
* பச்சை கற்பூரம், ஓமம், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து, சுத்தமான துணி அல்லது கட்டு போட பயன்படுத்தும் வலை துணியில் கட்டி, அவ்வப்போது முகர்ந்து பார்ப்பது நல்லது. இந்த நெடி, சுவாச பாதை முழுவதும் சென்று, நுரையீரல் முழுக்க பரவும் போது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. மிளகின் நெடி இருமலை ஏற்படுத்துகிறது எனில், மிளகின் அளவை மட்டும் பாதியாக குறைத்து கொள்ளலாம்.
* அதேபோன்று, வெல்லம், மிளகு, மஞ்சள் மூன்றையும் சம அளவில் எடுத்து, நன்கு அரைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, அவ்வப்போது சப்பி சாப்பிடுவது, தொண்டை கரகரப்பு, சளி கட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு.
* ஆவி பிடித்தால், 'சைனஸ்' பிரச்னை, தலையில் நீர் கோர்ப்பது உட்பட, பல கோளாறுகளுக்கு தீர்வு காணலாம். சுடுநீரில், எலுமிச்சம் பழ விதைகள் மற்றும் மஞ்சளுடன் சேர்த்து போட்டு ஆவி பிடிக்கலாம்; இது மிகவும் சிறப்பானது. என்னுடைய மருத்துவ அனுபவத்தில் மஞ்சளுடன், வெண்டைக்காயின் விதைகளை போட்டு ஆவி பிடிப்பது, நல்ல பலனை அளிப்பதை பார்த்திருக்கிறேன். நொச்சி இலைகளை போட்டும் ஆவி பிடிக்கலாம்.
நீண்ட நேரம் ஆவி பிடிப்பது நல்லதல்ல. முதலில், வியர்வை வந்தவுடன், நீரை துடைத்து விட்டு, அப்படியே சற்று நேரம் இருக்க வேண்டும். உடனே மின்விசிறி கீழே அமர்வது, குளிர் நீரில் முகத்தை கழுவுவது கூடாது. இதனால், 'சைனஸ்' பிரச்னை மேலும் அதிகமாகலாம். தானாக வியர்வை அடங்கும் வரை பொறுத்து கழுவலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை ஆவி பிடித்தால் போதும்.அளவிற்கு அதிகமாக காற்று மாசுபடும் போதெல்லாம், தொற்று பரவும் அபாயம் அதிகம். தினமும், நம் வீட்டில், சுற்றுப்புறத்தில், சாம்பிராணி புகை போடுவது, மாசை நீக்கும். அதில், காய்ந்த மருதாணி இலைகள் அல்லது வெள்ளை கடுகு சேர்த்து போடுவது, இன்னும் சிறந்த பலன் தரும். வேப்பிலை, உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரே, கை கழுவுவதற்கு சிறந்த கிருமி நாசினி. தினமும், 20 நிமிட உடற்பயிற்சி செய்வது நல்லது. அசைவ உணவுகள், பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
டாக்டர் க.மது கார்தீஷ்,
சித்த மருத்துவர்,
சென்னை.
99944 93687
drmadhu kaartheesh@Gmail.com
