PUBLISHED ON : ஏப் 25, 2020

சென்னை, ''கொரோனா தொற்று பரவுவது அபாயகரமாக இருந்தாலும், பீதி அடைய வேண்டாம். தனித்திருந்து, பொது இடங்களில் எதையும் தொடாமல், எதன் மீதும் படாமல் இருந்தால், நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இன்னொரு புறம், கபசுர குடிநீர் பருகுவதும், சில மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பதும், தொற்று கிருமியை முழுமையாக நம் உடலிலிருந்து அழித்து விடும்,'' என, தைரியம் ஊட்டுகிறார், சித்த மருத்துவர் வீரபாபு.அவர் கூறியதாவது:
கொரோனா தொற்றிலிருந்து நம்மை காக்க வேண்டிய மிக முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் மூவரும், கீழ்கண்ட முறையில் சிகிச்சை முறையை பின்பற்றினால், தொற்றிலிருந்து முற்றிலும் நீங்கி விடலாம்.டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும்:
* நோயாளியை தொட்டு சிகிச்சை அளித்த அடுத்த நொடியிலேயே, துளசி, நொச்சி, வேப்ப இலை, மஞ்சள், தழுதாலை, கற்பூரவல்லி, ஆடாதொடை இலைகள் போட்டு கொதிக்க வைத்த நீரில், ஆவி பிடிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது, மூக்கின் வழியே, சுவாச மண்டலத்திற்கு உள்ளே நுழையும் நிலையில் உள்ள, கிருமிகளின் செயல்திறன் குறைத்து விடும். ஒவ்வொரு நோயாளியையும் தொட்டு, சிகிச்சை முடிந்த உடன், இதைச் செய்ய வேண்டும். தினந்தோறும் காலை, 50 மி.லி., கபசுர குடிநீரை பருக வேண்டும். ஐந்து நாட்கள் பருகிய பின், வாரம் இரு முறை பருகினால் போதும்.
நோயாளிகளுக்கு
* மேலே சொன்ன ஆவி பிடித்தல் முறை, நோயாளிகளுக்கும் மிகச் சிறந்தது. இதை தொடர்ந்து செய்து வந்தால், நாள்பட்டு எடுக்க வேண்டிய சிகிச்சையின் காலம் குறைந்து, சீக்கிரம் குணமடைய முடியும்.
* தினமும் காலையும், இரவும், உணவுக்கு பின், சுதர்சன மாத்திரை இரண்டு, தாளிசாதி சூர்ண மாத்திரை இரண்டு உட்கொள்ள வேண்டும்
* காலை, மதியம், இரவு நேரங்களில், உணவுக்கு அரை மணி நேரம் முன், கபசுர குடிநீர் குடிக்க வேண்டும். 5 கிராம் பொடியில், 250 மி.லி., தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, அது, 50 மி.லி.,யாக சுண்டியவுடன், வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
* காலை, மாலை நேரங்களில், துாதுவளை சூப் அருந்தலாம்.
பொதுமக்களுக்கு
* தொடர்ந்து ஐந்து நாட்கள் மட்டும், காலை வெறும் வயிற்றில் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்குப் பின், வாரம் ஒரு முறை, கபசுர குடிநீர் பருகி வந்தால், கிருமி தொற்றைத் தவிர்க்கலாம். மேலே சொன்ன அனைத்துமே, சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்.
* இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு இவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். முடிந்தவரை துாதுவளை, பிரண்டை, வேப்பம்பூ போன்ற மூலிகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
நோயாளிகளை பராமரிப்பது எப்படி?
''நோயாளிகளை பராமரிப்பதில் எளிய முறையை பின்பற்றலாம்,'' என, டாக்டர் வீரபாபு கூறினார்.அவர் கூறியதாவது:'வென்டிலேட்டர்' பராமரிப்பில் இருக்கும் நோயாளிகளை தவிர, மற்ற நோயாளிகளை, மரங்கள் நிறைந்த காற்றோட்டமான திறந்த வெளியில், பரந்த சூழலில், காலை, மாலை நேரங்களில், வெயில் படும்படி படுக்க வைக்கலாம். காற்றில் இத்தொற்று பரவும் என்றெல்லாம் பயப்பட வேண்டாம்; அப்படி பரவுவதற்கான அறிவியல்பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை. எனவே, பெரிய மைதானங்கள் உடைய கல்லுாரிகளில், இதற்கு ஏற்பாடு செய்யலாம். ஒவ்வொரு நோயாளிக்கும் இடையே, உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள, இடைவெளி விட்டு படுக்க வைத்தால், நோயாளிகள் மனரீதியாக தெம்பாகி விடுவர். இயற்கையான ஆக்சிஜனை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், நோயாளிகள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பர். இரவு நேரங்களில், வகுப்பறைகளில் அவர்கள் தங்கிக் கொள்ளலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றினால், நோயாளிகள் சீக்கிரம் குணமடைந்து, வீடு திரும்புவர்; மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாது. இவ்வாறு, அவர் கூறினார்.
