PUBLISHED ON : மே 20, 2012

இந்த ஆப்பரேஷன் செய்வதே வழக்கம்போல, சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொள்ளத் தான். ஓய்வு எடுப்பதற்காக அல்ல. எனவே மறுபடியும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து, இதயம் நன்கு செயல்படுகிறது என்பதை உறுதி செய்துகொண்டு, அனைத்து வேலைகளையும் செய்யலாம்.
* மாணிக்கவாசகம், பாலவநத்தம்: என் வயது 50. சர்க்கரை பாதிப்பு இல்லை. எனக்கு, Non Medicated Stent பொருத்தப்பட்டது. அதிலிருந்து அதிகம் மூச்சு வாங்குகிறது. எவ்வித முன்னேற்றமும் இல்லை. நான் என்ன செய்வது?
ஸ்டென்ட் பொருத்தியவருக்கு அதிகம் மூச்சு வாங்குகிறது என்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். இதயத்தின் ரத்தம் வெளியேற்றும் திறன், மாரடைப்பால் குறைந்திருக்கக் கூடும் அல்லது ஸ்டென்டில் மறுபடியும் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம்; வேறு இடத்தில் அடைப்பு வந்திருக்கலாம் அல்லது ரத்த சோகை ஏற்பட்டு இருக்கலாம்.
எனவே, டாக்டரிடம் சென்று, ரத்தப் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ பரிசோதனை, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கவும். இதில், எதனால் மூச்சு வாங்குகிறது என கண்டறிய முடியும். அதற்கேற்ப சிகிச்சையும் அமையும்.
* ஆர்.சந்திரசேகரன், காரைக்குடி: எனக்கு, நான்கு மாதத்திற்கு முன், மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது எந்த தொந்தரவும் இல்லை. தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். அதேசமயம் தொடர்ந்து சிகரெட்டும் பிடிக்கிறேன். இதனால் பாதிப்பு வருமா?
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒரு இதய நோயாளி சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால், அவரது இதயத்திற்கு கிடைக்கும் பலன், ஆஞ்சியோபிளாஸ்டி, 'பைபாஸ் சர்ஜரி' சிகிச்சைகளை விட மேலானது. ஆகவே நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதே, உங்கள் இதயத்திற்கு நீங்கள் செய்யும் முதற்படி நடவடிக்கையாக இருக்கும்.
நீங்கள் தொடர்ந்து புகைபிடித்தால் மறுபடியும் மாரடைப்பு வரும் தன்மை பலமடங்கு அதிகரிக்கிறது. எனவே நீங்கள் உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்தியே ஆக வேண்டும். இத்துடன் சரியான உணவுப் பழக்கம், தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியம். வெறும் மருந்து, மாத்திரைகளை மட்டும் நம்புவது அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல.
* கே.கமலகண்ணன், கோவை: மாரடைப்புக்கான நவீன வைத்திய முறைகள் என்னென்ன உள்ளன?
மாரடைப்பு என்பது, இதய ரத்தநாளத்தில் ரத்தக்கட்டி ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவது. இப்பாதிப்பு ஏற்படுவோருக்கு பொதுவாக நடுநெஞ்சில் அழுத்தமாகவும், மூச்சுத் திணறல், வியர்வை போன்ற அறிகுறிகளுடனும் வெளிப்படும்.
மாரடைப்புக்கான சிகிச்சையில் முதன்மையானது, ஒருவர் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்கிறாரோ அதுவே மாரடைப்பின் தீவிரத்தையும், நீண்ட கால பலனையும் தீர்மானிக்கிறது. நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் இதயத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவியாகும் உடனடியாக நீங்கள் ஆஸ்பிரின் 325 மி.கி., மாத்திரையை அவருக்கு வழங்க வேண்டும். இம்மாத்திரை வலியை குறைக்க அல்ல. ரத்தக் கட்டியை சரிசெய்ய இதய மருத்துவத்தில் பலவித நவீன மருந்துகள் வந்துள்ளன. குறிப்பாக PRASUGREL என்ற மருந்து, ரத்தக் கட்டியை சரிசெய்கிறது. இத்துடன் ரத்தக் கட்டிகளை கரைக்க, பல்வேறு மருந்துகள் உள்ளன. இதை எவ்வளவு சீக்கிரம் நோயாளிக்கு தருகிறோமோ அவ்வளவு பலனை தருகிறது. இதுதவிர, பிரைமரிஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறையில், மாரடைப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கும்போதே, அவருக்கு பலூன், ஸ்டென்ட் சிகிச்சை மூலம், ரத்த அடைப்பு நீக்கப்படுவது தான் தற்போதுள்ள சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது.
இச்சிகிச்சையின்போது சில நவீன மருந்துகளாக, GP2B3A என்ற மருந்துகளும், இதயத்திற்குள் செலுத்தப்படுகின்றன. எனவே நேரத்தை வீணடிக்காமல், உடனடியாக டாக்டரிடம் செல்வதே, மிக முக்கியமான நடவடிக்கை.
* பி.இந்துமதி, திண்டுக்கல்: என் கணவருக்கு, 'பைபாஸ் சர்ஜரி' செய்து ஒன்பது மாதங்களாகிறது. அவர் இன்னும் பயத்தில் இருந்து மீளவில்லை. எப்போதும் ஓய்வாகவே இருக்கிறார். வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், எங்களை பயமுறுத்துகிறார். இதுசரியா?
'பைபாஸ் சர்ஜரி' என்பது இதய ரத்தநாளத்தில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, இதய ரத்தநாளத்தில் பொருத்தும் ஆப்பரேஷன். இதை செய்து, 3 மாதங்களுக்குப் பிறகு, ரத்தப் பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்-ரே, எக்கோ பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை செய்வர். இவை அனைத்தும், 'நார்மலாக' இருந்தால், இதயம் சீராக உள்ளதென அர்த்தம். அதன் பின் எல்லா வேலைகளையும், உடல், மனஅழுத்தம் இன்றி தாராளமாக தொடரலாம்.
இந்த ஆப்பரேஷன் செய்வதே வழக்கம்போல, சுறுசுறுப்பாக பணிகளை மேற்கொள்ளத் தான். ஓய்வு எடுப்பதற்காக அல்ல. எனவே மறுபடியும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து, இதயம் நன்கு செயல்படுகிறது என்பதை உறுதி செய்துகொண்டு, அனைத்து வேலைகளையும் செய்ய அவரை ஊக்கப்படுத்துங்கள்.

