PUBLISHED ON : மே 20, 2012
*பி.சேவுகராஜ், சிவகங்கை: என் எடையை குறைப்பதற்கு, நான் மருந்துகளை உபயோகிக்கலாமா?
நவீன மருத்துவத்தில், எடையை குறைக்க நிறைய மருந்துகள் வந்துள்ளன. அனைத்து மருந்துகளுக்கும், பல்வேறு பக்க விளைவுகள் உள்ளன. அதுமட்டுமின்றி மருந்துகளை நிறுத்தியபின், எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இம்மருந்துகளின் விலையும் அதிகம். எடையை குறைக்க மிகச்சிறந்ததாக கருதப்படுவது, உணவுக் கட்டுப்பாடு தான். அரிசி, சர்க்கரை, எண்ணெயை நன்கு குறைத்து, 'ஸ்நாக்ஸை' தவிர்ப்பது முக்கியம். தினசரி ஒரு மணிநேரம் கடுமையான உடற்பயிற்சி செய்தால், நிச்சயம் உடல் எடை குறையும். எப்போதுமே வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகள் தான் சிறந்தது.
* எஸ்.பரமசிவம், சிவகாசி: மன அழுத்தத்திற்கும், இதய பாதிப்புக்கும் நேரடி தொடர்பு உண்டா?
மன அழுத்தத்தால் இதயத்துக்கு நேரடி பாதிப்பு நிச்சயம் உண்டு. மனஅழுத்தம் உள்ளவருக்கு இதய துடிப்பு, ரத்தஅழுத்தம் அதிகரிக்கிறது. இது இதயத்தின் ரத்தநாளத்தை சுருங்கச் செய்கிறது. இதனால் இதயத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாரடைப்பு வரும் தன்மை, பலமடங்கு அதிகரிக்கிறது.
இதுமட்டுமின்றி, மன அழுத்தம் உள்ளவர்கள், புகை பிடித்தல், குடிப் பழக்கம் அதிகரிப்பதுடன், அதன் தொடர்ச்சியாக அதிகமான உணவும் சாப்பிடுகின்றனர். உடற்பயிற்சியும் குறைகிறது. இவை அனைத்தும், இதயத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. எனவே, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, இதயத்துக்கு மிகச் சிறந்த டானிக்காக அமையும்.
டாக்டர் விவேக்போஸ், மதுரை

