PUBLISHED ON : அக் 28, 2012

சர்க்கரை நோயைக் கண்டறிய அறிமுகப்படுத்தப்பட்ட, எச்பிஏ1 சி, பரிசோதனை முறை ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கண்டறியவும், புரிந்து கொள்ளவும், கண்காணிக்கவும், வைத்தியம் பார்க்கவும் உதவுகிறது.
கணையத்திலுள்ள பீட்டா செல்லின், இன்சுலின் சுரக்கும் தன்மை குறைவால், சர்க்கரையின் அளவு, ரத்தத்தில் அதிகமாகிறது. காலையில் வெறும் வயிற்றுடன், ரத்தத்தை சோதனை செய்யும் போது, சர்க்கரையின் அளவு, 110 மி.கி.,க்கு அதிகமாக இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கும் போது, சர்க்கரையின் அளவு, 140 மி.கி.,க்கு அதிகமாக இருந்தாலும், சர்க்கரை நோய் உள்ளது என, சமீப காலம் வரை எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால், அமெரிக்காவின் சர்க்கரை நோய் கழகமும், ஐக்கிய ஐரோப்பிய நாடுகளின் சர்க்கரை நோய் ஆய்வு மையமும், பன்னாட்டு சர்க்கரை நோய் பெடரேஷனும் சேர்ந்து, சர்க்கரை நோயைக் கண்டறிய அறிமுகப்படுத்திய, எச்பிஏ1 சி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கண்டறியவும், புரிந்து கொள்ளவும், கண்காணிக்கவும், வைத்தியம் பார்க்கவும், இன்று உதவுகிறது.
நோயற்றவர்களுக்கு, சராசரியாக, எச்பிஏ1சி, அளவு, 5.6 சதவீதமும்; சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு, 5.7 முதல், 6.4 சதவீதமும்; 6.5 முதல், 7 சதவீதத்திற்கு மேல் இருந்தால், சர்க்கரை நோய் இருப்பதாகக் கொண்டு, சிகிச்சையும் பெற வேண்டும்.
அதே போல், பெரியவர்களுக்கு, 7 சதவீதத்திற்கு குறைவாகவும், அதிகமாகவும் இருந்தாலும்; இளைஞர்களுக்கு, 7.5 சதவீதத்திற்கு அதிகமாகவும்; குழந்தைகளுக்கு, 8.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய்க்கான, சிகிச்சை அவசியம்.
சில ஆண்டுகளாக, பல ஆய்வுகளும், எச்பிஏ1சி பற்றி வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஆய்வு, 15 ஆயிரத்து 780 சர்க்கரை நோயாளிகளிடம் மேற்கொண்ட, ஐரோப்பிய நாடுகளின் ஆய்வு.
எச்பிஏ1சி அளவு, அதிகமாக அதிகமாக, மாரடைப்பு நிச்சயம் வருவதாக ஆய்வு கூறுகிறது. இது எப்படி?
ஒரு சதவீதம் எச்பிஏ1சி உயர்வால், 19 சதவீதம் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதய நோய்களுக்கு, எச்பிஏ1சி அளவு, சரியாக இருக்க வேண்டும். பைபாஸ் சர்ஜரி செய்து கொள்பவர்கள், முன்கூட்டியே, எச்பிஏ1சி அளவு, சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நெஞ்சு வலி, மாரடைப்பு வந்தவர்களுக்கு, திரும்ப திரும்ப மாரடைப்பு வராமலிருக்க, இந்த அளவு முக்கியம். அதோடு, டி.ஜி.எல்., - எச்.டி.எல்., - எல்.டி.எல்., அளவும் முக்கியமானது. பைபாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது, எச்பிஏ1சி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
எச்பிஏ1சி அளவு, தாறுமாறாக உயரும் போது, பைபாஸ் கிராப்ட், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டன்ட் மூடுவதற்கான வாய்ப்புள்ளது. ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால், லிப்பிட் புரபைல் போன்றவைகளும், இதற்குக் காரணம். இ.சி.ஜி.,யில் துடிப்பு வகை, எக்கோவில், இதய அறைகளின் வீக்கம் முதலியவை மனதில் வைத்து, வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில், மருத்துவர்கள் உள்ளனர்.
சர்க்கரை நோயால் எப்படி, உடலிலுள்ள சிறு ரத்தக் குழாய்கள் பாதிப்பை கண்டறிவது?
'ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரை சாப்பிடுகிறேன். அதனால், எனக்கு சரியாக இருக்கிறது' என, மருத்துவர் ஆலோசனை இன்றி வாழ்பவர்களுக்கு, ரத்தக் குழாய் பாதிப்பு ஏற்பட்டு, கண் மற்றும் சிறுநீரக பாதிப்பும் ஏற்படுகிறது. சமீபத்தில், ஜெர்மனியிலுள்ள முனிஷ் நகரில், உலக இதய மாநாட்டில், கலந்துரையாடல் மற்றும் பல வல்லுனர்கள் ஆய்வு நடந்தது.
இறுதி நாள், நாடு திரும்பும் போது, ஒவ்வொருவரும் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய கருத்துக்களில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எச்பிஏ1சி, கெட்ட கொழுப்பு, மைக்ரோ ஆல்புமினூரியா, இவை அனைத்தும், இதயம், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயினுள், எப்படி அடைக்கின்றன, இவற்றின் அளவுகளை, எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்பது பற்றி தான் இருந்தது.
பேராசிரியர் சு. அர்த்தநாரி
டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்
221, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 14.இ-மெயில்:
drarthanarisubbu54@gmail.com