ஆயுர்வேதம் - தோஷங்கள் அளவோடு இருந்தால் பிரச்னை இல்லை!
ஆயுர்வேதம் - தோஷங்கள் அளவோடு இருந்தால் பிரச்னை இல்லை!
PUBLISHED ON : அக் 28, 2012
கல்பனா என்ற சிறுமிக்கு, வயது 10. அவளும், அவளது தாயாரும் பட்ட இன்னல்கள் சொல்லிற்கடங்காது. கல்பனாவிற்கு மலம் கழிக்கும் உணர்ச்சி என்பது, ஒரு எள்ளளவும் கிடையாது. எந்த நேரத்திலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும், இந்த சிறுமிக்கு மலம் வெளியாகும். மலம் வெளியான பிறகு தான் அவள் உணர்வாள். இந்தக் குழந்தை வீட்டில் இருக்கும் போது, இடைவிடாமல் அவள்தாய் அவளை கவனிப்பாள்.
கல்பனாவை முதலாவதாக, ஒரு குழந்தைகளுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவரிடம் அழைத்து சென்றாள். அவருக்கு, இந்த வியாதி என்னவென்றே புரியவில்லை. நீங்கள் இதை சும்மாவிட்டால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்றார் ஒரு மருத்துவர்.
ஆனால், இது போன்ற வியாதி, வேறு எந்த சிறுவர்களிடமும் காண்பதில்லையே என்ற கேள்விக்கு பதில் ஒன்றும் இல்லை. பின், ஒரு மருத்துவர் ஒரு மலமிளக்கி மருந்தை அளித்தார். அதை எடுத்தபின், இந்த சிறுமியின் நிலைமை மிகவும் மோசமாகியது.
'இந்த சிறுமியின் வியாதி, ஒரு புதிய கோளாறாக உள்ளது. இதற்கு மருந்தேதும் கிடையாது; எனவே, இது ஒரு மனவியாதி' என முடிவுக்கு வந்தனர். சிறுமியை குழந்தைகளின் மனவியாதிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் அழைத்து சென்றாள். எந்த டாக்டரிடமும், அக்குழந்தையின் நோய்க்கு, தீர்வு கிடைக்கவில்லை.
இக்குழந்தையும் தன் பிரச்னையால் மிகவும் மனம் நொந்து போனாள். அவள் படிக்கும் பள்ளியில், இவளை சேர்க்க மறுத்தனர். வேலைக்குப் போகும், தாய்மார்களின் குழந்தைகளை கவனிக்கும் காப்பகங்கள், இந்த சிறுமியை சேர்க்க மறுத்தன.
இறுதியில் இந்தத் தாய், அவள் பள்ளி ஆசிரியர்களின் அறிவுரைப்படி ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்தாள். ஆயுர்வேத சிகிச்சைப்படி, இந்த நோயானது வாயுவின் கோளாறாகவும், ஜீரணக் கோளாறாகவும் கண்டறியப்பட்டது. பின் இக்குழந்தைக்கு உகந்த உணவுப் பழக்க வழக்கங்களை எடுத்துரைத்தோம்.
ஜீரண சக்தியைத் தூண்டவும், அடிவயிற்றில் மலத்தை வெளிதள்ளும், அபான வாயுவின் போக்கை சரி செய்ய, ஒரு லேகிய மருந்தையும், இடுப்பிற்கு கீழ்பகுதியான அடி வயிறு, தொடைப்பகுதிகளில் ஒரு தைலத்தையும் வழங்கினோம்.
இந்த மருந்தை பயன்படுத்தத் துவங்கிய, 24 மணி நேரத்திற்குள், இந்த சிறுமியின் தொல்லை அடியோடு நீங்கியது. அவள் ஒவ்வொரு முறை மலம் கழித்த போதும், அதை உணர்ந்தாள்.
ஒரு வியாதியில், பல விதங்கள் உண்டு. பெரும்பாலும் ஒரே தோஷத்தினால் ஏற்படும் வியாதிகளை, எளிதில் குணப்படுத்தலாம். சில வேளைகளில் வாத, பித்த, கபம் என்ற மூன்றும் சேர்ந்து வரும் வியாதியை, எளிதில் குணப்படுத்த இயலாது.
நோயாளிகள், தங்கள் வியாதிகளின் ஆரம்ப நிலையிலேயே வைத்தியம் செய்து, நோயை குணப்படுத்துவது அவசியம். நோயாளிகள், ஆயுர்வேத வைத்தியத்திற்கு வரும் போது, வியாதியால் பல ஆண்டுகள் அவதிப்பட்டு, வேறு வழியேதும் இல்லாமல், ஆயுர்வேத சிகிச்சையை நாடுகின்றனர்.
ஏன் இவ்வளவு காலதாமதம் என்ற கேள்விக்கு, ஒரே பதில் என்னவென்றால், 'ஆயுர்வேத சிகிச்சை முறைகளைப் பற்றி, எங்களுக்கு யாரும் எடுத்துரைக்கவில்லை' என்பது தான். ஆயுர்வேத சிகிச்சையால் அனேக விதமான வியாதிகளையும் குணப் படுத்த இயலும் என்பதை வலியுறுத்துவதே, இக்கட்டுரையின் நோக்கம்.
டாக்டர் பி.எல்.டி. கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்
63 காமராஜ் அவென்யூ முதல் தெரு,
அடையாறு, சென்னை - 20.
sanjeevanifoundation@gmail.com