அலோபதி - தடுப்பூசியால் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்!
அலோபதி - தடுப்பூசியால் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்!
PUBLISHED ON : செப் 09, 2012
வைரசால்
கடுமையான கல்லீரல் வீக்கம் கொண்ட நோயாளிகளில், 90 சதவீதம் பேர்
பின்விளைவுகள் ஏதுமின்றி குணமடைகின்றனர். 3 - 6 சதவீதம் நோயாளிகளுக்கு,
நாட்பட்ட கல்லீரல் வீக்கம், கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று
ஏற்படுகின்றன.
உலக அளவில், 30 லட்சம் மக்கள், 'ஹெப்படைடிஸ் - ஏ'
தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். ஆண்டிற்கு, 15 லட்சம் மக்கள், 'ஹெப்படைடிஸ் -
பி' தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம், கடுமையான வைரஸ் தொற்று.
பின், நாட்பட்ட கல்லீரல் நோய் உண்டாகி, கல்லீரல் அரிப்பாக மாறுகிறது அல்லது
கல்லீரல் புற்று நோயாகிறது. இந்த இரண்டு தொற்று நோய்க்கும், தடுப்பு
மருந்து உண்டு.
அதீதமான ஈரல் அழற்சியும், அதிகப்படியான ஈரல் திசுக்களின் அழிவும், கீழ்க்காணும் காரணங்களால் ஏற்படுகின்றன.
* வைரஸ் கிருமிகளின் தாக்கம் (வைரஸ் எ, பி, சி, இ, எப்ஸ்டீன் வைரஸ்)
* வைரஸ் அல்லாத கிருமிகளின் தாக்கம் (டெக்சோ பிளாஸ்மா, லெப்டோஸ் பைரா)
* சில மருந்துகள்
* மது
* நஞ்சுகள்
'ஹெப்படைடிஸ் - ஏ' என்றால் என்ன?
உலகிலேயே
அதிகமாக காணப்படும் நோய், 'ஹெப்படைடிஸ் - ஏ' எனப்படும் வைரசால் உண்டாகும்
கல்லீரல் வீக்கம் ஆகும். அதிகமாக பரவும் இவ்வைரஸ் கிருமி, தொற்றும் நோய்.
பலதரப்பட்ட நோய் நிலைகளை தாண்டி, மருத்துவமனை சிகிச்சை அல்லது சில
நேரங்களில் இறப்பிற்கும் கூட வழி வகுக்கிறது.
'ஹெப்படைடிஸ் - ஏ' பரவுவது எப்படி?
* மலக்கழிவுகளால் ஏற்படும் சாக்கடை நீர்களின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
* பழச்சாறு, பால் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள் இவைகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
* வெளி உணவகங்களின் மூலம், உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலமும் தொற்று பரவும்.
ஏன், 'ஹெப்படைடிஸ் - ஏ' அதிகமாக தொற்றி பரவுகிறது?
'ஹெப்படைடிஸ்
- ஏ' வைரஸ் இறுதிவரை சூழலை எதிர்த்து, நீண்ட காலம் வாழும் திறன் கொண்டது.
இது கடல் நீரில் வார கணக்கில் உயிர்வாழக் கூடியது. உறைய வைப்பதன் மூலம்
அழிக்கப்படுவதில்லை, நீரின் மூலம் விரைவாக பரவக்கூடியது.
'ஹெப்படைடிஸ் -
ஏ' உங்களை தாக்கினால் என்ன நிகழும்? வைரஸ் தொற்றுக்குள்ளான நேரத்தில்,
அந்நபர் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். பொதுவாக எதிர் கொள்ளும்
அறிகுறிகள், காய்ச்சல், சோர்வு, பசியின்மை, குமட்டல், வயிறு உபாதைகள்,
சிறுநீர் கருத்த நிறத்தில் இருத்தல், கண்கள் மஞ்சளாதல்.
நோயாளி மேற்கண்ட
அறிகுறிகளில், அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ அனுபவிக்கலாம். வயதைப்
பொருத்தும், கருவுற்ற காலங்களிலும் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.
அறிகுறிகள், மூன்று வாரத்திலிருந்து, மூன்று மாத கால அளவிற்குத்
தெரியலாம்.
'ஹெப்படைடிஸ் - ஏ' உங்களுக்கு உள்ளது என்பதை எப்படி அறிவீர்கள்?
ரத்த பரிசோதனையில், ஐ.ஜி.எம்., ஆன்டிபாடி அதிகரித்திருக்கும்.
'ஹெப்படைடிஸ் - ஏ' வைரஸ்க்கான அதிக அபாயம் யாருக்குள்ளது?
வளர்ந்த
நாடுகளிலிருந்து, வளரும் நாடுகளுக்கு பயணம் செல்லும் நபர்கள், ஓரின
சேர்க்கை, போதை மருத்திற்கு அடிமையானவர்கள், குறைந்த நோய் எதிர்ப்புத்
திறன் உள்ளவர்கள், சாக்கடை சுத்தி கரிப்பு பணிபுரிபவர்கள், ஹெப்படைடிஸ்
ஏ-க்கான தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள்.
'ஹெப்படைடிஸ் - ஏ' வை ஒருவர் எவ்வாறு தடுக்க முடியும்?
கைகளைச் சுத்தமாகக் கழுவவும், சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும்.
'ஹெப்படைடிஸ் - பி' என்றால் என்ன?
'ஹெப்படைடிஸ்
- பி' என அழைக்கப்படும் வைரசால் உண்டாகும் தொற்று இது. இது, கடுமையான
கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல்
அரிப்பு, கல்லீரல் புற்று ஆகியவற்றை உண்டாக்கும். வைரசால் உண்டாகும்
கல்லீரல் வீக்கத்தில், இது மிகவும் அபாயகரமானது.
'ஹெப்படைடிஸ் - பி' பரவுவது எப்படி?
*மருத்துவ
தொழில் சார்ந்தவர்களுக்கு, தொற்றுடைய நபரின் ரத்தம் அல்லது உடல் திரவங்களை
(உமிழ்நீர், விந்து, யோனி சுரப்பு) தொடுவதன் மூலமும், ஊசி குத்திய
காயத்தாலும் பரவுகிறது.
* நோய் பாதிக்கப்பட்டவரிடம் உடல் உறவு கொள்வதன் மூலம்.
* பிரசவத்திற்கு முன் தொப்புள் கொடி மூலம், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகிறது.
* போதை மருந்து பழக்கமுள்ளவர் (பாதுகாப்பற்ற முறையில் ஊசி பரிமாறி கொள்ளுதல் )
* மருத்தவமனைகளில் சரிவர கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை, மறுமுறை பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கிடையில் பரவுகிறது.
'ஹெப்படைடிஸ் - பி' தொற்று உருவாகும் அபாயம் அதிகமுள்ளவர்கள் யார்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர் பின்வரும் நபராக இருப்பின், அபாயம் அதிகமாகும்.
* ஹெப்படைடிஸ் - பி வைரஸ் தொற்றுடைய ஒருவருடன் உடலுறவு கொள்பவர்.
* ஒன்றுக்கு மேற்பட்ட துணையிடம் உடலுறவு கொள்பவர்.
* ஓரினச் சேர்க்கை கொள்பவர்.
* வாழ்நாள் முழுவதும், 'ஹெப்படைடிஸ் - பி' வைரஸ் தொற்றுடையவருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்.
* 'ஹெப்படைடிஸ் - பி' பொதுவாக உள்ள இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவர்.
* மருத்துவ சம்பந்தமான மற்றும் ரத்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் பணியில் ஈடுபடுபவர்.
* போதை மருந்திற்கு அடிமையானவர்.
'ஹெப்படைடிஸ் - பி' அறிகுறிகள் என்ன?
சில
நேரங்களில், 'ஹெப்படைடிஸ் - பி' வைரஸ் தொற்றுடைய நபர், எவ்வித அறிகுறியும்
இன்றி இருக்கலாம். அறிகுறிகள், 'ஹெப்படைடிஸ் - ஏ' வைரஸ் தொற்றில்
உண்டாவதை போன்றதே. 10 சதவீதம், 'ஹெப்படைடிஸ் - பி' வைரஸ், நாட்பட்ட
கல்லீரல் நோய், கல்லீரல் புற்றை உண்டாக்க கூடியது.
கல்லீரல் வீக்கத்தின் பின்விளைவுகள்
வைரசால்
கடுமையான கல்லீரல் வீக்கம் கொண்ட நோயாளிகளில், 90 சதவீதம் பேர்
பின்விளைவுகள் ஏதுமின்றி குணமடைகின்றனர். நீண்டகாலம் தொடருகையில், 3 - 6
சதவீதம் நோயாளிகளுக்கு, பின்வரும் பின் விளைவுகள் உண்டாகின்றன.
* நாட்பட்ட கல்லீரல் வீக்கம்
* கல்லீரல் அரிப்பு / இறுக்க நிலை
* கல்லீரல் புற்று
'ஹெப்படைடிஸ் - பி' வைரஸ் தொற்றை எவ்வாறு கணிக்க முடியும்?
ஹெப்படைடிஸ்
- பி நோயை கணிக்க, ரத்த பரிசோதனை தேவைப்படும். நோயானது கடுமையான அல்லது
நாட்பட்ட நிலையில் உள்ளதா என்பதை அறிய, முழுரத்தப் பரிசோதனை அவசியம்.
மேலும், வைரசின் தீவிர நிலை, வைரசின் உட்பிரிவுகள் ஆகியவற்றையும் கண்டறிய
முடியும்.
'ஹெப்படைடிஸ்' வைரசை, ஒருவர் எவ்வாறு தடுக்க முடியும்?
ரத்தம்
இருக்க வாய்ப்புடைய, தனிப்பட்ட முறையில் கையாளும் பொருட்களான சவரகத்தி,
பல்துலக்கும் தூரிகை, துண்டு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள கூடாது.
முடிதிருத்தம் செய்தல், பச்சைகுத்துதல், ஊசி போடுதல், இவைகள் செய்யும் முன்
நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் உடலுறவு
கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகாமல் தடுத்துக்
கொள்ளுதல்.'ஹெப்படைடிஸ் - பி' தடுப்பூசி, மிக சக்தி வாய்ந்த காப்பு
முறையாகும்.
தடுப்பூசி உங்களை காக்குமா?
'ஹெப்படைடிஸ் -
ஏ' தடுப்பூசி, உங்கள் உடலில், 'ஆன்டிபாடி'யை உற்பத்தி செய்வதன் மூலம்,
உடலின் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கிறது. அதனால் மிகவும் சக்தி வாய்ந்த
தடுப்பு முறையாக, இது அமைகிறது.
குழந்தைகள், 18 வயது வரையுள்ள
சிறுவர்கள், இதற்கு முன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நடுவயதினர், அதிக
அபாயமுள்ள பிரிவினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
'ஹெப்படைடிஸ் -
ஏ , பி' தொற்றுக்களை விளையாட்டாக கருதி விட்டு விடாதீர்கள். அறியாமை
நல்லதல்ல. உங்கள் குழந்தையின் ஆசையான உணவு கூட, 'ஹெப்படைடிஸ் - ஏ'வை
உண்டாக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டு, உங்களை
'ஹெப்படைடிஸ்' தொற்று நோயிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்.
பேராசிரியர் என். தினகரன்
வயிறு மற்றும் குடல் நோய் பிரிவு தலைவர்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
போன்: 98411 51599