PUBLISHED ON : அக் 16, 2011

டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக உள்ளது. ஆண்டு தோறும், 10 கோடி பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவிலும், டெங்கு காய்ச்சலால் ஏராளனமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
மழைக்காலத்தில் தான், டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் செப்டம்பரில் தொடங்கி, டிசம்பர் வரை டெங்கு காய்ச்சல் பரவும் காலமாக கருதப்படுகிறது. டெங்கு வைரசை பரப்பும் கொசுக்கள், மழை காலத்தில் அதிகம் உற்பத்தியாவதே இதற்குக் காரணம்.
சமீப ஆண்டுகளாக, இந்தியக் குழந்தைகளை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமாக கருதப்படுவது, டெங்கு காய்ச்சல். எல்லா மாநிலங்களிலும், பரவலாகக் காணப்படுகிறது. இது, 'எலும்பை முறிக்கும் நோய்' என்றும் அழைக்கப்படுகிறது. இக்காய்ச்சலுக்கு 'டெங்கு' வைரஸ் காரணமாக இருப்பதால், இது 'டெங்கு காய்ச்சல்' என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் 4 வகைகளை கொண்டது.
கொசு மூலம் பரவும்: டெங்கு காய்ச்சல், 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசு மூலம் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள், டெங்கு வைரஸ் கிருமியை ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலுக்கு எடுத்துச் செல்லும் கருவியாகச் செயல்படுகின்றன. இக்கொசுக்கள் ஒரு மனிதரை கடிக்கும் போது, அவரது உடலில் டெங்கு வைரஸ் இருந்தால், முதலில், கொசுவின் உடலுக்குள் வைரஸ் செல்லும். பின் அக்கொசு, வேறொரு மனிதரைக் கடிக்கும்போது, கொசுவிடமிருந்து டெங்கு வைரஸ், அவரது உடலில் தொற்றிக் கொள்ளும்.
இக்கொசு, பகலில் கடிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக காலை நேரங்களில் அதிகம் கடிக்கும். இவை, சூரிய ஒளியில் அதிகம் வசிக்காதவை. வெளிச்சம் குறைந்த அறைகள், இவற்றின் வசிப்பிடங்கள். கட்டில் அடிப்பகுதி, ஜன்னல் திரைச் சீலைகள், குளியல் அறைகள்தான் இக்கொசுக்களின் புகலிடங்கள்.தேங்கியிருக்கும் தெளிந்த நீரில், 'ஏடிஸ் எஜிப்டி' கொசுக்கள் முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. வீடுகளின் மொட்டை மாடிகளில் திறந்து கிடக்கும் குடிநீர் தொட்டிகள், பூந்தொட்டிகள் வேண்டாத பாத்திரங்களில் தேங்கும் நீரில் இக்கொசுக்கள் முட்டையிட்டு பல்கி பெருகுகின்றன.
அறிகுறிகள்:
* கடும் காய்ச்சல்
* தலை வலி
* தாங்க முடியாத மூட்டு, தசை வலி
* தோலில் சிவப்பு நிறத்தில் திட்டு.
* நோய் முற்றிய நிலையில்...
* மூக்கு, வாய், ஆசன வாய் வழியாக ரத்தம் கசிவது
* ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவது.
சிலருக்கு, வயிறு உப்பி காணப்படும், கல்லீரல் பெரிதாகும், வயிற்று வலி இருக்கும். வேறு சிலருக்கு குடல் வால் அழற்சி போல் இருக்கும். படிப்படியாக ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைந்து, ரத்த அழுத்தமும் குறைந்து, இறுதியில் உயிரை குடித்து விடும் அபாயம் உண்டு.
எந்த வயதினரை தாக்கும்?: எல்லா வயதினருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் என்றாலும், குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், டெங்கு வைரஸ் பெரும்பாலும் குழந்தைகளைத் தான் குறி வைக்கிறது. இந்நோயால் உயிரிழப்பவர்களில், 90 சதவீதம் குழந்தைகள் தான். பெரியவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் வரும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக பெரும்பாலானோருக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படுவது இல்லை.
எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல: காய்ச்சல் வந்தால், அது டெங்கு காய்ச்சலாகத்தான் இருக்கும் என, நினைப்பது தவறு. 102 டிகிரி 103 டிகிரி காய்ச்சலோடு கடும் உடல் வலி இருக்கும். காய்ச்சல் விட்டு விட்டு வரும். காய்ச்சல் குறைந்து, பின் உடல் திடீரென குளிர்ந்து, கடும் சோர்வு ஏற்பட்டால், டெங்கு என சந்தேகப்பட வேண்டும். எல்லாவற்றையும் விட, உடலில் சிவப்பு திட்டுகள் இருந்தால் பெரும்பாலும் டெங்கு காய்ச்சலாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை செய்ய தவறக் கூடாது.
பரிசோதனை என்ன?:
டெங்கு காய்ச்சலா என பரிசோதிக்க, டெங்கு வைரசுக்கு எதிரான, 'ஆன்டிபாடீஸ்' ரத்தத்தில் இருக்கிறதா என தெரிந்து கொள்ள, 'டெங்கு சிராலாஜி' பரிசோதனைக்கு, டாக்டர்கள் பரிந்துரை செய்வர். ரத்தத்தில் பிளேட்லெட்டுகள், 50 ஆயிரத்துக்கும் குறைவானால் டெங்கு இருப்பதை உறுதிப்படுத்தலாம். டெங்கு வைரஸ் ஒருவரது உடலில் புகுந்து, 2 நாள்கள் முதல், 7 நாள்களில் வளர்ச்சி பெற்று, உடலெங்கும் பரவுகிறது. முதலில் கடும் காய்ச்சல் இருக்கும்.
காய்ச்சல் விட்டு விட்டு வரும். காய்ச்சல் நீங்கிய பிறகும் குழந்தை கடும் சோர்வோடு, உடல் குளிர்ந்து காணப்பட்டால், நிலைமை மோசமாகி விட்டதாக உணர வேண்டும்.பொதுவாக ஒருவரது உடலில், இரண்டாவது முறையாக வைரஸ் தொற்று ஏற்படும்போதுதான் பாதிப்பு தீவிரமடைகிறது. நோய் முற்றிய நிலையில், 'டெங்கு ஹெமரேஜ்' (ஈஞுணஞ்தஞு டஞுட்ணிணூணூச்ஞ்ஞு) அல்லது 'டெங்கு ஷாக்' (ஈஞுணஞ்தஞு ண்டணிஞிடு) என்ற மோசமான நிலைக்கு நோயாளி தள்ளப்படுகின்றார்.
சிகிச்சை: டெங்கு வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் கிடையாது. ஆதரவு சிகிச்சை தான் உள்ளது. உடலில் நீர்சத்து, ஊட்டச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர்சத்து குறையாமல் இருக்க, நரம்பு வழியாக குளுக்கோஸ் செலுத்தப்படும். பிளேட்லெட் குறைந்தவர்களுக்கு பிளேட்லெட்டுகளை செலுத்த வேண்டும். பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, நோய் குறைந்து விட்டதாக கருதலாம். எனவே, நோயாளி முழு நிவாரணம் பெறும் வரை, அவ்வப்போது பிளேட்லெட்டுகள் அளவை பரிசோதிப்பது அவசியம். வைரசின் தீவிரம் குறையும்போது, நோயின் தாக்கமும் குறையும். உரிய நேரத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி, சிகிச்சை மேற்கொண்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம்.
தடுப்பு நடவடிக்கைகள்: கொசு பெருக்கத்தை ஒழிக்க வேண்டும். வீட்டு மொட்டை மாடி, பால்கனி பகுதிகளிலுள்ள பூந்தொட்டிகளில், தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி, நீர் தேங்க விடக்கூடாது. இரவில் படுக்கும் போது, கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும். கொசு வத்தி சுருள் மற்றும் பாட்டில்களால் சிலருக்கு அலர்ஜி ற்படும்.
எனவே, மேல்பூச்சு மருந்து நல்லது. பெரிய குழந்தைகளுக்கு உடலில் பூசிக் கொள்ளும் மேல்பூச்சு ஆயின்மென்ட்டுகளை பயன்படுத்தலாம். இதுதவிர, எல்லா காய்ச்சலையும் சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்தவும் கூடாது, எல்லா காய்ச்சலையும் டெங்கு என நினைத்து, பதட்டப்படவும் கூடாது. கடும் காய்ச்சல், விட்டு விட்டு காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர் பெருமாள், குழந்தைகள் நல மருத்துவர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர்.