மூலிகை மருத்துவம் : கவலை தரும் கழுத்துவலி - மனோரஞ்சிதம்
மூலிகை மருத்துவம் : கவலை தரும் கழுத்துவலி - மனோரஞ்சிதம்
PUBLISHED ON : அக் 09, 2011
நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப்படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்கள், மூளையிலிருந்து கிடைக்கும் கட்டளைகளை செயல்படுத்த உதவும் நரம்புகள், தசைகள், தசைநார்கள் ஆகியன செயல்படவும், நுரையீரலுக்கும் மூக்கிற்கும் இடையே சுவாசத்தை கடத்தும் மூச்சுப்பாதை ஆகியன இணைந்த கழுத்துப்பகுதியில் நமது அன்றாட பணியினால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. கழுத்துப்பகுதியில் ஸ்டெர்னோகிளிடோமாஸ்டாய்டு, ட்ரபிசியஸ் போன்ற முக்கியமான தசைகள் இருக்கின்றன. மயோகுளோபின் என்னும் புரதம் ஆக்சிஜனை தசைப்பகுதிகளில் பரிமாற்றம் செய்து, மயோசின், ஆக்டின் என்ற புரதங்களை தசைநார்களாக இணைத்து, நரம்புகளின் தூண்டுதலால் ஏ.டி.பி. என்னும் ஆற்றலை உற்பத்தி செய்து, சுருங்கச் செய்கின்றன. இவை அசிடைல்கோலைன் என்னும் வேதிப்பொருளுடன் இணைந்து, கழுத்தை அசைக்க, திருப்ப, குனிய, நிமிர உதவுகின்றன. இதனால் கழுத்து தசைப்பகுதிகள் சுருங்கி, விரிந்து அசைவை எளிதாக்குகின்றன.
நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, குனிந்து பணிபுரிவதும், வாகனப் பிரயாணம் செய்வதாலும், கடுஞ்சுமையை தலையில் தூக்கி வைப்பதாலும், தசைப்பகுதிகளில் மயோகுளோபின் செயல்பாடு குறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, தசைகள் போதுமான அளவு சுருங்கி, விரியாமல் திணற ஆரம்பிக்கின்றன.
கழுத்து தசைகளின் இறுக்கம் மற்றும் பலஹீனத்தால் முதுகு மற்றும் மார்பு பகுதிகளிலுள்ள ட்ரபிசியஸ், லாட்டிஸ்மஸ்டார்சி, பெக்டோரோலிஸ் மேஜர், கொரக்கோபிராக்கியாலிஸ் போன்ற தசைகளும், தாடைப்பகுதியும் இறுக்கமடைந்து, தாடையின் கீழ்பகுதி, காதின் பின்புறம், தலை, உச்சந்தலை, பிடறி, கழுத்தின் பின்புறம், தோள்பட்டையின் மேற்பகுதிகள், மேல் மார்பு, விலா எலும்பின் இடைப்பகுதிகள், முதுகின் மையப்பகுதி மற்றும் ஆங்காங்கே சிறு, சிறு தசைப்பகுதிகளில் இறுக்கமும், குத்தல் போன்ற வலியும் ஏற்பட்டு, அன்றாட பணிகளை கவனத்துடன் செய்ய இயலாமல் கவலைகளை ஏற்படுத்துகின்றன. கழுத்துவலி உள்ளவர்களுக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது. மார்பு மற்றும் இடதுகையில் வலியை உணரும்பொழுதெல்லாம் காது மற்றும் தலையில் வலி அதிகமாகி, தேவையற்ற எரிச்சல், கோபம் உண்டாகிறது. அத்துடன் மாறி, மாறி வலிஏற்படுவதால் மன நோயாளிகள் போல் ஒருவித நிம்மதியிழந்து காணப்படுவர். கழுத்து வலியினால் ரோபோ போல் வித்தியாசமாக நடைபயில ஆரம்பிப்பார். தசைவலி தீவிரமடைவதால் கழுத்திலிருந்து செல்லும் தண்டுவட நரம்புகளும் பாதிக்கப்பட்டு, தண்டுவட எலும்புகள் பிதுங்கி, நரம்புகள் அழுத்தப்பட்டு கை, கால்களில் மதமதப்பு ஆகியன உண்டாகிறது. கழுத்து வலி உள்ளவர்கள் கழுத்துக்கான சிறப்பு தசை பயிற்சிகளை செய்வதுடன், தொழில் சார்ந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கடுமையான தசை வலியை நீக்கி, தசை மற்றும் நரம்புகளுக்கு பலத்தை தரும் அற்புத மூலிகை மனோ ரஞ்சிதம்.ஆர்ட்டபாட்ரிஸ் ஹெக்சாபெட்டலஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனோனேசியே குடும்பத்தைச் சார்ந்த தோட்டங்களில் வளரும் மனோரஞ்சித செடிகளின் வேர் மற்றும் பூக்களிலுள்ள கிளைக்கோசைடுகள் தசை இறுக்கத்தை குறைத்து, ரத்தக்குழாய்களை விரியச்செய்து, நரம்புகளை வலுப்படுத்தி, வலியை குறைக்கின்றன. மனோரஞ்சித வேரை நிழலில் உலர்த்தி, பொடித்து, 1 முதல் 2 கிராம் தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட தண்டுவடவலி நீங்கும். பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, வலியுள்ள இடங்களை இளஞ்சூட்டில் கழுவிவர வலி நன்கு குறையும்.
எனக்கு வயது 32 ஆகிறது. நடக்கும்பொழுது கால் மூட்டுகளில் சொடக்கு போடுவது போன்ற சத்தம் உண்டாகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்ன செய்வது?
எலும்புகளை சூழ்ந்துள்ள தசைநார்கள், பந்தங்கள் மற்றும் சவ்வுகளின் பலஹீனத்தால் இவ்வாறு தோன்றலாம். இதற்கு பிண்டத்தைலம் மற்றும் கற்பூராதி தைலத்தை கால் மூட்டுகளில் தடவிவரலாம். அமுக்கராச்சூரணம்-1 கிராம் தினமும் இரண்டுவேளை உணவுக்கு பின்பு பாலுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
* போபியா என்பது ஒரு வகையான பயமாகும். சந்தர்ப்பம், சூழ்நிலை, செயல்பாடு ஆகிய ஏதேனும் ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ ஒருவகையான பயத்தை ஏற்படுத்துவது போபியா ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதனால் பயம் ஏற்படுகிறதோ அதனை தவிர்க்க முற்படுவர். பேச, புதிய மனிதர்களை சந்திக்க பயப்படுதல் போன்ற சமூக பயம், பூட்டிய அறையில் அல்லது திறந்தவெளியில் இருக்க பயப்படுதல் போன்ற உறைவிட பயம், சில தனிப்பட்ட செயல்கள் அல்லது பொருட்களைப்பற்றிய குறிப்பிட்ட பயம் ஆகிய வகைகள் காணப்படுகின்றன. எதனால் பயம் ஏற்படுகிறதோ அதனை தவிர்ப்பது நல்லது. 10 வயதிலேயே பயம் ஆரம்பித்துவிடுகிறது. பல்வேறு வகையான பயத்தினால் 13 சதவீதத்திலிருந்து 28 சதவீதம் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக மனநல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களைவிட பெண்களே இருமடங்கு பயத்தினால் பாதிக்கப்படுகின்றனர். வாகன பயம், விமான பயம், ரத்தபயம், விலங்கு பயம், வாக்குறுதி பயம், உயரமான இட பயம், கிருமி பயம், பூட்டு பயம், சுகாதார பயம், ஆரோக்கிய பயம் போன்ற பல பயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திறந்தவெளியில் அல்லது வெளியிடத்தில் இருக்கும் பொழுது தோன்றும் பயமே கடுமையான மனநோயாக மாறி, பிறரை சார்ந்து, பூட்டிய அறைக்குள்ளே வாழ்ந்து சிரமப்படுகின்றனர். சித்த மருத்துவத்தில் இதுபோன்ற பயம் சார்ந்த மனநோய்களை கிரிகை என்று குறிப்பிட்டுள்ளனர்.
18 வகையான கிரிகைகளைப் பற்றி சித்த மருத்துவ நால்கள் விளக்கமாக குறிப்பிட்டுள்ளன. நோயாளியின் இறை நம்பிக்கை, சிறப்பு மருந்துகள், குடும்ப ஆலோசனை மற்றும் மருத்துவரின் தனிப்பட்ட கவனிப்பின்படி சிகிச்சையளிக்கலாம் என சித்தமருத்துவம் குறிப்பிடுகிறது. மனநல மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், சமூகவியல் வல்லுனர்கள் இணைந்து, கிரிகைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டால், ஏராளமான புதிய சித்த மருந்துகளை கண்டறியலாம்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை, 98421 67567.