தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அலோபதி: கர்ப்ப கால மதுப் பழக்கம்: குழந்தைக்கு ஆபத்து

அலோபதி: கர்ப்ப கால மதுப் பழக்கம்: குழந்தைக்கு ஆபத்து

அலோபதி: கர்ப்ப கால மதுப் பழக்கம்: குழந்தைக்கு ஆபத்து


PUBLISHED ON : செப் 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 9ம் தேதி, கர்ப்பகால மதுப்பழக்க விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் என பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறோம் என, நெஞ்சை நிமிர்த்தி சொல்வதில் பெருமை தான். அதேவேளையில், கலாசார சீரழிவு, ஒழுக்கக் கேட்டிலும் நாம் மேற்கத்திய நாடுகளுக்கு, இணையாக வளர்ந்து வருவது வேதனையான விஷயம்.

எப்படி அமெரிக்க கோதுமையோடு, பார்த்தீனியம் விதைகளும் நம் நாட்டுக்குள் இறக்குமதியாகி, கேடு விளைவித்து வருகிறதோ, அதுபோல் நவீன தொழில்நுட்பத்தோடு, மேற்கத்திய கலாசாரமும் இங்கு இறக்குமதியாகி, நமது சமூகத்தை சீரழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

புகை, மது, திருமணத்துக்கு முன் உறவு- இதெல்லாம் கூடாது என நமது முன்னோர்கள் ஒதுக்கினார்கள். ஆனால், நாகரிகம் என்ற போர்வையில், இதையெல்லாம் நியாயப்படுத்த பார்க்கிறது இன்றைய இளைய தலைமுறை.

இந்திய இளைஞர்களிடையே புகைப் பழக்கமும், மது பழக்கமும் அதிகரித்து வருவது சமீபத்திய ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.

இதில், திடுக்கிடும் தகவல் என்னவெனில், மது குடிக்கும் இந்திய இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தான். 2000ம் ஆண்டு நடந்த ஆய்வில் இந்தியாவில் 5 சதவீத பெண்களுக்கு மதுப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் வருகைக்குப் பின், இப்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெங்களூருவில் படித்த இளம் ஆண்களுக்கு இணையாக இளம் பெண்களும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி. தொழில் இந்தியாவுக்கு எத்தனையோ நன்மைகளை கொடுத்திருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், சில தீமைகளை கொண்டு வந்துள்ளதுதான் துரதிருஷ்டமானது.

கர்ப்ப காலத்தில் மதுவின் ஆபத்து

மேற்கத்திய நாடுகளில் பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம். இவ்வாறு குடிப் பழக்கம் உள்ள பெண்கள் அந்த பழக்கத்தை விட முடியாமல், கர்ப்ப காலத்திலும் குடிப்பதால், கர்ப்பத்தில் உள்ள குழந்தை, மன ரீதியிலும், உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கர்ப்பகாலத்தில் குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை, 4 லட்சம் என ஓர் ஆய்வில் தெரியவந்தது. 1,000 குழந்தைகளில் 2 குழந்தைகள் கர்ப்ப கால மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மது அரக்கன், வளரும் கருவையும் விட்டு வைக்கவில்லை. விழித்துக் கொண்ட மருத்துவ உலகம், 'அட, கர்ப்ப காலத்திலாவது குடிப்பதை நிறுத்திவிடுங்கள். அப்போது தான் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்' என வலியுறுத்தி வருகிறது. இந்த பிரசாரம், இந்தியாவுக்கும் தேவைப்படும் சூழ்நிலை, இப்போது உருவாகி உள்ளது.

பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக, அந்த காலத்தில் பிரசவத்தின் போது பெண்களுக்கு மது கொடுக்கும் பழக்கம், இந்தியாவில் இருந்துள்ளது. ஆனால், மயக்க மருத்துவ துறை வளர்ச்சியால் அதற்கெல்லாம் இப்போது அவசியமில்லாமல் போனது.

தொப்புள் கொடி உறவு

கர்ப்பத்தின் போது மதுக் குடிப்பதால், தாயின் ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், குழந்தையின் தொப்புள் கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் சென்று பல்வேறு கேடுகளை செய்கிறது.

நாள் ஒன்றுக்கு 15 மி.லி., வரை ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், போதைக்காக மகிழ்ச்சிக்காக, கிளர்ச்சிக்காக குடிப்பவர்கள் 150 மி.லி.,யில் கூட நிறுத்தமாட்டார்கள்.

கர்ப்ப காலத்தில் மது குடிப்பதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, வாரிசுகளின் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிவிடும்.

ஆரோக்கிய மனிதர் மது குடித்தால் கூட, முதலில் நரம்பு மண்டலத்தில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

தொப்புள்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் ஊடுருவும் ஆல்கஹால், முதலில் நரம்பு மண்டலத்தை தான் பதம் பார்க்கிறது. நரம்பு மண்டலம் பாதிக்கும்போது, உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு குழந்தையின் குணாதிசயங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. குழந்தை மூர்க்கனாக, மூடனாக பிறக்கும் வாய்ப்புள்ளது.

நமது குணாதிசயங்கள் கருவிலேயே தீர்மானிக்கப்படுவதால், கர்ப்ப பையில் மதுவை ருசிக்கும் குழந்தையின் பழக்க, வழக்கங்கள் முற்றிலுமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

மூளையில் தொடங்கி...

மூளையில் தொடங்கி, குழந்தையின் கபாலம், கண், இதயம், தண்டுவடம் உட்பட எந்த உறுப்பையும் மது விட்டு வைக்காது என்பது, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவுத் திறன் மிக குறைவாக இருக்கும்.

இதனால் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த முடியாது.

இதயத்தில் பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும். குறைந்த எடை அல்லது அதிக எடையுடன் பிறக்கும். கண் சிறுத்து போகும்.

மதுவினால் ஏற்படும் பாதிப்பு குழந்தை பருவத்தோடு நின்றுவிடுவதில்லை, உயிர் பிரியும் வரை உடனிருந்து தொல்லை கொடுக்கும்.

இது தவிர, மதுக் குடிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பிரசவ கால சிக்கல் ஏற்படும்.

எனவே, எப்போதும் மது நல்லதல்ல. அதுவும் கர்ப்பத்தின் போது, ஒரு துளி மதுவும் குழந்தைக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து, பெண்கள் மதுவுக்கு விடை கொடுப்பது நல்லது.

கர்ப்பத்தின் போது மது குடிப்பதால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்

* தலை அளவு சிறுத்திருத்தல்

* பிறவி இதயக் குறைபாடுகள்

* சிறுநீரகங்களில் குறைபாடு

* சராசரி உயரத்தை விட குறைந்த உயரம்

* குறைந்த எடை

* பார்வை திறன் மங்குதல்

* செவித் திறன் குறைபாடு

* புத்தி மந்தம்

* மற்றவருடன் அனுசரித்து செல்லாமை

* மூர்க்கதனம், முரட்டுதனம்

* ஞாபகத் திறன் குறைவு

* படிப்பில் கவனக் குறைவு

* கற்றலில் குறைபாடு

* பேச்சுத் திறன், மொழித் திறன் குறைவு

அளவோடு குடிப்பது நல்லதா

மதுவை அளவோடு குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற வாதத்தில் சிறிதும் உண்மை இல்லை. 15 மி.லி., வரை ஆல்கஹாலை உடல் ஏற்கும் என்பது உண்மை தான். ஆனால், போதைக்காக குடிப்பவர்கள், 15 மி.லி.,யுடன் நிறுத்த முடியாது. பெண்கள் பீர் குடிக்கலாம். அதில் தீங்கு அதிகம் இல்லை என்ற கருத்தும் அபத்தமானது. கர்ப்பத்தின் போது ஒரு துளி மதுவும், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us