PUBLISHED ON : மே 27, 2012
* எஸ்.பன்னீர்செல்வம், ராமநாதபுரம்:கோடையில் என் மகன், அதிக அளவில் குளிர்பானம் குடிக்கிறான். இது நல்லதா?
குளிர்பானங்கள் குடிப்பது, தவறான பழக்கம். இது, உடலில் கலோரிகளை கூட்டி, எடையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமின்றி, இதை குடிப்பதால், இந்தியர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை நோய் வரும் தன்மையை, 37 சதவீதம் அதிகரிக்கிறது என, தெரிய வந்துள்ளது. ஆகவே, இளைஞர்களுக்கும், குறிப்பாக, 14 முதல் 25 வயதுக்குள் இருப்போருக்கும், பிற்காலத்தில், சர்க்கரை நோய் வரும் தன்மை அதிகரிக்கும். எனவே, குளிர்பானங்களை தவிர்த்து, வெயிலுக்கு அதிகளவில் தண்ணீரையும், ஆரோக்கியமான பழ ரசங்களையும் குடிப்பது மிகச் சிறந்தது.
* பி.ஆரோக்கியம், மதுரை: இதய வியாதி வந்தவர்கள், வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றத்தை கடைபிடிக்க வேண்டும்?
முதலில், உணவை சரி செய்வது அவசியம். நிறைய காய்கறி, பழங் களை சேர்த்து, உப்பு, சர்க்கரையை குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை, அறவே தவிர்ப்பது நல்லது. காலை உணவுக்கு, மூன்று இட்லி அல்லது எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, மதியம், நிறைய காய்கறிகளுடன் சிறிதளவு சாதம், இரவில், எண்ணெய் இல்லாத மூன்று சப்பாத்திகள் சிறந்தது. இத்துடன் காலை, மாலையில், சர்க்கரை இல்லாமல், ஒரு கப் காபியோ, டீயோ அருந்தலாம். மேலும் மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, இதயத்திற்கு சிறந்த டானிக்காக அமையும். உங்கள் டாக்டரின் ஆலோசனைப்படி, தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். இது தவிர, வேளை தவறாமல் மருந்து எடுப்பதும் அவசியம்.
* ஆர்.தாமஸ் ராஜன், திண்டுக்கல்: எனக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில், இதயத்தின் மூன்று ரத்த நாளங்களிலும், அடைப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. டாக்டர் எனக்கு, 'பைபாஸ் சர்ஜரி' தேவை என்கிறார். பல்வேறு காரணங்களால் ஆப்பரேஷன் செய்வது தாமதமாகிறது. இதனால் பாதிப்பு வருமா?
இதயத்தில், மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளது எனில், அதை விரைவாக சரி செய்வதே சிறந்தது. இந்த தருணத்தில், உங்களது இதய ஆரோக்கியத்தை மட்டுமே, முக்கியமானதாக கருத வேண்டும். மற்ற சுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இதயத்தை சரி செய்தபின், மற்ற பிரச்னைகளை கவனிக்கலாம். இதயத்தின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டால், உயிருக்கே ஆபத்து என்பதுடன், பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டி வரலாம். எனவே, 'பைபாஸ் சர்ஜரி'யை விரைவாக செய்வதே சிறந்தது.
டாக்டர் விவேக்போஸ், மதுரை.

