PUBLISHED ON : ஏப் 13, 2025

சரியான நேரத்தில் மக்கள் துாங்குகின்றனரா என்பது பற்றிய ஒரு ஆய்வு, நாடு முழுதும் 10 மெட்ரோ நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 63 சதவீதம் பேர் படுக்கையில் படுத்தபடி மொபைல் போனில் வீடியோ பார்க்கின்றனர். 59 சதவீதம் பேர் மொபைல் போனில் உறவினர்கள், நண்பர்களுடன் பேசுகின்றனர்.
இசை கேட்பது, செய்திகள் பார்ப்பது என்று 58 சதவீதம் பேரும், சமூக வலைதளங்களில் வரும் 'ஷார்ட்ஸ்' பார்ப்பது, 'ஆப்'களை உபயோகிப்பது என்று 57 சதவீதம் பேரும் நேரத்தைப் போக்குகின்றனர். இதனால், 53 சதவீதம் பேருக்கு துாக்கம் தொடர்பான பல உடல் பிரச்னைகள் உள்ளன.
துாங்கும் நேரம்
விடுமுறை நாளாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதை பழக்கமாக்க வேண்டும். துாக்கத்திற்கு முதல் எதிரி மொபைல் போன் என்பதை புரிந்து, துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னரே மொபைல் பார்ப்பதை தவிர்த்தால், ஆழ்ந்த உறக்கம் வரும்.
படுக்கை அறையில், முடிந்தால் எல்லா அறைகளிலும், மங்கலான வெளிச்சம் தரும் மஞ்சள் நிற ஆம்பர் விளக்குகளை, மாலை 7:00 மணிக்கு மேல் பயன்படுத்தலாம். இது, இரவு நெருங்கிவிட்டது; துாங்க வேண்டும் என்ற சமிக்ஞையை மூளைக்கு தரும்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு...
படுக்கையில் படுத்தவுடன், 'ஸ்ட்ரெச்சிங்' செய்வது, மூச்சு பயிற்சி, தியானம், துாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன், வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, படுக்கை அறையின் வெப்பநிலை 21 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் இருப்பது, வாசனை எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது, லாவண்டர் போன்ற மென்மையான வாசனை திரவியங்களை உபயோகிப்பது பலன் தரும்.
துாக்கத்தில் என்ன நடக்கிறது?
இது இரவு, பகல் என்று உடலுக்கு உணர்த்துவதற்கு, 'சர்கார்டியன் ரிதம்' என்ற கடிகார அமைப்பு நம் அனைவரின் உடலிலும் இருக்கிறது. துாங்க வேண்டிய நேரத்தில் துாங்காமல், செயற்கை வெளிச்சத்தில் விழித்திருந்து வேலை செய்தால், இந்த கடிகார சுழற்சியில் மாறுபாடு ஏற்படும். மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும். இதனால், மயக்கம், சிந்திப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
இதே சூழ்நிலையில் இருக்கும் பலர் நீண்ட நாட்களாக துாக்கமின்மையால் அவதிப்படுவர். இவர்களுக்கு, 'அடினோசின்' என்ற வேதிப்பொருள் உடலில் அதிக அளவில் உற்பத்தி ஆகும். இதனால், நினைவுத்திறன் இழப்பு, மனநிலையில் மாற்றம், இதய நாளங்கள் தொடர்பான கோளாறுகள், நச்சுகளை வெளியேற்றும் மூளையின் திறனில் குறைபாடு ஏற்படும்.
டாக்டர் ஜி.சி.இளந்திரையன்,
நரம்பியல் மருத்துவ ஆலோசகர்,
எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை, சென்னை94444 86444info@srmglobalhospitals.com

