முதுமை என்பது பூங்காவனம் புரிந்தால் சிறகடிக்கும் மனம்!
முதுமை என்பது பூங்காவனம் புரிந்தால் சிறகடிக்கும் மனம்!
PUBLISHED ON : ஏப் 13, 2025

பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி என்ற ஓட்டத்தில், பெரும்பாலானவர்கள் தம்மை தாமே மறந்துவிடுகின்றனர். முதுமையின் நுழைவாயில் வந்து நின்றபின்னர் தான், தம்மை சுற்றி அனைத்தும் மாறியிருப்பதை உணர்கின்றனர்.
அச்சமயங்களில் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மை மாற்றிக்கொள்ள முடியாமலும், சூழல்களை எதிர்கொள்ள முடியாமலும் வெறுப்பு, கோபம், பதட்டம், தனிமை என மனபோராட்டங்களில் சிக்கி உடலளவிலும், மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆய்வுகளின் படி, 60 வயதை கடக்கும் நபர்களில், 14 சதவீதம் பேர் மனஅழுத்தம், மனஇறுக்கம், போன்ற மனநலம் சார்ந்த பிரச்னைகளில் சிக்கிவிடுகின்றனர். அதன் விளைவாக, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு, முதுமை என்பது நரகமாகவே மாறிவிடுகிறது.
இதுகுறித்து, உளவியல் நிபுணர் பவித்ராவிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:
பொதுவாக, 40 வயதை கடக்கும் போதே, பொருளாதார ரீதியாக நம் முதுமை காலங்களை அனைவரும் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். ஓய்வுக்காலத்திற்கு பின், எப்படி நேரம் செலவிடலாம் என்பதிலும், திட்டமிடல் வேண்டும்.
இப்போது நம் சொல்லுக்கு கட்டுப்படும் பிள்ளைகள், அப்படியே இருக்கமாட்டார்கள் என்றும், நம் குடும்பத்தின் பிடி பின்னாளில் நம்மிடம் இருக்காது என்ற எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மனபக்குவம் இல்லாத முதியவர்கள்தான், தாழ்வு மனப்பான்மையால் சிரமப்படுகின்றனர்.
உறவுகள் முக்கியம்
குடும்ப உறவுகளுக்குள் சுமூகமான சூழலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப நிகழ்வுகளுக்கும் செல்வது, புத்தகங்கள் வாசிப்பது, நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக்கொள்வது, சுற்றுலா தலங்களுக்கு செல்வது போன்றவற்றில், ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பேரன், பேத்திகளை பள்ளிகளில் கொண்டு விடுவது, பாடம் சொல்லித்தருவது, அவர்களுடன் விளையாடுவது என்று நம்மை நாமே, ஊக்குவித்துக்கொள்ள வேண்டும். (அவர்களும் பின்னாளில், கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதை மறந்து விடக்கூடாது).
ஆகவே, முதுமையை அழகாக எதிர்கொள்ள, 40-50 வயதிலேயே உங்கள் வாழ்வியல் முறைகளை ஆக்கப்பூர்வமாக மாற்றிக்கொள்ளுங்கள். தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள், பிள்ளைகளுக்காக மட்டும் ஓடாமல், நமக்காகவும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். யோகா, நடைபயிற்சி, புத்தகவாசிப்பு, சுற்றுலா, மருத்துவ செக்அப் ரொம்ப முக்கியம்.
மூக்கை நுழைக்காதீர்!
முதுமையில் தனிமை என்பது, அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. அதை நாம் எவ்வாறு அணுகுகின்றோம் என்பதே முக்கியம். திருமணம் ஆன பிள்ளைகளின் குடும்ப விவகாரங்கள், சண்டைகளில் நாம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்களாக கேட்காமல் ஆலோசனை தருவதை நிறுத்தவேண்டும். மருத்துவ செலவுக்கு கட்டாயம் இன்சூரன்ஸ் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்; பிட்னஸ் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். பொதுவாக, உடல் நலம் சரியில்லாமல் போகும்போதுதான், பல மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும்,'' என்கிறார் டாக்டர் பவித்ரா.

