அதிகரிக்கும் வெயில் தாக்கம் தற்காத்து கொள்வது எப்படி?
அதிகரிக்கும் வெயில் தாக்கம் தற்காத்து கொள்வது எப்படி?
PUBLISHED ON : ஏப் 13, 2025

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து, திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பத்மினி கூறியதாவது:
வெயில் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால், தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும். உடலில் உப்புச்சத்து, தண்ணீர் அளவும் குறையாமல், அதிக அளவில் தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் தண்ணீர் குடிப்பது நல்லது. காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை வயதானவர்கள் குழந்தைகள் வெளியில் செல்ல வேண்டாம். அவசியம் வெளியே செல்ல வேண்டியிருப்பவர் குடையை பயன்படுத்தலாம். வெப்ப அலை தாக்கினால், உதடு, நாக்கு வறட்சி ஏற்படும். ஓ.ஆர்.எஸ்., கரைசல் குடிக்கலாம்; வீடுகள் குளிர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல், உடலில், கை, கால்களில் சிராய்வு போன்று, கொப்பளம் ஏற்பட்டால், அவற்றில் நீர் வழிந்தால் உடனே கவனிக்க வேண்டும். சின்னம்மை, தட்டம்மை அறிகுறிக்கு முன் டாக்டரை பார்ப்பது நல்லது. வயதானவர்கள், இணைநோய் உள்ளவர்கள், ஒன்று முதல், பத்து வயதுடைய குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிப்பதை பெற்றோர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
திடீரென ஒருவருக்கு மயக்கம் வந்து விட்டால், உடனடி முதலுதவி செய்ய, அவருக்கு காற்று கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி, அதன் பின் தண்ணீர் வழங்க வேண்டும். வெயில் காலம் முடியும் வரை அதிக காரம் மிகுந்த மசாலா அயிட்டங்களை தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரு வேளை குளிக்கலாம்
வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்படும். இதனை சரி செய்து கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், கம்மங்கூழ், நுங்கு, இளநீர் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, எலுமிச்சை பானகம், மண்பானை நீர், வெட்டிவேர், நன்னாரி, நெல்லி வற்றல் ஊறவைத்த நீரினை பகல் நேரத்தில் அருந்தலாம். செரிமானத்துக்கு சிரமமான புரதச்சத்து நிறைந்த பொரித்த, வறுத்த, இறைச்சி உணவுகளை தவிர்த்து வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது.பசியின்மையை போக்க கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை இவற்றை துவையலாக சாப்பிடலாம். புறஊதா கதிர்களின் தாக்கத்தால் தோலில் அரிப்பு, எரிச்சல், சிவத்தல் உள்ளிட்ட அழற்சி ஏற்படும். உடலில் வியர்வை மிகுந்தால், பூஞ்சைகளால் ஏற்படும் படர்தாமரை உள்ளிட்ட தோல் நோய்கள், கொப்புளம், வேர்க்குரு வரலாம். எனவே, இருவேளை குளிப்பது, சுய சுத்தம் பேணுவது வெயில் காலத்தில் மிகவும் அவசியம்.
- யாகசுந்தரம், மாவட்ட சித்தா மருத்துவ உதவி அலுவலர்

