PUBLISHED ON : நவ 04, 2012

எனது 7 வயது குழந்தைக்கு, 5 வயது முதல் மூச்சுத்திணறல் (வீசிங்) உள்ளது. டாக்டரிடம் செல்லும் போதெல்லாம், 'நெபுலைசர்' பயன்படுத்துவதால் உடனே சரியாகிவிடுகிறது. இம்முறை சரியானதா?
ஓர் இடத்தில் தீப்பிடித்தால் அந்த தீயை அணைப்பது போல, 'வீசிங்' வரும் போது 'நெபுலைசர்' பயன்படுத்தினால் உடனே சரியாகி விடும். ஆனால் வாழ்க்கைக்கு உதவுவது, வருமுன் காப்பதே. உங்கள் மகனுக்கு, 'வீசிங்' வந்தால் 'நெபுலைசர்' பயன்
படுத்துவதை விட, சரியான 'இன்ஹேலரை' பயன்படுத்தினால், நோய் வராமல் காக்க முடியும். 'வீசிங்' வருவதையும் தடுக்க முடியும். இதுவே சிறந்த முறை. 'இன்ஹேலர்' பயன் படுத்தாமல் 'நெபுலைசேஷன்' மட்டும் செய்வது தவறு. எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன், 'ஐ.எல்.டி.,' (Interstitial lung Disease) இருப்பதாக கண்டறியப்பட்டது. அதற்கு உரிய மாத்திரை எடுத்துக் கொள்கிறேன்.
இப்போது எனது டாக்டர், Oxygen Concentrator கருவியை வாங்க வலியுறுத்துகிறார். எனக்கு அது தேவையா?
நமக்கு தேவையான ஆக்சிஜனை, நம் நுரையீரல் தான் காற்றில் இருந்து பிரித்தெடுக்கிறது. உடல் உறுப்புகள் சரியாக இயங்க, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும். அப்போதுதான், உடல் உறுப்புகள் பாதிக்காமல் இருக்கும்.
வழக்கமான ஆக்சிஜன் அளவு 96 முதல் 98 சதவீதமாக இருக்க வேண்டும். இது 90 சதவீதத்திற்கு குறைந்தால் அது நல்லதல்ல. இதுபோல குறையும்போது, உடலுக்கு தேவையான ஆக்சிஜன் செயற்கையாக கொடுக்க உதவும் கருவிதான் 'ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்'. இது காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து உடலுக்குள் செலுத்தும். உங்களுக்கு 90 சதவீதத்திற்கு குறைவாக ஆக்சிஜன் இருந்தால், கண்டிப்பாக இக்கருவியைத்தான் பயன்படுத்த வேண்டும். இதனால் பின்விளைவுகள் ஏற்படாமல் தடுத்து, ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.
எனது நண்பனின் வயது 25. ஆஸ்துமா உள்ளது. இந்த குளிர்காலத்தில் ஆஸ்துமா அதிகரிக்காமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாதவை என்ன?
கண்டிப்பாக 'இன்ஹேலர்' தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த காற்று வீசும்போது வெளியில் செல்லக் கூடாது. குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். எந்தப் பொருள் உங்களுக்கு தொந்தரவு தருகிறதோ, அதை தவிர்க்க வேண்டும். பால், தயிர் சேர்த்துக் கொள்ளலாம். அவை ஒத்துக்கொள்ளவில்லை எனில், தவிர்க்கலாம். சிகரெட், மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏ.சி., ஒத்துக் கொள்ளவில்லை எனில், வெப்பநிலையை அதிகம் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் குளிர்காற்று முகத்தில் அடிக்கக் கூடாது. நாய், பூனை, பறவை போன்ற செல்லப் பிராணிகளின் அருகில் செல்லக் கூடாது. வீட்டை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இன்றி, தாமே மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. புளிப்பான பழங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வேகமாக உடற்பயிற்சி செய்யக் கூடாது. ஆனால் மிதமான உடற்பயிற்சி மிகநல்லது. நீச்சல் மிகவும் நல்லது. சத்தான உணவு அதாவது, 'ஒமேகா 3 பேட்டிஆசிட், ஆலிவ்ஆயில், ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147