PUBLISHED ON : நவ 04, 2012

எனக்கு பற்கள் கிடையாது. 10 ஆண்டுகளாக கழற்றி மாட்டும் பல் செட் அணிந்துள்ளேன். இது அசவுகரியமாக உள்ளது. பேசும்போதும், சாப்பிடும்போதும் கழன்று விடுகிறது. இதை சரிசெய்ய முடியுமா?
கழற்றி மாட்டும் பல் செட்கள் எப்போதும் அசவுகரியமும், ஒருவித பாதுகாப்பற்ற தன்மையையும் கொடுக்கும். அதுமட்டுமின்றி, நாளடைவில் தாடை எலும்புகள் தேய்ந்து பல்செட் அணிய முடியாமல் போகலாம். இதற்கு 'டென்டல் இம்ப்ளென்ட்' சிகிச்சை முறையான 'ஓவர்டென்சர்' என்பதே சரியான தீர்வு. தாடை எலும்பில் 2 - 4 இம்ப்ளான்டுகள் வரை பொருத்த வேண்டும். பின்னர், பல்செட்டை சிறிது மாற்றி அமைத்தால் அவை வாயினுள் உள்ள இம்ப்ளான்டுகளுடன்கெட்டியாக பொருந்திக் கொள்ளும். பேசும்போதோ, சாப்பிடும்போதோ அது கழறாமல் இருக்கும். மேலும் இந்த இம்ப்ளான்டுகள் தாடை எலும்புகள் தேயாமல் கட்டுப்படுத்தும். இன்றைய நவீன சிகிச்சை முறைகளால் அனைத்து வயதினருக்கும் ஒரு சில நாட்களிலேயே இந்த வகை ஓவர் டென்செர்களை செய்ய முடியும்.
எனக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகிறது. நாக்கு ஒட்டிக் கொள்வது போல உள்ளது. வாயில் எரிச்சலும் உள்ளது. இதற்கு காரணம் என்ன? இதை எவ்வாறு சரிசெய்வது?
இந்நிலைக்கு 'சீரோஸ்டோமியா' என்று பெயர். உமிழ்நீர் சுரப்பது குறையும்போது, இதன் அறிகுறிகள் தென்படும். சீரோஸ்டோமியா வருவதற்கு, உணவுப் பழக்கம், உடலில் இரும்புச் சத்து குறைவு, சில மாத்திரைகள், புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் போன்ற காரணங்கள் உண்டு. இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உணவு உண்பதற்கும் விழுங்குவதற்கும் கடினமாகிவிடும். நமது உமிழ்நீர், இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது குறையும்போது சொத்தைப் பற்கள் வரும் வாய்ப்பு 60 - 75 சதவீதம் வரை அதிகமாகிறது. இதற்கு நோயின் காரணத்திற்கு ஏற்ப சிகிச்சை செய்ய வேண்டும். அதேசமயம் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பற்களை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். ஈறுகளின் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்.
- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441-54551