தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தயக்கத்தைத் தவிர்த்தால்... தீர்வு எளிது!

தயக்கத்தைத் தவிர்த்தால்... தீர்வு எளிது!

தயக்கத்தைத் தவிர்த்தால்... தீர்வு எளிது!


PUBLISHED ON : ஜன 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு. பெரும்பாலான பெண்களுக்கு, இந்தப் பிரச்னை குறித்து யாரிடம் கேட்க வேண்டும் என்று தெரிவதில்லை. மகப்பேறு மருத்துவரிடம் செல்ல வேண்டுமா, தோல் டாக்டரிடம் கேட்க வேண்டுமா என்று குழப்பம். பெண்களுக்கு வரும் பொதுவான பிரச்னை இது. வெட்கம், கூச்சத்தினால் இது பற்றி பேசுவதேயில்லை. இது முழுக்கவே குணப்படுத்தக் கூடியது.

என்ன காரணத்தினால் இது வருகிறது?

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றால் அரிப்பு வரலாம். சிலருக்கு, வயதான பின், ஹார்மோன் சுரப்பு குறைவதால், எண்ணெய் சுரப்பு குறைந்து, தோல் மிகவும் மென்மையாகி, இது போன்ற பிரச்னை வரலாம். முறையாக சிகிச்சை செய்யாவிட்டால், பிறப்புறுப்பில் உள்ள உள் உறுப்புகள் அழிந்து விடுவதற்கான அபாயம் உள்ளது.

சிகிச்சை முறைகள் என்ன?

வெள்ளை படுகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால், அதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை என, எந்த விதமான தொற்று பாதிப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தொற்று இருந்தால், எளிதாக சிகிச்சை செய்து விடலாம். சில நேரங்களில் தொற்றே இருக்காது; அரிப்பு மட்டும் இருக்கும். அப்போது, 'ஹார்மோன்' சுரப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதற்கான, 'கிரீம்'கள் பயன்படுத்தி, மாத்திரைகள் சாப்பிட்டால் முழுமையாக குணமாகி விடும்.

வேறு காரணங்களால், அரிப்பு ஏற்படுமா?

பால்வினை நோய்கள் மிக முக்கிய காரணம். தம்பதியரில் யாருக்கு இருந்தாலும், அது மற்றவரையும் பாதிக்கும். தவிர, கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை கோளாறு இருந்தால், எல்லா தொற்றுகளும் வருவதற்கு வாய்ப்பு அதிகம். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

பிரச்னை இருந்தால் எந்த டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்?

தோல் மருத்துவரிடம் தான் காட்ட வேண்டும். பால்வினை நோய்களை பெரும்பாலும் யாரும் தொடவே பயப்படுகின்றனர். அதற்கும் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளது. தம்பதியரை அழைத்து, ஆலோசனை சொல்லி, சிகிச்சை தர முடியும். 10 நாட்களிலேயே அரிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

எந்த வயதில் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது?

15 - 30 வயதிலும், 45 - 60 வயதிலும் இந்தப் பிரச்னை வருகிறது.

தயிர் பயன்படுத்தினால் அரிப்பு சரியாகும் என்று ஆலோசனை சொல்கின்றனர்... இது சரியா?

கண்டிப்பாக செய்யக் கூடாது. தயிரில் உள்ள அமிலத் தன்மை காரணமாக, பிரச்னை அதிகமாகலாம். சுத்தமான தண்ணீரால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். அடர்த்தி அதிகமான சோப்பு, திரவங்களை பயன்படுத்துவதால், அதில் உள்ள காரத்தன்மை, தோலின் இயல்பை மாற்றி, வறட்சியை ஏற்படுத்தும்.

வெறும் தண்ணீர், சுத்தம் செய்த உணர்வை முழுமையாக தரவில்லை எனில், இதற்கென உள்ள, 'லோஷன்'களை பயன்படுத்தலாம். குறிப்பாக, 'டெட்டால்' போடவே கூடாது.

வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

மாதவிடாய் நேரத்தில், நாள் முழுவதும் ஒரே நாப்கினை பயன்படுத்தக் கூடாது. ஒரு நாளைக்கு குறைந்தது, மூன்று மணி நேரத்திற்கு, ஒரு நாப்கின் மாற்ற வேண்டும். இயற்கை முறையில் தயாரித்த நாப்கின்களை, தாராளமாக பயன்படுத்தலாம். தற்போது, மாதவிடாய், 'கப்' கிடைக்கிறது. ஒன்று வாங்கினால், இரண்டு ஆண்டுகள் வரை சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.

செல்லப் பிராணிகளை, வளர்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவற்றின் ரோமத்தில் இருக்கும் நுண்ணிய கிருமிகளாலும் பாதிப்பு வரலாம்.

டாக்டர் சினேகலதா.கே,

தோல் மருத்துவர்,

சென்னை

99419 39309

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us