PUBLISHED ON : ஜூலை 02, 2023

புகை பிடிப்பதை தவிர்த்தால் இருதய பிரச்னைகள் வராது என, கடலுார் கல்யாண் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இருதய நோய் சிகிச்சை டாக்டர் கல்யாணராமன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
உலக இருதய நோய் தினம், ஆண்டு தோறும் செப்., 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் இருதய நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ற்படுத்தப்படுகிறது. இருதய நோய் உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாகும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இருதய நோய் வருவதற்கான காரணங்களாகும்.
சர்க்கரை பானங்கள், பழச்சாறுகளை தவிர்த்து, இனிப்பு சேர்க்காத உணவு பழச்சாறுகளை தேர்வு செய்து ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உண்ண வேண்டும். உப்பு நிறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் என, வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். தினசரி பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கும் வகையில் இருத்தல் நல்லது.
புகை பிடிப்பது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தால் இருதய நோய் வராது, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
புகை பிடிப்பதை கைவிட்ட 2 ஆண்டுகளுக்குள், இருதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க முடியும். அதோடு அருகில் உள்ள சக மனிதர்களின் இருதய பிரச்னை குறையவும் வழி வகை செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

