PUBLISHED ON : ஜூலை 02, 2023

இயற்கை அழகை ரசிக்க நமக்கு கிடைத்ததுதான் கண்கள். பார்வைத்திறன் குறைந்தவர்கள், பவருக்கு ஏற்றார்போல் கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். கண்ணாடி அணிய விரும்பாதவர்கள், கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொள்கின்றனர்.
பத்திரமாக பராமரிக்க வேண்டிய விஷயம் என்பதால், குழந்தைகளுக்கு கான்டாக்ட் லென்ஸ் ஒத்து வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அழகாக விளக்குகிறார் கண் மருத்துவர் சுந்தர்.
கண் சிமிட்டல் எதனால் நடக்கிறது?
கண் சிமிட்டுவது, சாதாரணமாக நடக்கும் அனிச்சை செயல். இச்செயல் மூலம் கண் இமையின் தசையானது, துாசி மற்றும் சிறு துகள்களை, கண்களில் இருந்து கண்ணீரின் மூலம் அப்புறப்படுத்தி கண்களை சுத்தமாக வைக்கிறது.
மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு, 12 - 15 முறை கண்களை சிமிட்டுகிறான். கம்ப்யூட்டர், மொபைல்போன், லேப்டாப் ஆகியவற்றின் திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதால், கண் சிமிட்டல் குறைகிறது.
இதன் காரணமாக, நம் கண்களின் மேல் உள்ள பாதுகாப்பு பகுதி(டியர் பிலிம்) காய்ந்து போக வாய்ப்புள்ளது. இதுவே கண் வறட்சி. இதைத்தவிர்க்க நாமாகவே கண்களை சிமிட்டலாம்.
இளம் வயதில் கண் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?
குழந்தைகள் முன்னர் வெளி விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தினர். இன்று மொபைல்போன், 'டிவி' என, வீட்டுக்குள்ளேயே இருந்து விளையாடுகின்றனர். இவற்றின் அதீத பயன்பாட்டால், பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எவ்வாறு பயன்படுத்துவது எனத் தெரிந்து பயன்படுத்தினால், பிரச்னை இருக்காது. இருட்டில் புத்தகம், மொபைல்போன் உள்ளிட்டவற்றை பார்ப்பதால், கண்கள் விரைந்து சோர்வடையும்.
ஸ்மார்ட் ஸ்கிரீன் பயன்படுத்துவதால், நம் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒளியுடன் இணைந்திருக்க வேண்டும். இல்லை எனில், பாதிப்பு ஏற்படும்.
குழந்தைகள் 'கான்டாக்ட் லென்ஸ்' அணியலாமா?
குழந்தைகளை பொறுத்தவரை கண்ணாடியே சிறந்தது. கான்டாக்ட் லென்ஸை பாதுகாப்பாக கையாள தெரிந்தால் பயன்படுத்தலாம்.
கான்டாக்ட் லென்ஸ் போடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் அவர்களை அறியாமலேயே, கண்களை தேய்த்து விடுவர். இதனால் பாதிப்பு ஏற்படலாம்.
நீல ஒளி கதிர்கள், புளூ பிளாக்கிங் எபக்ட்ஸ் என்றால் என்ன?
நீல ஒளி கதிர்கள் நமது உடலுக்கு, கண்களுக்கு தேவையான ஒன்று. சூரிய ஒளியில் இருந்து வரும் நீல ஒளிகள் நம் உடலுக்கு கட்டாயம் தேவை. இதன் வாயிலாக விட்டமின் 'டி' கிடைக்கிறது. ஆனால், மொபைல்போன்களில் இருந்து வரும் நீல ஒளிகளால் ஏற்படும் பயன்கள், பாதிப்புகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை.
ஆனால், வயது தொடர்பான விழிப்புள்ளி சிதைவு, மயோபியா பிரச்னைகள், சர்க்கரை ரெட்டினோபதி ஆகியவை, இந்த ஒளிக்கதிரால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தடுப்பதற்கு பயன்படும் கண்ணாடிகள், தொழில்நுட்பம், புளூ பிளாக்கிங் எபக்ட்ஸ் எனப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

