PUBLISHED ON : ஜூலை 02, 2023

செரிமான மண்டலத்தை 'அல்ட்ரா சவுண்ட்' பரிசோதனை செய்யும் போது, பலருக்கு விரிவடைந்த மண்ணீரல், அதாவது 'என்லார்ஜ்டு ஸ்பிலீன்' இருப்பதாக வரும்.
ரத்த சிவப்பணுக்கள், தட்டணுக்கள், வெள்ளை அணுக்களை உருவாக்குவது, சேமிப்பது, நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குவது தான் மண்ணீரலின் பிரதான பணி. பழைய ரத்த சிவப்பணுக்களை மறுசுழற்சி செய்து, தேவையற்ற நுண்ணுயிரிகளை அழிப்பதும் மண்ணீரலின் வேலை. மொத்தத்தில், மண்ணீரல் என்பது ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற மூன்று பணிகளையும் செய்கிறது.
ரத்தத்தில் நோய் தொற்று ஏற்படுவது, சிவப்பணுக்கள் வழக்கத்தை விடவும் பெரிதாக அல்லது சிறிதாக இருப்பது உட்பட, ரத்தத்தில் எந்த விதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும் மண்ணீரல் விரிவடையும். நம் ஊரில் மது பழக்கத்தால் கல்லீரல் திசுக்கள் சிதைந்து, செயலிழக்கும் 'சிரோசிஸ்' பிரச்னை அதிகம். இதனால், கல்லீரலுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அதிகப்படியான ரத்தம் செல்லும். இந்த தாக்கத்தால் மண்ணீரல் விரிவடையலாம். சிலருக்கு பிறவியிலேயே மண்ணீரலின் அளவில் மாற்றம் இருக்கும். இதனாலும் விரிவடையலாம்.
சில நேரங்களில் விபத்தில் சிக்கி, மண்ணீரல் அடிபட்டால், அதை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வரலாம்.
அந்த நிலையில், எலும்பு, கல்லீரல் உட்பட உடலின் பிற உறுப்புகள், மண்ணீரலின் பணியை எடுத்துக் கொள்ளும். இது இயற்கையிலேயே அமைந்த அதிசயம். அதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அடிக்கடி கோபம், எரிச்சல் அடைபவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், மது, சிகரெட் பழக்கம் இருந்தாலும், பித்தம் அதிகமாவதும் மண்ணீரலை பாதிக்கும்.
பிரச்னையின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை இருக்கும். கீரை வகைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரி, முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைவிட்ட தானியங்கள், சின்ன வெங்காயம்.
கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் போன்றவை மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு தேவை. இவற்றில் உள்ள 'மெத்தியோனைன்' மண்ணீரலின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
டாக்டர் கபாலி நீலமேகம்
இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்,சென்னை 99625 99933

